ஆழ்கடல் பரப்பிற்கு உரிமை கோரும் நாடுகள்

  • 9 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Getty Images

கடலின் மேற்பரப்பில் இருந்தும், பூமியின் தரைப்பகுதியில் இருந்தும் வெகு தொலைவிலும், எட்டுவதற்கு கடினமான இடத்திலும் உள்ள ஆழ்கடல் தரைப்பரப்புகளுக்கு உலகெங்கும் பல நாடுகள் உரிமை கோருவது ஏன்?

உலகின் வெகுதொலைவில் இருக்கும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசங்களில் கொடிகளை நட்டு உரிமைகோரும் வழக்கத்திற்கு ஒரு நீண்டகால வரலாறு உள்ளது.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் துருவத்தை நோக்கி ஆய்வாளர்கள் படையெடுக்கத் தொடங்கினர். அறியப்படாத அந்த பகுதிகளில் எதிர்காலத்தில் வளங்களை சுரண்டுவதன் மூலம் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதால், ஆய்வாளர்களுக்கு அவர்களின் ஏற்பாட்டாளர்கள் மிகவும் ஆர்வம் காட்டினர்.

1945-ம் ஆண்டு, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஹாரி எஸ் ட்ரூமன், மரபுக்கு மாறாக, ஒட்டுமொத்த துருவக் கண்டத்திட்டுகளையும் அமெரிக்காவுக்காக உரிமை கோரினார்.

அதன் பின்னர், 2007-ம் ஆண்டு ரஷ்யா ஒரு நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தி வட துருவத்தில் தனது கொடியை நாட்டியது.

புதிய வளங்களை தேடுவது என்பதே இவர்கள் அனைவரின் பொதுவான நோக்கமாக இருந்தது. ஆனால், தற்போது ஒரு புதிய நோக்கத்தை மையப்படுத்தி இவர்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். அதுதான், ஆழ்கடல் பகுதி.

இதற்கு முன்னர் அறியப்படாத வளங்களை கண்டறியும் வாய்ப்பினை இது போன்ற ஆராய்ச்சிகள் தந்தாலும், இதனால் ஏற்படவிருக்கும் தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருள் சூழ்ந்த ஆழ்கடல் முதல் மலைகள் வரை

பூமியின் மேற்பரப்பில் 60 சதவீதமாக இருக்கும் ஆழ்கடலின் தரப்பரப்பில் 5 சதவீதப் பகுதிகள் மட்டுமே முறையாக ஆராயப்பட்டுள்ளன.

கடலின் மேற்பரப்பை மட்டுமே ஒளி ஊடுருவுகிறது. ஆனல், பரந்து விரிந்த ஆழ்கடல் பகுதியில் இருள் சூழ்ந்தும் உறைநிலைக்கு சற்று அதிக அளவிலான வெப்பநிலையே காணப்படும்.

கடலின் மேற்பரப்பில் நிலைகொண்டிருக்கும் பெரிய கப்பல்களுடன் இணைக்கப்படிருக்கும் சிறிய நீர்மூழ்கி கப்பல்கள் இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆராய்ச்சியின் போது செலுத்தப்படும் ஒளிக்கற்றைகளால் மிகவும் மெல்லிய கட்டமைப்புகள் மற்றும் இதுவரை பார்த்திராத உயிரினங்களையும் கண்டறியமுடிகிறது.

ஆனால், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகள் மற்றும் நிறுவனங்கள் பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள கனிமங்களை நோக்கியே தங்களின் கவனத்தை செலுத்தி வருகின்றன.

