அமெரிக்காவிடமிருந்து 12 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை வாங்கும் கத்தார்

  • 15 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவிடமிருந்து எஃப் - 15 ஜெட் ரக போர் விமானங்களை வாங்க சுமார் 12 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றில் கத்தார் கையெழுத்திட்டுள்ளது.

வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைவர் ஜிம் மேட்டிஸ் மற்றும் கத்தார் பாதுகாப்புத்துறை தலைவர் இடையே நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவின் பெரிய நட்பு நாடான கத்தார் மீது சில தினங்களுக்குமுன் அதிபர் டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய அளவில் கத்தார் நிதியுதவி அளிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு சில தினங்களுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.

கத்தார் குறித்த பிற செய்திகள் :

தீவிரவாத குழுக்களுக்கு கத்தார் ஆதரவாக இருப்பதாகவும் மற்றும் இரானுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவை பிராந்தியத்தை சீர்குலைப்பதாகவும் கூறி கத்தாருடனான ராஜிய உறவுகளை பிற வளைகுடா நாடுகள் சமீபத்தில் துண்டித்துக் கொண்டன.

மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிகப்பெரிய அமெரிக்க விமான தளம் கத்தாரில் உள்ள அல்-உடெய்டில் அமைந்துள்ளது. சுமார், பத்தாயிரம் படையினரை கொண்டுள்ள அந்த தளம் சிரியா மற்றும் இராக்கில் உள்ள இஸ்லாமிய அரசு என அழைத்துக் கொள்ளும் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கைக்கு முக்கிய அங்கம் வகிக்கிறது.

அதிபர் டிரம்பின் கருத்துடன் முரண்படும் வகையில், பிராந்திய பாதுகாப்பிற்கு நீடித்த அர்ப்பணிப்புடன் கத்தார் செயல்படுவதாக சில தினங்களுக்குமுன் அமெரிக்க பாதுகாப்புத்துறை பாராட்டியிருந்தது

''போர் விமானங்களை வாங்கும் இந்த ஒப்பந்தம் அமெரிக்க அரசாங்கம் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆனால் இந்த உறவை நாங்கள் சந்தேகிக்கவில்லை,'' என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கத்தார் நாட்டை சேர்ந்த அதிகாரி ஒருவர் பேட்டியளித்துள்ளார்.

36 எஃப் - 15 ஜெட் ரக போர் விமானங்களை கத்தார் வாங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் ராய்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

கத்தார் குறித்த பிற செய்திகள் :

100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்புடைய ஆயுதங்களை செளதிக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக் கொண்டதற்கு சில வாரங்களுக்குப் பிறகு அமெரிக்கா - கத்தார் இடையே இந்த ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது.

அமெரிக்கா - கத்தார் இடையிலான இந்த ஒப்பந்தம், வளைகுடா நாடுகள் கத்தாருக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் புறக்கணிப்பு நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.

பிற செய்திகள் :

லண்டன் தீ: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு

தமிழக விவசாய பல்கலைக்கழக சேர்க்கையில் வெற்றிபெற்ற பழங்குடி பெண்

நிலவில் உருளைக்கிழங்கு பயிரிட முடியுமா? - சீனா முயல்கிறது

கிரிமினல் விசாரணையில் டிரம்ப் தலையிட முயன்றாரா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்