கிரிமினல் விசாரணையில் டிரம்ப் தலையிட முயன்றாரா? விசாரணைக்கு உத்தரவு

  • 15 ஜூன் 2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நீதி வழங்கலில் தடைகளை ஏற்படுத்த முயன்றாரா என்பது குறித்து கிரிமினல் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ம்யூலெர் விசாரணையில் விடை கிடைக்குமா?

தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை பதவி நீக்கியது தொடர்பாக நடைபெற்ற, விசாரணை ஒன்றை முடிப்பதில் டிரம்ப் தலையிட்டாரா என்று மூத்த உளவுத் துறை அதிகாரிகளிடம் கருத்துக்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க சிறப்பு வழக்கறிஞர், ராபர்ட் ம்யூலெர், கடந்த வருடம் நடந்த அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டினை ஏற்கனவே விசாரித்து வருகிறார்.

ம்யூலெர் தனது விசாரணையை விரிவுபடுத்தி, அதிபர் டிரம்ப் தலையீடு குற்றச்சாட்டு பற்றியும் ஆராய உள்ளதாக பல அமெரிக்க பத்திரிகைகள் கூறுகின்றன.

எஃ ப்.பி.ஐ-ன் (அமெரிக்க ஃபெடரல் உளவுத் துறை) ரஷ்ய விசாரணையின் போக்கை மாற்றவே, எஃப்.பி.ஐ தலைவர் பதவியில் இருந்து ஜேம்ஸ் கோமியை டிரம்ப் நீக்கினாரா என்பதையும் ம்யூலெர் குழு விசாரிக்க உள்ளது.

இந்த மிகச் சமீபத்திய நடவடிக்கைக்கு, டிரம்பின் வழக்கறிஞரின் செய்தித் தொடர்பாளரிடம் இருந்து கடும் விமர்சனங்கள் வந்துள்ளன.

அதிபர் பற்றிய தகவல்களை எஃப்.பி.ஐ கசிய விடுவது மோசமானது, சட்டவிரோதமானது என மார்க் கரோலோ கூறியுள்ளார்.

ரஷ்யாவோடு எந்த ஒரு ரகசியத் தொடர்பும் இல்லை என தொடர்ந்து மறுத்துவரும் அதிபர் டிரம்ப், தற்போது நடைபெற்று வருகின்ற விசாரணையை “சூனிய வேட்டை” என்று விமர்சித்துள்ளார்.

இந்த சமீபத்திய செய்தியை, முதலில் “வாஷிங்டன் போஸ்ட்” வெளியிட்டது. பின்னர் ‘நியூயார்க் டைம்ஸ்‘ மற்றும் ‘வால் ஸ்ட்ரீட்‘ இரண்டும் தங்களின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டன.

அதிபர் டிரம்பின் நடத்தையை ஆய்வு செய்ய ம்யூலெர் முடிவு செய்திருப்பது, இதுவரை ரஷ்யாவின் மீது கவனம் அளிக்கப்பட்டு வந்த விசாரணையில் மிக முக்கிய திரும்பம் என்று “வாஷிங்டன் போஸ்ட்” தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

தீயிலிருந்து காப்பாற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்

''பெண்கள் குண்டாக இருந்தால் குற்றமல்ல''

கானல் நீரானதா காவிரி நீர்? கைவிட வேண்டுமா குறுவை சாகுபடியை?

தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்