அண்டை நாடுகளின் நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற இயலாது: டில்லர்சன்

  • 26 ஜூன் 2017

கத்தார் மீது நான்கு அரபு நாடுகள் விதித்த தடையை நீக்குவதற்கு அந்நாடுகள் விதித்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

இருப்பினும் அந்த கோரிக்கைகள் நிலவிவரும் நெருக்கடிக்கான தீர்வின் அடிப்படையாக அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று, செளதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளான எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் விதித்த 13 நிபந்தனைகளை கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் நிராகரித்தார்.

செளதி மற்றும் பிற நாடுகள் கத்தார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்துகின்றன; ஆனால் கத்தார் அதனை மறுக்கிறது.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு கத்தாரின் மீது ராஜிய மற்றும் பொருளாதார தடைகள் நிலவும் நிலையில், இரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிடமிருந்து அதிகப்படியான உணவுகள் மற்றும் பிற பொருட்கள் கத்தாருக்கு விநியோகிக்கப்படுகின்றன.

வரும் வெள்ளியன்று அதாவது 10 நாட்களுக்குள், இரானுடனான உறவை கத்தார் குறைக்க வேண்டும்; துருக்கிய ராணுவ தளத்தை மூட வேண்டும் என இந்த நான்கு நாடுகள் விரும்புகின்றன.

தொடர்புடைய செய்தி:

மேலும் அந்த கோரிக்கைகளில், கத்தார் அரசால் நிதி வழங்கப்படும் அல் ஜசீரா தொலைக்காட்சியை மூட வேண்டும் என்றும் பிற வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாதத்தை நிறுத்துவது குறித்தும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் நாடுகள் கலந்து ஆலோசிக்க வேண்டும் என டில்லர்சன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் இருப்பதும் பதற்றத்தை குறைக்கும் என டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று கோரிக்கைகள் விடுக்கப்பட்ட பின், இது "குடும்ப தகராறு" என்றும் நாடுகள் கூடி இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

என்ன சொல்கிறது கத்தார் அரசு?

சனிக்கிழமையன்று, கத்தாருக்கு தடை விதித்துள்ள நாடுகள் "நியாயமான மற்றும் செயல்படுத்தக்கூடிய" கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என டில்லர்சன் கூறியுள்ளதாக கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக்-முகமத்-பின்-அப்துல்-ரஹுமான்-அல்-தனி கூறியதாக அல் ஜசிரா தெரிவித்துள்ளது.

"இந்தத் தடை பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கானதல்ல என்பதற்கு இந்த கோரிக்கைகள் ஒரு சாட்சி என்றும், கத்தாரின் இறையாண்மையை கட்டுப்படுத்துவதற்காகவும், கத்தாரின் வெளியுறவுக் கொள்கைகளை வெளியார் எடுத்துக்கொள்வற்குமே இந்த கோரிக்கைகள்" என அவர் தெரிவித்தார்.

தங்களின் கருத்து சுதந்திரத்தை முடக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ள அல் ஜசிரா, எந்த ஒரு அரசாங்கத்திடமிருந்தும் அல்லது அதிகாரத்திடமிருந்தும் வரும் நெருக்கடிக்கு அடிபணியாமல் ஊடகத் தொழிலை உறுதியாக கடைபிடிக்க தமக்குள்ள உரிமையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தடைகளால் ஏற்பட்ட விளைவுகள் என்ன?

கத்தாரின் முக்கிய இறக்குமதி வழிகள், தரை மார்க்கமாக சவுதி அரேபியாவிலும், கடல் மார்க்கமாக வரும் சரக்கு கப்பல்கள் ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல நாடுகள் கத்தார் விமானங்களுக்கான தங்கள் வான்பரப்பை முடக்கியுள்ளன.

இருப்பினும் அந்த சிறிய வளமான நாடு, மாற்று வழிகளைக் கண்டுபிடித்து இதுவரை எந்த பொருளாதார சீர்குலைவைத் தவிர்த்திருக்கிறது.

ஆனால் அண்டை நாடுகளில் இருக்கும் கத்தார் நாட்டு மக்களும் அவர்கள் குடும்பத்தினரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டிருப்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக ராயடர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி:

கோரிக்கைகள் நிறைவேற்றபட வில்லை என்றால் என்ன நடக்கும்?

இந்த நெருக்கடியில் மத்தியஸ்தம் செய்ய ஐக்கிய அரபு எமிரேட்டுகள் முயற்சித்து வருகின்றன.

சனிக்கிழமையன்று, கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் அது `` ஒன்றாக பயணிக்க முடியாது`` என ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

``நெருக்கடி முற்றுவது மாற்று வழியல்ல. நாடுகள் பிரிந்து செல்வதுதான் மாற்று வழி. பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கும் ஒரு நாட்டுடன் கூட்டாக இருக்க முடியாது`` என அவர் தெரிவித்துள்ளார்.

கத்தார் அதிகப்படியாக பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி கத்தார் மீது கடும் போக்கை கடைபிடிக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இந்த நெருக்கடியில் இருக்கும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு நெருக்கமான நாடுகளாகும். மேலும் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் பெரிய தளமாக கத்தார் விளங்குகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்