அக்கனிமங்களை கண்டறிவதற்கும் அவை இருக்கும் இடங்களை வரைபடமாக்கவும், அவற்றை தோண்டியெடுக்கவும் தேவையான தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் வந்துவிட்டன. மிகவும் ஆழமான பகுதிகளில் செயல்படுமளவிற்கு கட்டமைக்கப்பட்ட ரோபோடிக் உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பிடத்தக்க அளவு கனிமங்கள் இருள் சூழ்ந்த ஆழ்கடலில் உள்ள பகுதிகளின் மீதும், கடினமான பாறைத்திட்டுகளால் சூழப்பட்டுள்ள கடலுக்கடியில் உள்ள மலைகள் மீதும் பரவியுள்ளன.

பூமியின் மேற்பரப்பில் காணப்படும் பிளவுகளில் இருக்கும் வற்றிப் போன மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் வெப்பநீருற்றுகளிலும் இந்த கனிமங்கள் காணப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை SOIL MACHINE DYNAMICS
Image caption நெளடிலஸ் ஆழ் கடல் கனிம வளங்களை எடுக்கும் கருவிகள்

ஆழ்கடலைத் தோண்டுவது என்பது 1960-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே தோன்றிய கருத்து என்றாலும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இது உண்மையாகலாம்.

மக்கள் தொகை வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, மற்றும் நிலத்தில் கிடைக்கும் கனிமங்கள் தொடர்ந்து கிடைப்பது மற்றும் அவைகளின் பாதுகாப்பு குறித்தான கவலைகள் ஆகியவையே ஆழ்கடலை தோண்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது.

தாமிரம், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்றவை கனிம படுகைகளில் அதிக அளவில் இருக்கின்றன. இவைகள் எல்லாம் முக்கியமான உலோகங்கள் .

இக்கனிமங்களில், தகவல்களை சேகரித்து வைக்கும் மெமரி சில்லுகள் ( memory chips ), ஒளியை உமிழும் எல்.இ.டி(LED) மற்றும் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் அபூர்வ மணல் வளங்களும் அடங்கும்.

நிலப்பரப்பில் கண்டறியப்பட்டுள்ள அனைத்து வித கனிம படுகைகளைக் காட்டிலும் பசிபிக் பெருங்கடலில் காணப்படும் மலைகளில் 22 மடங்கு அதிகமாக வெண்கந்தகம் அல்லது தெல்லூரியம் என அழைக்கப்படும் வேதியியல் தனிமம் இருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட இந்த தனிமம் சோலார் பேனல்களில் ( solar panels ) பயன்படுத்தப்படுகிறது.

ஆழ்கடல் பகுதியில் காணப்படும் அழுத்தம்

ஆழ்கடலில் கனிம வளங்கள் இருக்கின்றவனவா என்று ஆராயப்படுகின்றன. ஆனால் தற்சமயம் வரை அவற்றை தோண்டியெடுக்கும் வேலைகள் நடைபெறவில்லை.

பிரிட்டிஷ் அரசும் Lockheed Martin UK நிறுவனத்தின் துணை நிறுவனமும் கூட்டணி அமைத்து கிளாரியன் - கிளிப்பர்ட்டன் (Clarion-Clipperton Zone) பகுதியில் ஆழ்கடல் கனிமவளங்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. குறிப்பிட்ட இந்தப் பகுதியானது பசிபிக் பெருங்கடலில் மெக்சிக்கோ மற்றும் ஹவாய் இடையே ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்திற்கு நீண்டுள்ளது.

மிகவும் தொலைதூரத்தில் நடைபெறும் இந்த ஆய்வு கடுமையான சவால்களை சந்திக்கும்.

இதற்கான உகரணங்கள் ஆழ்கடல்பகுதியில் குறைந்தபட்சம் 5 கிலோமீட்டர் (3 மைல்கள்) ஆழத்தில் நம்பகமாக செயல்பட வேண்டும். இந்த ஆழத்தில், நிலப்பரப்பில் காணப்படும் அழுத்தத்தை விட 500 மடங்கு அதிகமான அழுத்தம் காணப்படும். இவற்றையெல்லாம் கடந்து கடலின் மேற்பரப்பில் உள்ள கப்பலுக்கு கனிமங்களை எடுத்து வந்து பின்னர் நிலத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

கடற்கரைக்கு அருகில் மற்ற வளங்களும் காணப்படுகின்றன.

