மொசூலுக்கான போர்: அல்-நூரி பள்ளிவாசலைத் தகர்த்த ஐ எஸ்

மொசூலில் உள்ள பெரிய பள்ளிவாசல் ஒன்றை இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பினர் வெடிவைத்து தகர்த்துவிட்டதாக இராக் படைகள் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை IRAQI JOINT OPERATION COMMAND

சாயும் தோற்றம் கொண்ட கோள் வடிவ கோபுரங்களைக் கொண்ட அந்த பிரபலமான இடத்தில்தான், ஐ.எஸ் . அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி 2014ல் தனது இஸ்லாமிய ராஜ்யத்தை (கலிஃபாட்) அறிவித்தார்.

ஆனால், இந்த வளாகத்தை அமெரிக்க விமானம் சேதப்படுத்தியது என ஐ எஸ் அமைப்பு தனது செய்தி நிறுவனமான அமாக் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த பள்ளிவாசலை வெடிக்கவைத்த நடவடிக்கை, ஐ ஸ் அமைப்பு தனது ''தோல்வியை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட அறிவிப்பு'' என்று இராக் பிரதமர் ஹைதர் அல் அபடி தெரிவித்தார்.

உயரத்தில் இருந்து பறவை பார்வையில் தெரிவது போல எடுக்கப்பட்ட படங்களில், பள்ளிவாசல் மற்றும் கோபுரம் பெரும்பாலும் அழிக்கப்பட்டவிட்டதாக தெரிகிறது.

மொசூல் நகரத்தை மீட்கும் தாக்குதல் நடவடிக்கைக்கு பொறுப்பான இராக் அரச படையின் தளபதி ஐ எஸ் அமைப்பு ''மற்றொரு வரலாற்று ரீதியிலான குற்றத்தை'' நடத்தியபோது, இராக் படையினர் அந்த இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் இருந்ததாக கூறியுள்ளார்.

ஐ எஸ் அமைப்பு மொசூல் மற்றும் இராக்கின் பெரும் பொக்கிஷங்களில் ஒன்றை'' சேதப்படுத்திவிட்டதாக, இராக்கில் உள்ள மூத்த அமெரிக்க படை தளபதி கூறினார்.

படத்தின் காப்புரிமை AFP

இது மொசூல் மற்றும் அனைத்து இராக்கிய மக்களுக்கும் எதிரான ஒரு குற்றம், ஏன் இந்த கொடூரமான அமைப்பு அழிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு இது ஆகும்" என்று மேஜர் ஜெனரல் ஜோசப் மார்ட்டின் கூறினார்.

ஜிஹாதிகள் , இராக் மற்றும் சிரியாவில் பல முக்கிய பாரம்பரிய இடங்களை அழித்திருக்கின்றனர்.

ஐ எஸ் அமைப்பு 100,000 க்கும் அதிகமான மக்களைக் மனித கேடயங்களாக வைத்திருக்கலாம் என ஐ.நா. மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

2016 அக்டோபர் 17 ல் தொடங்கப்பட்ட ஐ எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதலில், அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி போர் விமானங்கள் மற்றும் ராணுவ ஆலோசகர்கள் உதவியுடன், ஆயிரக்கணக்கான இராக்கிய பாதுகாப்பு படைகள், குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகள், சுன்னி அரபு பழங்குடியினர் மற்றும் ஷியா போராளிகள் ஈடுபட்டுள்ளனர்.

இராக் அரசாங்கம் ஜனவரி 2017 ல் கிழக்கு மொசூலுக்கு முழு "விடுதலை" என்று அறிவித்தது. ஆனால் நகரத்தின் மேற்கே அதன் குறுகலான தெருக்கள் கொண்ட பகுதிகள் மிகவும் கடினமான சவாலை முன்வைத்துள்ளன.

தாக்குதலின் 'இறுதி அத்தியாயம்'

இராக் அரசின் அறிக்கையில் பள்ளிவாசல் மற்றும் அதன் தனித்துவமான ஹ்ட்பா சாய்வு கோபுரம் சேதமடைந்துவிட்டதாக கூறியுள்ளது.

இந்த பள்ளிவாசலின் கட்டுமான பணிகள் 1172 ல் தொடங்கப்பட்டன.

ஜூன் 2014 ல் மொசூல் நகரத்தை பிடித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, பக்தாதி பள்ளிவாசலில் ஒரு வெள்ளிக்கிழமை தனது பிரசங்கத்திலிருந்து, தனது தலைமையை அறிவித்தார்.

ஐ எஸ் அமைப்பு -இஸ்லாமிய சட்டத்தின் படி, அல்லது ஷரியாவில், பூமியில் கடவுளின் துணைப் பொறுப்பாளராக அல்லது கலிஃபாவின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு அரசு என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பல ஆண்டுகளில் அவரது பொதுவெளியில் தோன்றியது அதுவே முதல்முறை என்று கூறப்பட்டது.

மொசூலுக்குள், இராக்கில் ஐஎஸ் அமைப்பின் வலுவாக பகுதியாக இருந்த பகுதி பழைய நகரம் ஆகும்.

ஈராக்கின் தீவிரவாத எதிர்ப்பு சேவை, ராணுவம் மற்றும் மத்திய காவல்துறை ஆகியவை பழைய நகரத்தை அனைத்து திசைகளிலிருந்தும் தாக்கும் நடவடிக்கை என்பது தாக்குதலின் "இறுதி அத்தியாயம்" இது என்று, ஞாயிற்றுக்கிழமை அன்று இராக் ராணுவ தளபதிகள் தெரிவித்தனர்.

அக்டோபர் மாதம் தாக்குதல் தொடங்கப்பட்ட சமயத்தில் சுமார் 6,000 இருந்தனர். அந்த நிலையுடன் ஒப்பிட்டால், தற்போது மொசூல் நகரத்தில் 300 போராளிகளுக்கும் குறைவனானவர்கள்தான் இருப்பார்கள் என்று நம்புவதாக ராணுவம் கூறியது.

முன்னதாக இந்த வாரம் விமானம் மூலம் வீசப்பட்ட துண்டறிக்கைகளில், பொதுமக்கள் பொது வெளிகளை தவிர்க்குமாறும் , தப்பிப்பதற்கு எந்த வாய்ப்பையும் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள், குண்டுவீச்சுகள் மற்றும் குண்டுகள் ஆகியவற்றிலிருந்து காயமடைந்தவர்களில் மேற்கு மொசூலில் காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று செவ்வாயன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) எச்சரித்தது.

இதையும் படிக்கலாம்:

ஈத் பெருநாளை முடிவு செய்வது எவ்வளவு சிக்கலானது?

செளதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரை பற்றிய ஐந்து விஷயங்கள்

அசத்தும் இளம் நீர் சறுக்கர்கள்: இந்தியாவில் அதிகரித்துவரும் சர்ஃபிங்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்