நம்பிக்கை வாக்கெடுப்பில் லஞ்ச பேரமா? வீடியோ குறித்து விசாரணை கோருகிறது திமுக

  • 13 ஜூன் 2017

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரிடம் லஞ்ச பேரம் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை வேண்டும் என திமுக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளது.

படத்தின் காப்புரிமை Facebook: M.K.Stalin

அத்தோடு ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த, பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கையும் முன்னதாகவே விசாரிக்க வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளதாக அந்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவில், பொறுப்பில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசிய வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று வெளியாகியுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் இந்த விவகாரம் குறித்த செய்திகளை தமிழக ஊடகங்களும் தொடர்ந்து வெளியிட்டு வருவதாக கூறி, அதன் காரணமாக இந்த வழக்கை விரைவாக விசாரித்து உண்மை நிலையை வெளி கொண்டு வர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜீ மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த ஜூன் முதல் வாரத்திலிருந்து, புதிய பொது நல மனுக்கள் தொடர்பான விசாரணைகள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே விசாரிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினர்.

அதனால் அது தொடர்பான மனுவை முறையாக தாக்கல் செய்ய கூறிய அந்த அமர்வு, அது தொடர்பான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதியன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.கவின் செயல்தலைவரும், சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தாக்கல்செய்த மனு மீதான விசாரணை பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், "கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான ஆவணங்களை சபாநாயகரும் சட்டசபைச் செயலரும் திருத்தியுள்ளனர்" என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அது தவிர அவையில் உள்ள எந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களையும் வெளியேற்றாமல், புதிதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் தமிழக ஆளுனரின் செயலர், தலைமைச் செயலர், இந்திய தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த தலைமைத் தேர்தல் அதிகாரி மட்டத்திலான ஒரு அதிகாரி ஆகியோர் முன்னிலையில் இதனைச் செய்ய வேண்டுமென்றும் ஸ்டாலின் அதில் கோரியிருக்கிறார்.

இந்நிலையில் அதிமுக உறுப்பினர்களின் லஞ்ச பேரம் தொடர்பான பேச்சுக்களை உள்ளடக்கிய வீடியோ காட்சிகளை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டு வருவதால் இந்த வழக்கின் விசாரணை வேகப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

பிபிசியின் பிற செய்திகள்:

கல்விக் கூடங்களில் இஸ்லாமிய முகத் திரைக்கு தடை கொண்டுவருகிறது நார்வே

டிரம்ப்புக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது அமெரிக்க மாநிலம்

ஒமான் வழியாக கப்பல் போக்குவரத்தை தொடங்கியது கத்தார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்