டிரம்பின் எல்லைச்சுவர் திட்டத்தால் நெருக்குதலை சந்திக்கும் அரியவகை வனவிலங்குகள்!

  • 26 ஜூன் 2017
Image caption சர்வதேச எல்லை அருகே ஆர்கன் பைப் காக்டஸ் தேசிய நினைவுச்சின்னம் உள்ளது.

அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பும் அதிபர் டொனால்ட் டிரம்பின் வாக்குறுதி இன்றுவரை அவருடைய ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்ட மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். ஆனால், அரிசோனா பல்கலைக்கழக்கத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், இருநாடுகளின் எல்லைக்கோட்டில் இருக்கும் பாலைவனம் ஒன்றின் சுற்றுச்சூழல் இந்த எல்லைச்சுவரால் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற ஆராய்ச்சியை ஆரம்பித்துள்ளனர்.

சோனோரன் பாலைவனத்தில் உள்ள வன உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டு வருகிறது. அரிசோனாவிலிருந்து ஆரம்பித்து மெக்ஸிகோ வரை இப்பாலைவனம் நீண்டுள்ளது. ஏற்கனவே எல்லைப்பகுதியில் ஒரு தடுப்பால் பாலைவனம் பிரிந்துள்து என்பது குறிப்பிடத்தக்கது.

பிபிசியின் அறிவியல் செய்தியாளர் விக்டோரியா ஜில், பாலைவனத்தில் மிகவும் அருகிவரும் மிருகங்களை தேடும் பணியில் ஈடுபட உள்ள ஆராய்ச்சி குழுவினருடன் இணைந்துள்ளார்.

Image caption ஆண்ட்ரூ மற்றும் ஸ்டெஃப்பனி தாங்கள் ஆராய்ச்சி செய்யும் வனவிலங்குகளை பலமணி நேரமாக தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நீண்ட உயரமான சகாரோ கற்றாழை நிறைந்த காடுகள் கம்பீரமாக நின்று கொண்டிருப்பதை போன்ற தோற்றமளிக்கின்றன. இந்த வகை தாவரங்கள் சுமார் 20 மீட்டர் உயரம் வரை வளருமாம்.

நாங்கள், அருகிவரும் இனமான சோனோரன் வனப்பகுதியின் பிரோங் ஹார்ன் எனப்படும் கவைக் கொம்பு மான் இனத்தை தேட உள்ளோம்.

''சுமார் 2 மில்லியன் ஏக்கர் கொண்ட பரப்பளவில் வெறும் 228 மான்கள் மட்டுமே இருக்கின்றன. அதனால் அவற்றை கண்டுபிடிக்க மலை உச்சிக்கு சென்றால்தான் அவற்றை காண முடியும் என்பது சற்று சிரமமான விஷயம்,'' என்கிறார் முனைவர் பட்டம் படிக்கும் மாணவியான ஸ்டெஃபனி.

Image caption இந்த காட்டுப்பகுதியில் மனித நடமாட்டம் என்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.

சோனோரன் பிரோங்ஹார்ன் வட அமெரிக்க கண்டத்தில் மிகவும் தனித்தன்மை வாய்ந்த கவைக் கொம்பு மான்களாகும். வட அமெரிக்கா முழுவதும் அவை காணப்படுகின்றன. ஆனால், சோனோரன் இனத்தின் உட்கிளை உயிரினங்கள் இந்த பாலைவனத்தில் மட்டும்தான் வாழ்கின்றன.

சோனோரன் கவைக்கொம்பு மான்களின் பரிணாம இனம் தற்போது அழிந்து போன அமெரிக்க சிறுத்தைப்புலியோடு ஒப்பிடும் போது, கண்டத்திலேயே நிலத்தில் அவை இரண்டும்தான் மிகவும் வேகமான விலங்குகள் என்று சொல்ல முடியும்.

படத்தின் காப்புரிமை STEPHANIE DOERRIES
Image caption அமெரிக்காவில் வெறும் 228 சோனோரன் பிரோங்ஹோர்ன்கள் மட்டுமே இருக்கின்றன.

நீண்டதூரம் மற்றும் வேகமாக பயணிக்கவும் திறன் கொண்டது. ஒவ்வொரு தனிப்பட்ட சோனோரன் கவைக்கொம்பு மானும் சுமார் 2,800 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பிரம்மாண்டமான சுற்றளவில் சென்று வாழ்ந்து வரக்கூடியது.

தற்போது அவைகளின் குறைவான எண்ணிக்கை மற்றும் அதன் எல்லை கடந்த வாழ்விடம் ஆகிய காரணங்கத, அதிபர் டிரம்ப் கொடுத்திருந்த 'யாரும் தாண்ட முடியாத' எல்லை சுவர் திட்டத்தால் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்டெஃபனி மற்றும் ஆண்ட்ரூவின் டிராக்கர்கள் பிரோங்ஹோர்னின் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் ரேடியோ கருவியை கண்டறிந்து எச்சரிக்கை சமிக்ஞை செய்தது.

Image caption கழுத்தில் ரேடியோ கருவி பொருத்தப்பட்ட கவைக்கொம்பு மான்களைக் கண்டுபிடிக்க தனது டிரக்கை பயன்படுத்தும் ஸ்டெஃபனி.

கவைக்கொம்பு மான்களைக் கண்டவுடன் ஸ்டெஃபனி கவனமாக குறிப்புகளை எடுக்க தொடங்குகிறார். அந்த பெண் கவைக்கொம்பு மான் நின்று கொண்டிருக்கிறதா அல்லது படுத்து கொண்டிருக்கிறதா ? எந்த திசையை நோக்கி நகர்கிறது ? போன்றவைகளை ஸ்டெஃப்பனி குறித்து கொள்கிறார்.

