தடை வதந்திகளை மீறி நாய் இறைச்சித் திருவிழா!

  • 24 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை AFP

சீன நகரமான யூலினில், ரத்து செய்யப்பட்டது அல்லது கொண்டாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டன என்று முன்பு செய்திகள் வெளியானபோதிலும், சர்ச்சைக்குரிய நாய் இறைச்சித் திருவிழா ஒன்று நடந்தது.

குவாங்சீ மாகாணத்தில் லிச்சீ மற்றும் நாய் இறைச்சித் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் உள்ள பிரசாரகர்கள், நாய் இறைச்சியை விற்க வேண்டாம் என்று அதிகாரிகள் விற்பனையாளர்களை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறியிருந்தனர்.

ஆனால் அதிகாரிகள் தங்களிடம் எதுவும் கூறவில்லை என்று கடை நடத்துபவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். கடந்த மே 15 அன்று, அத்திருவிழாவிற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

நாய் இறைச்சி இன்னும் விற்பனை ஆகிறதா?

ஆம். யூலின் நகரிலேயே பெரிய சந்தையான டோங்குவோ சந்தையில், புதன்கிழமையன்று, இறைச்சிக் கடைகளின் கொக்கிகளில் இறந்த நாய்களின் உடல்கள் தொங்கிக்கொண்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள தெருக்களில் போலீசார் அதிக அளவில் இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிருள்ள நாய்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தான் நம்பும் டஷிசங் சந்தையினுள் நுழைவதில் இருந்து தாம் காவல் துறையினரால் தடுக்கப்பட்டதாக அந்நகரில் உள்ள செயல்பாட்டாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

படத்தின் காப்புரிமை AFP

கடந்த ஆண்டுகளில், கடை உரிமையாளர்களுக்கும் அவர்களிடம் இருந்து கொல்லப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த நாய்களை மீட்க முயன்ற செயல்பாட்டாளர்களுக்கும் இடையே கைகலப்புகள் நிகழ்ந்துள்ளன.

எனினும் யூலின் நகரம் குவாங்சீ மாகாணத்தில் நாய்களின் இறைச்சியை உட்கொள்ளும் நகரங்களில் பெரிய நகரமல்ல. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரில்தான் அத்திருவிழா தொடங்கியது பின்புதான் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அது கவனமீர்த்தது.

நாய்களை உணவாக்குவதில் என்ன தவறு?

விலங்குகளைக் கொடுமைப்படுத்தும் குற்றச்சாட்டுகளும் சீனாவில் நாய்கள் மீதான மக்களின் மனோநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுமே இதற்குக் காரணமாகும்.

அங்கு வசிப்பவர்களும் விற்பனையாளர்களும் நாய்கள் மனிதாபிமான முறையிலேயே கொல்லப்படுவதாகவும், நாய் இறைச்சியை உண்பது பன்றி, மாடு மற்றும் கோழி இறைச்சிகளை உட்கொள்வதை விட அதிகமான அல்லது குறைவான கொடுமையல்ல என்றும் கூறியுள்ளனர்.

சீனா, தென் கொரியா மற்றும் சில ஆசிய நாடுகளில் நாய் இறைச்சியை உண்பது ஒரு பழைய வழக்கமாகும். இவ்வழக்கத்தை ஆதரிப்பவர்கள், உள்ளூர் வழக்கங்களில் வெளிநாட்டினர் தலையிடுவதாகத் கருதி பெரிதும் வருத்தமுற்றுள்ளனர்.

சீனப் பண்பாட்டின்படி நாய் இறைச்சியை உண்பது வெம்மையான கோடை மாதங்களில் பயனளிக்கக்கூடிய ஒன்றாகும்.

நாய்கள் திருடப்படாமல் மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படாத வரையில், நாய் இறைச்சியை உண்ணாதவர்களும் இவ்வழக்கத்தை ஆதரிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

ஆனால் இத்திருவிழாவை விமர்சிப்பவர்கள், பிற நகரங்களில் இருந்து நாய்கள் சிறிய மற்றும் நெரிசல் மிக்க கூண்டுகளில் அடைக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் கொடூரமாகக் கொல்லப்படுவதாகவும் கூறுகின்றனர். பெரும்பாலான நாய்கள் திருடப்பட்ட செல்லப் பிராணிகள் என்று செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சீனாவிற்கு உள்ளும் வெளிநாடுகளில் இருந்தும் இத்திருவிழாவிற்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றன. அந்நாட்டில் சமீப ஆண்டுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களின் எண்ணிக்கை விண்ணைமுட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. அங்கு பதிவு செய்யப்பட்ட வளர்ப்பு நாய்களின் எண்ணிக்கை 6.2 கோடியாக உள்ளது.

இது நாய் இறைச்சியை உண்பது குறித்த பலரின் கருத்தை படிப்படியாக மாற்றியுள்ளது.

இந்த ஆண்டு குழப்பம் ஏன்?

மே மாதத்தில், அமெரிக்காவில் உள்ள செயல்பாட்டாளர்கள் இந்த ஆண்டு நாய் இறைச்சி விற்பனைக்குத் தடை இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் இது உண்மை நிலையல்ல.

ஆனால் தாங்கள் இத்திருவிழாவை அதிகாரப்பூர்வமாக நடத்தவில்லை என்றும் அதனால் அதைத் தடுக்க முடியாதென்றும் யூலின் நகர அரசு மீண்டும் மீண்டும் தெரிவித்தது. சீனாவில் நாய்களை உண்பது சட்ட விரோதமான செயலல்ல.

ஆனால், ஆண்டு தோறும் இந்நிகழ்விற்கு ஊடக வெளிச்சம் கிடைப்பதை யூலின் உள்ளாட்சி அரசு விரும்பவில்லை.

இந்த ஆண்டு, விழா எவ்வளவு பெரிய அளவில் நடத்தப்படும் என்பது உடனடித் தெளிவில்லையெனினும், பொது இடங்களில் நாய்கள் கொல்லப்படுவது குறைவாகவே இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பத்து நாட்கள் நடக்கும் இவ்விழாவில், உச்சபட்ச ஆண்டுகளில் சுமார் 10,000 நாய்கள் மற்றும் பூனைகள் கொன்று உண்ணப்படுவதாக செயல்பாட்டாளர்கள் கணிக்கின்றனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்