தென் மேற்கு சீனாவில் பயங்கர நிலச்சரிவு; பலர் புதைந்து போயுள்ளதாக அச்சம்

படத்தின் காப்புரிமை Reuters

தென் மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவம் ஒன்றில் சுமார் 140க்கும் அதிகமானோர் புதைந்து போயிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூர் நேரப்படி காலை 06.00 மணியளவில், மலையில் ஒரு பகுதி சேதமடைந்ததை தொடர்ந்து, மோக்ஸியன் கவுண்டியில் உள்ள ஸின்மோ கிராமத்தில் சுமார் 40 வீடுகள் அழிந்தன.

பாறைகளுக்கு இடையில் சிக்கியுள்ள உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

படத்தின் காப்புரிமை Reuters

பீப்பிள்'ஸ் டெய்லி என்ற அரசு நாளிதழ் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், புல்டோஸர்கள் பெரியபாறைகளை நகர்த்திக் கொண்டிருக்க மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை காட்டுகின்றன.

டஜன்கணக்கான மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளில் தேடுதல் பணியை மேற்கொண்டிருக்க பணியாளர் குழு ஒன்று கயிறுகளை பயன்படுத்தி மிகப்பெரிய பாறைகளை நகர்த்தி ஒரு தம்பதியினரையும், ஒரு குழந்தையையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த நிலச்சரிவு ஒரு ஆற்றின் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு தடையை ஏற்படுத்தியுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் கூறியதாக குறிப்பிட்டு ஷின்ஷுவா செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் இந்த பகுதிகளில் பெய்த கடும் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தாவரங்களின் பற்றாக்குறை காரணமாக பாதிப்பு மோசமடைந்திருப்பதாகவும் அரசு ஒளிபரப்பு நிறுவனமான சி சி டி வியிடம் உள்ளூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்