பப்புவா நியூ கினியா ( Papua New Guinea ) பகுதியில் உள்ள பிஸ்மார்க் கடற்பரப்பில் ஒரு கிலோ மீட்டர் (0.6 மைல்கள்) ஆழத்திலேயே அதிக அளவிலான கனிம வளங்களை கொண்டுள்ள படுகைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது போன்ற எளிதாக அணுகக் கூடிய பகுதிகளில் உள்ள கனிமங்களை எடுக்க ஏற்ற வகையில் ஆழ்கடல் உபகரணங்களை வடிவமைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் தோண்டும் வேலை நடந்தால், அது எதிர்காலத்தில் ஆழ்கடலில் தோண்டும் நடவடிக்கைகளுக்கு தேவையான அனுபவ அறிவைத் தரும்

இது ஒருபுறம் இருந்தாலும், இதனால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்தை கருத்தில் கொண்டு இதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

கடையப்படும் கடல்

தோண்டலுக்கான விதிமுறைகள் இனிமேல் தான் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்றாலும், தோண்டுவதால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்தினை மதிப்பீடு செய்து இதனால் ஏற்படும் விளைவுகளை நிர்வகிப்பதற்கான திட்டங்கள் உள்ளன என்றும் ஒப்பந்தக்காரர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆழ்கடல் பகுதியில் சுரங்கங்களை அமைப்பதில் உள்ள மிகப்பெரிய சவால் இதுவாக இருக்கலாம்; இதுவே அதில் உள்ள மிகப்பெரிய சிக்கலான பகுதியும் கூட.

ஆழ்கடல் பகுதியின் சுற்றுச்சூழல் குறித்தோ, அங்கு தோண்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தோ புரிதல் நம்மிடம் மிகவும் குறைவாக உள்ளது,.

கடல்வாழ் உயிரினங்களின் பன்முகத்தன்மை, குறிப்பாக ஆழ்கடல் பகுதியில் காணப்படும் கனிமத் தொகுதிகள், போன்றவை பிரமிக்கத்தக்கவை; இதுவரை அறிந்திடாத பலவகை உயிரினங்கள் உள்ளிட்டவற்றை கண்டறியப்பட வேண்டும் .

படத்தின் காப்புரிமை NATIONAL OCEANOGRAPHY CENTRE
Image caption பசிஃபிக் பெருங்கடலில் உள்ள ஆழ்கடல் இறால்

சர்வதேச விஞ்ஞானிகள் கூட்டைமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் ஆழ்கடல் பகுதியின் தளத்தை துளையிடுவதால் ஏற்படும் தாக்கத்தை அளவிட முயற்சித்துள்ளது.

பல வகையான கடல் வாழ் உயிரினங்கள் இதனால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.

இதனால் கடலின் முக்கிய அம்சமான கடல் சார் உணவுகள் மற்றும் கரியமில வாயுவை உள்ளிழுக்கும் தன்மை ஆகியவையும் பாதிக்கப்படலாம்.

இதுமட்டுமல்லாமல், புதிய மருந்துகள் மற்றும் இன்னும் பிற பொருட்களுக்கான தேடலையும் பாதிக்கலாம்.

எடுத்துக்காட்டாக

வர்த்தகரீதியில் தயாரிக்கப்படும் தோல் பராமரிப்பு மருந்து ஒன்றில், கரிபியன் ஆக்டோகோரல் என்ற கடல் பொருளிலிருந்து வீக்க எதிர்ப்பு சாறு ஒன்று பயன்படுத்தப்படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஒரு இயற்கை பொருள் கடற்பாசியில் இருந்து எடுக்கப்படுகிறது.

கூம்பு நத்தையிலிருந்து கிடைக்கும் ஒரு பொருளிலிருந்து வலி நிவாரணி ஒன்றும் தயாரிக்கப்படுகிறது.

