பெண்களின் மார்பைத் தொடுவதற்காக தந்திர வித்தைக்காரராக காட்டிக்கொண்டவரால் சர்ச்சை

படத்தின் காப்புரிமை THE COVER/MIAOPAI

சீனாவில் பெண்களின் மார்பகங்களை தொடுவதற்காக தன்னை ஒரு தெரு தந்திர வித்தைக்காரர் போல காட்டிக் கொண்ட தனது காணொளியை, வலைப்பூ பதிவர் ஒருவர் பதிவேற்றியதை அடுத்து அந்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை அவர் கிளப்பியுள்ளார்.

தன்னை ''க்ரிஸ்'' என அழைத்துக் கொள்ளும் அந்த நபர், செங்டு நகரின் மையத்தில் இளம் பெண்களை அணுகுவது போன்று காட்டப்படுகிறார். பின், அவர்களிடம் நாணயம் மூலம் வித்தை ஒன்றை காட்டலாமா என கேட்கிறார்.

அவர் பேசி கொண்டிருக்க அருகே நிற்கும் பெண்கள் மிகவும் இயல்பாக இருப்பதைப் போன்று தோன்றுகிறது. பின்னர், நாணயத்தை எடுத்து பெண்களின் மார்பில் வைத்து அழுத்துகிறார். தொடர்ந்து, மார்பை அழுத்துகிறார்.

உள்ளூர் ஊடகத்திடம் பேசிய கடை உரிமையாளர் ஒருவர், இணையத்தில் இந்த காணொளிகளை கண்டவுடன் போலீஸரை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அரசு செய்தி நிறுவனமான தி கவர், ஷு என்ற குடும்ப பெயரை கொண்ட ஷாங்காயை சேர்ந்த ஒரு காணொளி வலைப்பூ பதிவர் என ஊடகங்களில் அடையாளம் காணப்பட்ட நபரை போலீஸார் கண்டுபிடித்துவிட்டதாகவும், விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அந்த நபரால் பெண்கள் அணுகப்பட்டிருந்தால் தாங்களாக முன்வர வேண்டும் என்று போலீஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை MIAOPAI
Image caption தன்னை ''க்ரிஸ்'' என அழைத்து கொள்ளும் அந்த நபர், செங்டு நகரின் மையத்தில் இளம் பெண்களை அணுகுவது போன்ற காட்டப்படுகிறார்.

யார் இந்த தந்திர வித்தைக்காரர் ?

சினா வெய்போ என்ற சமூக வலைத்தளத்தில் இந்த வலைப்பூ பதிவருக்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின் தொடர்வோர் இருக்கின்றனர். அதில், தன்னை இணைய குறும்புக்காரர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து, தெருக்களில் செல்லும் பெண்களை நிறுத்தி அவர்களிடம் எடக்குமடக்காக தனிப்பட்ட கேள்விகளை கேட்பது போன்று தோன்றும் காணொளிகளை பதிவேற்றி வருகிறார்.

ஒரு காணொளியில், பெண்களிடம், மாதவிடாய் காலத்தில் வெளியேறும் கழிவுகளை உறிஞ்சும் டாம்பன் என்ற மென்மையான பொருளை பயன்படுத்துகிறீர்களா என்றும், உங்களுடன் ஒரு இரவைக் கழிக்கலாமா என்றும் கேட்கிறார். பின், அவர்களின் எதிர்வினையை கேமராவில் பதிவு செய்கிறார்.

சமீப காணொளிகளில் அவருடைய நடவடிக்கை அதிக அளவில் அறுவறுப்பு ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த காணொளியில் இடம்பெற்ற பெண்களின் முகங்கள் மறைக்கப்படவில்லை மேலும் பெரும்பாலான காணொளிகள் திறந்த பொதுவெளிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை SINA WEIBO
Image caption ஷு பதிவேற்றிய காணொளிகளுக்கு இணைய பயன்பாட்டாளர்கள் கோபத்துடன் எதிர்வினையற்றியுள்ளனர்.

'ஏன் அமைதியாக இருக்கிறார்கள் ?'

பெண்களின் மார்பகங்களை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடும் வித்தைக்காரர் ஷு குறித்த காணொளி தொகுப்பை தி கவர் இணையதளம் வெளியிட்டிருந்தது. இதுவரை சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அக்காணொளி ஈர்த்துள்ளது.

ஆயிரக்கணக்கான இணைய பயன்பாட்டாளர்கள் #StreetMagicianMakesNameTouchingBreasts மற்றும் #MagicMaleAnchorTouchesChests போன்ற ஹாஷ்டேக்குகள் மூலம் சினா வெய்போவில் பிரச்சனையை விவாத களத்திற்கு எடுத்து சென்றனர். ஷூவின் செய்கைக்கு பலர் கோபத்துடன் கருத்துத் தெரிவித்துள்ளனர். அவரை அழுக்கு என்றும், நடத்தை கெட்டவர் என்றும் கடிந்துள்ளனர்.

''இந்தக் காணொளியில் வந்த எல்லா பெண்களும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?'' என்று Rome_Roma என்ற பயன்பாட்டாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

படத்தின் காப்புரிமை MEIPAI
Image caption மன்னிப்பு கோரும் ஷூ

கடந்த வியாழனன்று, ஷு மெய்பாய் என்ற தளத்தில் வெளியான காணொளியில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

ஆனால், பல இணைய பயன்பாட்டாளர்கள், வெறும் மன்னிப்பு மட்டும் போதாது என்றும், சிலர் ஷுவிற்கு குற்றவியல் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

பொது இடத்தில் அநாகரிக முறையில் நடந்து கொண்டால் சீன சட்டத்தின்படி அதிகபட்சமாக ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற சட்ட விதியை பயன்பாட்டாளர் ஒருவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்