விபத்தில் சிக்கிய அமெரிக்க கடற்படை கப்பல் குழுவினரின் உடல்கள் மீட்பு

  • 18 ஜூன் 2017

ஜப்பான் கடற்கரையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ஃபிட்ஸ்ஜெரல்ட் கப்பல், சரக்கு கப்பல் ஒன்றுடன் மோதியதில் பலியான சிப்பாய்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை மற்றும் ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை REUTERS

இந்தச் சம்பவம் சனிக்கிழமையன்று நடைபெற்றது; காயமடைந்த மூன்று குழுவினர் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டதை தொடர்ந்து காணாமல் போன மாலுமிகளை தேடும் பணி தொடங்கியது.

சேதமடைந்த கப்பலின் பகுதிக்குச் செல்ல அனுமதி கிடைத்த பிறகு ஞாயிறன்று, மீட்புப் பணியாளர்கள் உடல்களை கண்டுபிடித்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

உடல்கள் அடையாளம் காணுவதற்காக ஜப்பான் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமையன்று இரவு 2:30 மணிக்கு ஜப்பானிய துறைமுகமான யோகோசூகவின் தென் மேற்கு பகுதியிலிருந்து 56 கடல் மைல் தூரத்தில் நடந்துள்ளது.

மோதலில் அந்த கடற்படை கப்பலின் வலது புறம் மிக அதிகமாக சேதமடைந்தது. பின்பு அமெரிக்க படங்குகளின் உதவியோடு மெதுவாக அந்த கப்பல் யோகோசூகவிற்கு வந்தடைந்தது.

ஞாயிறன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 7வது கடற்படை தளபதி துணை அட்மிரல், இதுவரை எத்தனை உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாக சொல்ல இயலாது எனவும், மாலுமிகளின் குடும்பங்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

கடல் போக்குவரத்து பதிவின்படி, பிலிப்பின்ஸ் நாட்டு கொடியை ஏந்திய `எசிஎக்ஸ் கிரிஸ்டல்` என்ற அந்த 730அடி சரக்கு கப்பல், மோதல் நடைபெறுவதற்கு 25 நிமிடங்களுக்கு முன்னர் தீடிரென்று வந்த பாதைக்கே மீண்டும் திரும்பியுள்ளது. ஆனால் கப்பல் ஏன் பாதையை மாற்றியது என தெரியவில்லை.

இம்மாதிரியாக அமெரிக்க ஃபிட்ஸ்ஜெரல்ட் கப்பலின் பாதை வெளிப்படையாக தெரியவில்லை.

நடு இரவில் நடைபெற்ற அந்த மோதலில், குழுவினர் தூங்கிக் கொண்டிருந்த பகுதியில் தண்ணீர் புகுந்துவிட்டதாக ஜப்பான் அரசு செய்தி ஊடகமான என்எச்கெ தெரிவித்துள்ளது

இது குறித்து தாங்கள் அனைவரும் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும், இந்த சேதம் மிகவும் அதிகமானது, கடலுக்கு அடியில் பெரும் கழிவுகள் உள்ளன அதனை சரி செய்ய சில நாட்கள் பிடிக்கும் என்றும் 7வது கடற்படை தளபதி துணை அட்மிரல் தெரிவித்தார்.

`எசிஎக்ஸ் க்ரிஸ்டெல்` என்ற அந்த கப்பல் அமெரிக்க ஃபிட்ஸ்ஜெரல்டால் கப்பலைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான எடையைச் சுமந்து செல்லக்கூடிய கப்பலாகும். அதன் எடைதிறன் 30,000க்கும் சற்று குறைவானதாகும்.

கப்பலின் முன் பகுதியில் சற்று குறைவான சேதமே அடைந்துள்ளது.

சரக்கு கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டு மாலுமிகள் 20 பேருக்கு காயங்கள் எதுவும் இல்லை என அசோசியேடட் பிரஸ் முகமை தெரிவித்துள்ளது.

பிபிசியின் பிற செய்திகள்:

`கோடி’ வாக்குறுதியை நிறைவேற்ற ரஜினியிடம் அய்யாக்கண்ணு கோரிக்கை

கஜுராஹோ கோயிலில் காமசூத்ரா விற்க தடை கோரும் இந்து அமைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இறுதி மோதல்: பற்றிக் கொண்டது பரபரப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்