ஆழ்கடல் படுகையின் சொந்தக்காரர்கள்

கடற்கரையில் இருந்து 200 கடல் மைல் ( 370 கிமீ ) தூரத்தில் கண்டறியப்படும் வளங்களை உரிமை கோர அந்தந்த தனிப்பட்ட நாடுகள் ஒப்பந்தங்களை உருவாக்க வேண்டும்.

ஆனால், சர்வதேச கடற்பகுதியில் இது கடினமாக இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Science Photo Library
Image caption ஆழ்கடலில் கருப்பு புகையை வெளியேற்றும் வெப்ப நீர்ம துளை

இது போன்ற சந்தர்ப்பங்களில் உரிமங்களை வழங்குவது சர்வதேச கடற்படுகை அதிகாரசபையின் (International Seabed Authority ) பொறுப்பாகும்.

1984-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு எடுக்கும் முடிவுகள் இதில் உறுப்பினராக இருக்கும் ஐக்கிய ஒன்றியம் உள்ளிட்ட 166 நாடுகளை அதிகாரப்பூர்வமாக பிணைக்கிறது.

ஆழ்கடல் ஆய்வுகளின் மைல்கற்கள்

1934 - வில்லியம் பீபி மற்றும் ஓட்டிஸ் பார்ட்டன் எனும் இருவர் 923 மீட்டர் ( 3,028 அடி ) ஆழத்தில் இறங்கினர். இதற்காக மிகவும் கடினமான வார்ப்பிரும்பால் உருவாக்கப்பட்ட "பாத்திஸ்பியர்" (bathysphere) எனும் ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்பட்டது.

1960 - ஷாக் பிக்கார்டு (Jacques Piccard) மற்றும் டான் வால்ஷ் (Don Walsh) எனும் இருவர் பசிபிக் பெருங்கடலின் மிகவும் ஆழமான பகுதியான மரியானாஸ் அகழியில் 11 கிமீ ஆழத்தில் இறங்கினர். இதற்காக டிரியாஸ்ட் (Trieste) நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்பட்டது.

"மனிதவர்க்கத்தின் பொதுவான பாரம்பரியக் கொடை" என்று வரையறுக்கப்பட்ட வளங்களை நிர்வகிக்க, சர்வதேச கடற்படுகை அதிகாரசபை இதுவரை 15 ஆண்டுகளில் 26 ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இவையனைத்தும் 20 நாடுகளால் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் சீனா மற்றும் ரஷ்யா தனித்தனியாக நான்கு உரிமங்களைக் கொண்டுள்ளன.. ஐக்கிய ராஜ்யம், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தனித்தனியாக இரண்டு உரிமங்களைக் கொண்டுள்ளன.

கண்காணிக்கப்படும் கடல்கள்

வளரும் நாடு ஒன்றுடன் உரிமங்களை சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனால் இரு நாடுகளுக்கும் சரிபாதி கடற்தரைப்பரப்பு கிடைக்கும்.

கடல்கள் எற்கனவே பல வளங்களை மனித இனத்திற்கு வழங்கிவருகின்றன. ஆனால், ஆழ்கடல்களை எளிதாக அணுக முடியாத காரணத்தால் அவை நீண்ட காலமாக கவனிக்கப்படவில்லை.

தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நமக்கு ஏற்பட்டுள்ள புரிதல்களை வைத்து பார்க்கும் போது, இனிவரும் காலங்களில் பல சாத்தியமுள்ள மாற்றங்களை காண முடியும்.

இனிவரும் காலங்களில் ஆழ்கடல் பகுதிகளைத் தோண்டும் உரிமங்களை அடைவதற்கான போட்டி மட்டும் தீவிரமடையும்.

( கட்டுரையாளர் : பேராசிரியர் ரஷேல் மில்ஸ், தெ ராயல் சொசைட்டி)

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்