மலேசிய நெடுஞ்சாலையில் கொல்லப்பட்ட குட்டி யானை: வாகன ஓட்டுநரின் கவனக்குறைவா?

  • 21 ஜூன் 2017

மலேசிய நெடுஞ்சாலை ஒன்றில் வாகனம் மோதி குட்டி யானையொன்று கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இறந்த குட்டி யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை ALICIA SOLANA MENA/ MEME

"இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கக் கூடியவை அல்ல" என இந்த சம்பவம் குறித்து இறந்த குட்டி யானையின் உடலை கண்டெடுத்த அரசு வன பூங்கா அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவது அதிகரித்துள்ளதால், வட கிழக்கு கெலன்டன் மாநிலத்தை, மலேசியாவின் எஞ்சிய பகுதிகளுடன் இணைக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலைக்கு அருகில் வரும் நிலைக்கு யானைகள் தள்ளப்படுகின்றன." என சுற்றுச்சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும்போது ஓட்டுநர்கள் "மிக கவனமாக இருக்க வேண்டும்" என மலேசிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வாகன ஓட்டிகள் அறிந்து கொள்வதற்காக "யானைகள் சாலையை கடக்கும் பகுதி" என்பதனை குறிக்கும் அடையாளப் பதாகைகளை நெடுஞ்சாலை பாதை முழுவதும் ஏற்கனவே நிறுவியுள்ளோம் என பெராக் மாநிலத்தின் வன உயிர் மற்றும் தேசிய பூங்காக்களின் இயக்குனரான லூ கீன் சியோங் தெரிவித்துள்ளார்.

"எனவே வாகன ஓட்டிகள் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் வாகனத்தை கவனத்துடன் இயக்க வேண்டும்." என்று லூ கீன் சியோங் மேலும் தெரிவித்துள்ளார்.

குறைந்த வேக வரம்புகள் மற்றும் அதிக கண்காணிப்பு

கோலாலம்பூரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவான மலேசிய யானைகள் தொடர்பான மேலாண்மை மற்றும் சூழலியல் குழு, குட்டி யானை கொல்லப்பட்ட விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

" குட்டி யானை மிக விரைவாக உயிரிழந்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம். குட்டி யானையின் தலையில் வாகனம் பலமாக மோதியுள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு நாங்கள் வந்த போது, இறந்த யானை குட்டியின் குடும்பம் அங்கு இல்லை." என அந்த குழுவை சேர்ந்த அஹிம்சா கேம்போஸ் அர்சீஸ் தெரிவித்தார்.

2010 முதல் 2014-ஆம் ஆண்டு வரை, இதே வனப் பகுதியில் வேறு சில யானைகள் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் பிபிசியிடம் குறிப்பிட்டார்.

"ஏற்கனவே தங்கள் காடுகளின் பெரும்பகுதியை இழந்துவிட்டதால், புற்கள், மூங்கில்,பனை மரங்கள் போன்ற உணவுகளை தேடி காட்டு யானைகள் சாலைகளுக்கு வருகின்றன. மேலும், சாலைகளில் அதிக நேரத்தை யானைகள் செலவிடுகின்றன." என அஹிம்சா கேம்போஸ் அர்சீஸ் கூறுகிறார்.

குறைந்த வேகக் கட்டுப்பாட்டு வரம்பு அமல்படுத்தப்பட வேண்டும் எனவும், அதிக சாலை விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption 'யானைகள் தங்கள் வாழ்விடங்களை இழந்து வருகின்றன'

''மலேசியா வளர்ச்சியடைந்து வந்தாலும் , சிலவற்றில் சமரசம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும். குறிப்பாக இந்த நிலப்பரப்பு தென் கிழக்கு ஆசியாவின் முக்கியமான காடுகளில் ஒன்றாக இருக்கிறது. யானைகள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதும் அவசியம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் வெளிப்பட்ட கோபம்

குட்டி யானை கொல்லப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காடுகள் அழிக்கப்படுவதால் மனிதர்களின் வாழ்விடங்களுக்கு வன விலங்குகள் வருவது குறித்து பல மலேசியர்கள் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர் .

''உலகின் ஒரு முக்கிய வனப்பகுதியாக மலேசியா விளங்கும் நிலையில், இவ்வாறுதான் நமது வனஉயிர்களை நடத்துகிறோம்'' என்று தெரிவித்த கெண்ட் சுவா, மேலும் கூறுகையில், "வளர்ச்சி என்ற பெயரில் யானைகள் தங்கள் வாழ்விடங்களை இழந்து வருவது மட்டுமல்லாமல், அதற்கு விலையாக தங்கள் உயிரையும் இழந்து வருகின்றன" என்று மேலும் தெரிவித்தார்.

அதே சமயம் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மீதும் சிலர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர் .

''மெதுவாக செல்வது தொடர்பான அடையாளப் பதாகைகளை பார்த்தவுடன், அந்த இடத்தில் மெதுவாக செல்லுங்கள்.இது மிகவும் எளிய வேலை. இப்போதும் இது யானைகளின் வீடுதான். அதனை நாம் மதிக்க வேண்டும் ." என ஜுனி நியா தெரிவித்தார்.

" இவ்வளவு பெரிய உயிரினத்தை பார்க்க ஒருவர் எப்படி தவறுகிறார் என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும்." என மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒருவர், சம்பவத்துக்கு காரணமான வாகன ஓட்டுநர் குடிபோதையிலோ அல்லது வேகமாகவோ தனது வாகனத்தை இயக்கி இருக்கக்கூடும் என்ற தனது அனுமானத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

''அது யாராக இருந்தாலும், தங்கள் வாகனத்தை நிறுத்தி, இறந்து கொண்டிருக்கும் குட்டி யானைக்கு துணையாக இருந்திருக்கலாம் அல்லது இது குறித்து உரிய அரசுத்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கலாம். ஆனால், அதனை செய்யும் நாகரீகம் கூட இல்லை'' என அவர் மேலும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

லண்டன் மசூதி தாக்குதலாளியின் அடையாளம் தெரிந்தது

வெள்ளை சுறாவோடு நீச்சல் போட்டிக்கு தயாராகும் மைக்கேல் ஃபெல்ப்ஸ்

கிரிக்கெட்: தோல்வித் துயரத்தை மீம்களில் கரைக்கும் ரசிகர்கள் !

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் யார் ?

தேங்காய் எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியமானதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்