ஐ.எஸ் குழுவின் தலைவர் பாக்தாதி 'ரஷ்யாவால் கொல்லப்பட்டிருக்கலாம்'

  • 16 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை Reuters
Image caption 2014 இல் அபு பக்ர் அல்- பாக்தாதி உரையாற்றுகிறார்

சிரியாவில் ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதல் ஒன்றில், ஐ.எஸ் தீவிரவாதக்குழுவின் தலைவர் கொல்லப்பட்டாரா என்பது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில், பாக்தாதியும், கிட்டத்தட்ட 330 போராளிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

சிரியாவின் வடபகுதியில், ஐ.எஸ் தீவிரவாதக் குழுவின் தலைநகராக விளங்கிய ராக்காவில், அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த ஐ.எஸ் அமைப்பின் கவுன்சில் கூட்டத்தை இலக்கு வைத்து விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது.

பாக்தாதி இறந்துவிட்டார் என்று இதற்கு முன்பே பல செய்திகள் வெளியாகியிருந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

பாக்தாதி கொல்லப்பட்டதை அமெரிக்காவால் உறுதிபடுத்த முடியவில்லை என்று, அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஜான் டோரியான் கூறுகிறார்.

பாக்தாதி கொல்லப்பட்டது தொடர்பாக எந்தவித அதிகாரபூர்வ கருத்தையும் சிரியா அரசு தெரிவிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை RUSSIA DEFENCE MINISTRY
Image caption வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு முன்பும், பின்பும் செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்ட ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம்

ராக்காவில் நடைபெற்ற ஐ.எஸ் குழுவினரின் கூட்டத்தில் 30 ஐ.எஸ் தளபதிகளும் சுமார் 300 படையினரும் இருந்ததாக, ரஷ்ய அரசின் நிதியுதவி பெறும் ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

"ஐ.எஸ் கவுன்சில் கூட்டம் நடந்த இடத்தை இலக்கு வைத்து விமானத் தாக்குதல் நடைபெற்றபோது, பக்தாதியும் அங்கு இருந்ததை பல்வேறு தரப்பினரிடம் உறுதி செய்துவிட்டதாக" அந்த அறிக்கை கூறுகிறது.

பாக்தாதியின் இருப்பிடம் குறித்து சில காலமாக தகவல்கள் எதுவுமில்லை என்றபோதிலும், 2016 அக்டோபரில், மொசூலை மீட்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப்படைகள் மொசூல் மீது தாக்குதலை தொடங்கியபோது, அவர் அங்கிருந்தார் என்று நம்பப்படுகிறது.

பாக்தாதி, சமீபகாலங்களில் மொசூல் அல்லது ராக்காவில் இருப்பதைவிட "ஆயிரக்கணக்கான சதுர மைல்கள் பரப்பளவில் உள்ள பாலைவனப்பகுதியில் மறைந்திருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்" என ராய்டர்ஸ் செய்திகள் கூறுகின்றன.

இஸ்லாமிய அரசு என்ற அமைப்பு பிரபலமானதிலிருந்து, பிறகு பாக்தாதி ,ஒரே ஒரு முறைதான் பொது வெளியில் தோன்றியிருக்கிறார். அந்த அமைப்பினர் மொசூல் நகரை கைப்பற்றியபிறகு, 2014 ஜூன் மாதம் வெளியிட்ட வீடியோப் பதிவு ஒன்றில் அவர் உரையாற்றினார்.

அதன்பிறகு, ஐ.எஸ் அமைப்பு அந்தப் பிராந்தியத்தில் தங்கள் வசமிருந்த பகுதியில் கணிசமான அளவை இழந்தது. ரஷ்யா ஆதரவிலான படைகள், அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவுப் படைகளின் விமானத் தாக்குதல் மூலம் ஐ.எஸ் அமைப்பு பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.

பாக்தாதியின் பிரதிநிதிகள் அனைவரும் "ஏறக்குறைய கொல்லப்பட்டுவிட்டதாக" அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கடந்த மார்ச் மாதத்தில் தெரிவித்தார்.

"இன்னும் சில நாட்களில் பாக்தாதியின் கதியும் இதுதான்" என்று அவர் மேலும் கூறினார்.

யார் இந்த பாக்தாதி?

படத்தின் காப்புரிமை AFP
Image caption 2014, ஜனவரியில் பாக்தாதியின் புகைபடத்தை இராக் உள்துறை அமைச்சகம் வெளியிட்டது
  • 1971இல் பாக்தாத்திற்கு வடக்கே சமாராவில் பிறந்த பாக்தாதியின் என்பது அவரது இயற்பெயரல்ல , போருக்காக அவர் வைத்துக்கொண்ட பெயர் என்று கருதப்படுகிறது.
  • 2003 இல் இராக் மீது, அமெரிக்கா படையெடுத்தபோது, பாக்தாதி அங்கிருந்த மசூதி ஒன்றில் மதகுருவாக இருந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • சதாம் ஹூசைனின் ஆட்சிக் காலத்திலேயே பாக்தாதி ஒரு தீவிரவாத ஜிகாதியாக இருந்தார் என்றும் சிலர் கருதுகின்றார்கள். இராக்கின் தெற்குப்பகுதியில் பல்வேறு அல்-கயீதா தலைவர்கள் பிடித்துவைக்கப்பட்டிருந்த புக்கா முகாமில், பாக்தாதியும் நான்கு ஆண்டுகள் பிடித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அப்போதுதான் அவர் தீவிரவாத சிந்தனைகளுக்கு உட்பட்டதாகவும் வேறு சிலர் கூறுகின்றனர்.
  • பாக்தாதியை பற்றின கருத்துக்கள் பல்வேறு விதமானதாக இருந்தாலும், இராக்கில் அல்-கயீதா அமைப்பின் தலைவராக பாக்தாதி உருவானார் என்பது நிதர்சனமான உண்மை.
  • 2010 இல், ஐ.எஸ் உருவானபோது, அதில் இணைந்த பல குழுக்களில் இராக்கிய அல் கயீதாவும் ஒன்று.
  • பாக்தாதியை "பயங்கரவாதி" என்று அமெரிக்கா, 2011 அக்டோபர் மாதம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
  • பாக்தாதியை பிடிக்கவோ, கொல்லவதற்கோ உதவும் தகவல்களை தெரிவிப்போருக்கு $25 மிலியன் பரிசுத்தொகையையும் அமெரிக்கா அறிவித்தது.
  • பிராந்தியத்தின் ஏராளமான பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ் அமைப்பு, இராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொசூல் நகரை 2014 ஜூன் மாதத்தில் கைப்பற்றியது. 2015 நவம்பரில் பாரிஸ் தாக்குதல் உட்பட மேற்கத்திய நகரங்களில் பல கொடிய தாக்குதல்களையும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு நடத்தியிருக்கிறது.

பிற செய்திகள் :

'26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்'

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்களின் திகில் நினைவுகள்!

பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார் கடாஃபியின் மகன்

ஐ எஸ் அமைப்பின் தலைவரை இலக்கு வைத்து தாக்குதல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்