இன்னும் பல தகவல்களை ஸ்டெஃபனி சேகரிக்க வேண்டும். மனிதர்களால் ஏற்படுத்தப்படும் இடையூறுகளை இயற்கையாக ஏற்படும் தொந்தரவுகளை காட்டிலும் அவை எதிர்வினையாற்றும் முறை வித்தியாசமாக இருக்கிறது என்பதை முதற்கட்ட தகவலில் ஸ்டெஃபனி கண்டறிந்துள்ளார்.

Image caption இந்த தடைகள் வாகனங்கள் உள்ளே செல்வதை தடுக்கும் வகையிலும், வனவிலங்குகள் தாண்டி செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க எல்லைப்பகுதியை கண்காணிக்கும் டிரக்குகள் தொடர்ந்து ரோந்துப் பணியை இங்கு மேற்கொள்ளும். எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியை கண்காணிப்பார்கள். மேலும், பிரம்மாண்ட டயர்களை தங்களுடைய ரோந்து வாகனங்களில் கட்டி இழுத்துச் செல்வார்கள். வண்டியின் சக்கர தடயத்தை அழிப்பது மட்டுமின்றி எல்லை தாண்டுபவர்களின் கால் தடங்களை கண்டுபிடிப்பதற்கும் இது உதவும்.

பிரிக்கப்பட்ட பாலைவனம்

சோனோரன் கவைக்கொம்பு மான்கள் வசிக்கும் பகுதியை சரியாக பிரிக்கும் கட்டுமானம் ஒன்றுதான் மிகவும் வெளிப்படையான மனித இடையூறாக இருக்கிறது. இது சர்வதேச எல்லையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் சார்ந்த தடையாகும்.

சர்வதேச எல்லைப்பகுதியில் சுமார் 50 கி.மீட்டர்களை உள்ளடக்கிய பகுதியாக ஆர்கன் பைப் கேக்டஸ் தேசிய நினைவுச்சின்னத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

Image caption காதில் டேக் மாட்டப்பட்டுள்ள கவைக்கொம்பு மான்கள் சரணாலயங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவை என்பதை குறிக்கிறது.

அமெரிக்காவிற்குள் நுழைய அதிகாரப்பூர்வ எல்லை கடக்கும் பகுதியான லூக்வில்லியில் உள்ள சிறிய நுழைவு எல்லையின் இரு பக்கங்களிலும் உயரிய பாதசாரி வேலி அமைக்கப்பட்டுள்ளது.. சுமார் 7 மீட்டர் உயரமும், 8 கி.மீட்டர் நீளமும்கொண்டது அது.

''பிரோங்ஹோர்ன் இன்னும் இந்த எல்லைப்பகுதியை கடக்க முயற்சிக்கும், ஆனால் இந்தப் பகுதியில் உள்ள தடை பெரும்பகுதியான கவைக்கொம்பு மான் கூட்டம், தங்களுக்குத் தேவையான பரந்த அளவில் வாழ்வதற்கான வழியை இது தடுக்கிறது.'' என்கிறார் ஸ்டெஃப்பனியின் மேற்பார்வையாளரும் மற்றும் பிரோங்ஹார்ன் ஆய்வில் முக்கிய தலைமை ஆராய்ச்சியாளருமான அரிசோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவ் கிரிஸ்டியன்சன் கூறுகிறார்.

Image caption இந்த பிரதேசத்தில் வளரும் காக்டஸ் எனப்படும் காட்டு கற்றாழையிலிருந்து, ஆர்கன் பைப் காக்டஸ் தேசிய நினைவுச்சின்னம் என பெயர் பெற்றது.

மெக்ஸிகோ விலங்குகள் இறக்குமதி

ஆபத்துக்குள்ளாகிவரும் சோனோரன் கவைக்கொம்பு மான்களின் பாதுகாப்பிற்காக கடந்த ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக அமெரிக்க அரசாங்கம் அதிக நிதியை செலவழித்துள்ளது.

அருகேயுள்ள கபீஸா பிரீட்டா தேசிய வனவிலங்கு மீட்பு நிலையத்தில், அமெரிக்கா மீன்கள் மற்றும் வனவிலங்கு சேவை இனப்பெருக்க திட்டம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த மீட்பு நிலையம் விலங்குகளுக்கான பாலைவன மத்தியில் உள்ள மிகப்பெரிய சரணாலயமாகும்.

ஒரு பேரழிவை ஏற்படுத்திய வறட்சியை தொடர்ந்து அமெரிக்க சோனோரன் கவைக்கொம்பு மான்களின் எண்ணிக்கை வெறும் 21 ஆக குறைந்ததையடுத்து இந்த சரணாலயம் கட்டப்பட்டது.

இத்திட்டத்திற்காக சரணாலயத்திற்கு எல்லை தாண்டி மெக்ஸிகோவிலிருந்து விலங்குகள் கொண்டுவரப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த கவைக்கொம்பு மான்கள், சரணலாயத்திலிருந்து வெளியில் அனுப்பப்பட்டு காட்டில் உள்ள கூட்டத்திடையே அனுப்பி அதன் எண்ணிக்கையை நிலைத்திருக்க உதவியாக இருக்கிறது.

இந்த ஜனவரி மாதத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட செயலாணை உத்தரவில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, வனவிலங்குகளுக்கு எளிதாக உள்ள எல்லைக்கு பதிலாக, யாரும் கடக்க முடியாத நிரந்தரத் தடையை ஏற்படுத்தும் திட்டம், அந்த வனவிலங்கு இனத்தை முற்றிலும் தடுத்து நிறுத்திவிடும் என்று எச்சரிக்கிறார் டேவ்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்