கத்தார், வளைகுடா நாடுகளுக்கு இடையில் குடும்ப பிரச்சனை: அமெரிக்கா

வளைகுடா நாடுகள் மற்றும் கத்தாருக்கு இடையில் அதிகரிக்கும் பிரச்சனை, அவர்களுக்குள் நடக்கும் ''குடும்ப பிரச்சனை'' என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

வாஷிங்டனில் பத்திரிகையாளர்களுடன் நடைபெற்ற உரையாடலின் போது, வெள்ளை மாளிகை செய்திதொடர்பாளர் சீயன் ஸ்பைசர் இந்த கருத்தை தெரிவித்தார்.

சௌதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள், கத்தார் மீது, விதித்துள்ள கண்டிப்பான தடையை விலக்கவேண்டுமெனில், அவர்கள் விதித்துள்ள 13 கட்டுப்பாடுகளை ஒப்புக்கொள்ளவேண்டும் என்ற நிலை உள்ளது.

அந்த கட்டுப்பாடுகளில் ஒன்று கத்தார் அல்ஜஸிரா செய்தி ஒளிபரப்பின் ஒட்டுமொத்த தொகுப்பையும் மூடவேண்டும், இரானுடன் உள்ள தொடர்பை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதும் அடங்கும்.

கத்தார் மீது தடை விதித்துள்ள அனைத்து அரபு நாடுகளும் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. ஆனால், வெள்ளிக்கிழமையன்று அந்த நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள நிபந்தனை குறித்து, அமெரிக்காவின் வெளியுறவு துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன், அதிகாரப்பூர்வ அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை.

''இந்த பிரச்சனையில் ஈடுபட்டுள்ள நான்கு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டிருப்பது குடும்ப பிரச்சனை. அதை அவர்களாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நாம் நம்புவோம்,'' என்றார் ஸ்பைசர்.

படத்தின் காப்புரிமை EPA

''அவர்களுக்குள் நடக்கவேண்டிய கலந்துரையாடலை நடத்திவைக்க வேண்டியிருந்தால், அதை செய்யலாம். அவர்களுக்கு தேவைப்பட்டால், அவர்களாவே தீர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

வெள்ளியன்று இந்த விவகாரம் தொடர்பாக டில்லர்சன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சௌதி அரேபியா மற்றும் அதன் நட்பு நாடுகளான பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை, தடையை விலக்க கட்டுப்பாடுகள் அடங்கிய பட்டியலை கத்தாரிடம் அளிப்பார்கள் என்று இதற்கு முன்னர் டில்லர்சன் எதிர்பார்த்தார்.

தொடர்புடைய செய்திகள்:

'செளதி அரசர் ஷா சல்மானின் மனதில் கத்தார் மக்களுக்கு இடம் உண்டு'

கத்தார் - ஐந்து முக்கிய தகவல்கள்

கத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன் ?

கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?

ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் கத்தார் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்க, கத்தார் 13 கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வளைகுடா நாடுகள் விரும்புகின்றன.

கத்தார் தீவிரவாதத்திற்கு நிதியளித்து, பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை ஊக்குவிப்பதாக வளைகுடா நாடுகள் கூறுகின்றன, அந்த குற்றச்சாட்டுகளை கத்தார் மறுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கத்தார் மீது ஒரு கடினமான நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தீவிரவாதத்திற்கு "உயர் மட்ட" அளவில் கத்தார் ஆதரவு தருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ஆனாலும், அமெரிக்காவின் பெரிய ராணுவதளம் ஒன்று கத்தாரில் உள்ளது. இதன் காரணமாக வளைகுடா நாடுகள், கத்தார் என இரண்டு பிரிவுக்கும் இடையில் அமெரிக்கா சிக்கிக்கொண்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளில் ஒன்றாக இசுலாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு, அல் கயீதா மற்றும் லெபனானைச் சேர்ந்த ஷியா போராளி குழுவான ஹெஸ்பொல்லா போன்றவற்றுடன் கத்தார் தொடர்பை துண்டித்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று, கத்தார் மீதான தடையை விதித்துள்ள நான்கு நாடுகளில் ஒரு நாட்டை சேர்ந்த பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

விதிக்கப்பட்ட கோரிக்கைகள் கோரிக்கை என்ன?

புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய பட்டியலின் நகலை கொண்டுள்ள அஸோஸியேடட் பிரஸ் வெளியிட்ட நிபந்தனை விவரங்கள்:

மற்ற அரபு நாடுகளில் தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் (Muslim Brotherhood)அனைத்து உறவுகளையும் கத்தார் முறித்துக் கொள்ளுவேண்டும்.

நான்கு நாடுகளில் இருந்து கத்தாருக்கு வருபவர்களை குடிமக்களாக ஏற்க மறுப்பது, தற்போது தன்னுடைய பிராந்தியத்தில் அவ்வாறு உள்ளவர்களை வெளியேற்றுவது, இந்த கட்டுப்பாடுகள் மூலம், தங்களுடைய உள்நாட்டு பிரச்சனைகளில் கத்தார் தலையிடுவதை தடுக்கும் முயற்சியாக பிற வளைகுடா நாடுகள் பார்க்கின்றன.

நான்கு நாடுகளாலும் தீவிரவாதத்திற்காக தேடப்படும் தனி நபர்களை ஒப்படைக்கவேண்டும்.

தீவிரவாத குழுக்கள் என்று அமெரிக்காவால் அடையாளம் காணப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும்.

சௌதி அரேபியா மற்றும் பிற நாடுகளில் எதிர்தரப்பு என்று கருதப்படும் நபர்களுக்கு கத்தார் அளித்துள்ள நிதி பற்றிய முழுவிவரத்தை அளிக்கவேண்டும்.

அரசியல், பொருளாதாரம் மற்றும் பிற விவகாரங்களில் வளைகுடா கூட்டுறவு கவுன்சிலுடன் இணைத்துக்கொள்வது

அல் ஜசீராவுடன் கூடுதலாக மற்ற செய்தி ஊடகங்களான அரேபியா 21 மற்றும் மிடில் ஈஸ்ட் ஐ (Middle East Eye) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நிதியை நிறுத்துவது.

குறிப்பிடப்படாத தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

கத்தார் கோரிக்கைகளை பூர்த்தி செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

இந்த கட்டுப்பாடுகளை ஒத்துக்கொள்ள கத்தார் மறுத்தால், 10 நாட்கள் கடந்த பிறகு, இந்த பட்டியல் செயலயற்றதாகிவிடும் என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்தது சில கோரிக்கைகளை கத்தார் ஏற்றுக்கொள்ள முடியாதது போலத் தோன்றுகிறது.

வெளியுறவு அமைச்சர் ஷேக் முஹமத், கத்தார் எந்தவொரு "வெளிநாட்டு ஆணைகளை'யும்' ஏற்றுக்கொள்ளாது என்றும், அல் ஜஸீரா செய்தி நிறுவனம் தொடர்பான எல்லா பேச்சுவார்த்தைகளையும் ஒரு உள்நாட்டு விவகாரமாகக் கருதி அவற்றை "நிராகரித்துள்ளது என்றும் கூறினார்.

காத்தார் மீதான தடைகள், அந்த நாடு உணவு மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.

இரானும் துருக்கியும் கூடுதலான உணவு விநியோகங்களுக்கு உதவுகின்றன.

தற்போது கத்தார் நாட்டு விமானங்கள் செல்வதற்கு, சௌதி மற்றும் பிற நாடுகள் தங்களது வான்வெளியை பயன்படுத்த தடைவிதித்துள்ளது.

ஆனால், கத்தார் விமானங்கள் பறக்க இரான் அதன் வான்வெளியை திறந்துள்ளது.

பிற செய்திகள்:

சினிமா விமர்சனம்: வனமகன்

சினிமா விமர்சனம்: அன்பானவன், அசராதவன், அடங்காதவன்

பெண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் - 9 ருசிகர தகவல்கள்

ஈத் பெருநாளை முடிவு செய்வது எவ்வளவு சிக்கலானது?

ரஜினிகாந்த் மீது சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கடும் விமர்சனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்