ஆஃப்கன்: வங்கி மீது நடந்த கார் குண்டு தாக்குதலில் 29 பேர் பலி

  • 22 ஜூன் 2017

தெற்கு ஆஃப்கனில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள வங்கிக்கு வெளியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 60 பேர் காயமடைந்திருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption புனித ரமலான் மாதத்தின் முடிவில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது

லஷ்கர் கா நகரில் உள்ள நியூ காபுல் வங்கிக் கிளையின் வாயில் முன்பு அந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பிபிசியிடம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் குடிமக்களும் காவல் படைகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

குண்டு வெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு என்று தங்களைக் கூறிக்கொள்ளும் தீவிரவாதிகள் சமீப மாதங்களில் கொடூரமான தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.

லஷ்கர் காவில் உள்ள மருத்துவமனையின் தலைமை நிர்வாகி மவ்லதாத் தபேதார் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பிபிசி ஆஃப்கனிடம் தெரிவித்தார்.

முன்னதாக, ஆயுதம் தரித்த தாக்குதலாளிகள் வங்கியினுள் நுழைந்து பாதுகாப்புப் படையினரிடம் துப்பாக்கிச் சண்டை நடத்தியதாக தோலோ நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

பொது மக்களும் அதிகாரிகளும் தங்கள் சம்பள பணத்தைப் பெற்றுக்கொள்ள வங்கிக்கு வெளியே வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் சலாம் ஆஃப்கன் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

குடிமக்களும் ராணுவப் பணியாளர்களும் தங்கள் மாதாந்திரச் சம்பளத்தை வங்கிளில் இருந்து பெற்று வருவதால், சமீபத்திய ஆண்டுகளில் ஆஃப்கனிஸ்தானில் உள்ள வங்கிக் கட்டடங்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

ஆஃப்கன் தலைமைச் செயலர் அப்துல்லா அப்துல்லாவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இறந்தவர்களில் பெரும்பாலானோர் "ஈத் திருவிழாவிற்கு பொருட்கள் வாங்க வந்த அப்பாவிகள்" என்று ட்விட்டரில் தெரிவித்தார்.

" அவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள் கொடுங்கனவுகளாக மாறிவிட்டாதாக," ஜாவித் ஃபைசல் கூறியுள்ளார்.

வசந்தகாலத் தாக்குதல் என்று தாங்கள் கூறிக்கொள்ளும் ஒன்றை தாலிபான்கள் தொடங்கியிருப்பதால் ஆஃப்கனிஸ்தானில் கடந்த சில வாரங்களாக தொடர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஆஃப்கனில் வங்கி மீது கார் குண்டு தாக்குதல்

கிழக்கு நகரான கார்டெஸில், கடந்த ஞாயிறன்று நிகழ்ந்த தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் ஐந்து காவல் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் உட்பட சுமார் 30 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்கா தலைமையிலான படைகள் கடந்த 2001-ம் ஆண்டு தாலிபன் அரசை ஆட்சியில் இருந்து நீக்கிய பின்பு நிகழந்த மிகக் கொடூரமான தாக்குதலான, மத்திய காபுலில் நிகழ்ந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புச் சம்பவத்தில், மே 31 அன்று 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அதே மாதத்தின் தொடக்கத்தில் கார்டெஸில் உள்ள நியூ காபுல் வங்கிக் கிளையில் நடந்த தாக்குதலில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டனர்.

லஷ்கர் காவைத் தலைநகரமாகக் கொண்டுள்ள ஹெல்மண்ட் மாகாணத்தின் சில பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஓராண்டு நீடித்த போருக்குப் பிறகு, மார்ச் மாதத்தில் முக்கிய மாவட்டமான சாங்கின், பயங்கரவாதிகள் வசம் வந்தது. மூசா குவாலா அவர்களால் கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்டது.

இதையும் படிக்கலாம்:

ஈத் பெருநாளை முடிவு செய்வது எவ்வளவு சிக்கலானது?

கத்தாரில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப கூடுதல் விமானங்கள்

'ரசிகர்களை மீண்டும் அக்டோபரில் சந்திப்பேன்': ரஜினிகாந்த்

`மாடுகளை இறைச்சிக்காக விற்க முடியாவிட்டால் தெருவில்தான் அவிழ்த்துவிட வேண்டும்'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்