10 ஆண்டுகளில் 10 கருச்சிதைவுகள்: ஆனாலும் மனம் தளராத நம்பிக்கை

ஜென் பிக்கெலும் அவருடைய கணவர் ஆன்ட்ருவும்

பத்து ஆண்டுகளில் பத்து கருச்சிதைவுகள் ஏற்பட்டுள்ளதால், ஜென் பிக்கெலும் அவருடைய கணவர் ஆன்ட்ருவும் இதய வலிக்கு அந்நியர் அல்ல.

வேல்ஸ் நகரத்தின் கார்டிஃபை நேர்ந்த 39 வயதான ஜென் பிக்கெல் செயற்கை முறை கருத்தரிதல், அறுவை சிகிச்சையில் முடிந்த இடம் மாறிய கர்ப்பம் என பல சுற்றுகள் குழந்தை பெற்றுகொள்ள முயற்சித்தவர்.

ஆனால், இந்த முயற்சி வெற்றியடையாததற்கு இந்த தம்பதியர் இன்னும் காரணத்தை அறிய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த தம்பதியர் அனுபவித்த கடும் இழப்புக்கள், கருவிலேயே இறந்துபோன குழந்தை ஒன்றின் நினைவு வழிபாட்டில் பங்கேற்றது, இன்னும் அவர்கள் நம்பிக்கையை தளரவிடாமல் இருப்பது ஆகியவற்றை அவரே (ஜென் பிக்கெல்) இந்தக் கட்டுரையில் விவரிக்கிறார்.

நம்பிக்கையோடு முயற்சி

என்னுடைய கையைப் பிடித்து கொண்டு எனக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஆன்ட்ருவோடு, ஸ்கேன் செய்ய படுத்திருக்கின்றபோது, ஏதாவது அறிகுறி கிடைக்குமா என்று நான் மருத்தவமனை ஊழியர்களின் முகங்களை ஆவரோடு பார்த்துக் கொண்டிருப்பேன்.

மீண்டும் ஒருமுறை முயற்சிக்கிறோம் என்ற உணர்வுதான் மேலோங்கும். இதற்கு நாங்கள் மிகவும் பழகிப் போய்விட்டோம். இது 10வது முறை.

கருச்சிதைவில் எல்லா வகை மேலாண்மையையும் நான் பெற்றிருக்கிறேன்.

அறுவை சிகிச்சை கருமுளையை அகற்றுதல், மருத்துவமனையில் சிகிச்சை, மருந்துகள் எல்லாம் பார்த்துவிட்டேன். இப்போது வீட்டுக்கு வந்து இயற்கையாக கர்ப்பம் ஆகும் என காத்திருக்கிறேன்.

எங்களது குடும்பத்தை நாங்கள் உருவாக்க விரும்பினோம். ஆன்ட்ருவும் நானும் திருமணம் செய்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு முன்னர் 10 ஆண்டுகள் சோந்து வாழ்ந்துள்ளோம். திருமணம் செய்து வாழ வேண்டும் என்று நான்தான் முதலில் விரும்பினேன். 29 வயது வரை நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே, மிகவும் தாமதித்துவிட்டது என்று திருமணமானவுடன் குழந்தை பெற்றுகொள்ள திட்டமிட்டோம்.

முதல் சோக அனுபவம்

சுமார் ஆறு மாதத்திற்கு பிறகு முதல் கருச்சிதைவு நிகழ்ந்தது. எதனால் அது நடந்தது என்று எங்களுக்கு இதுவரை தெரியாது. எங்களுடைய துரதிர்ஷ்டம் என்று சொல்லுகிறார்கள்.

நான் கருத்தரிக்க நேரடியாகவே முயற்சிகள் மேற்கொண்டோம். ரத்தப்போக்கு ஏற்பட்டதும், ஏதோ சரியில்லை என்று உணர்ந்தோம்.

மருத்துவமனைக்கு சென்று, ஸ்கேன் செய்தோம். பல ரத்தப் பரிசோதனைகள் செய்தோம். அப்போதுதான் முன்னரே கருச்சிதைவு ஆகியிருக்கிறது தெரியவந்தது.

சில மாதங்களுக்கு பிறகு முயற்சி செய்தபோது, நான் கருத்தரிக்க 18 மாதங்கள் எடுத்தது. இரண்டாவது முறை அனைத்தும் நல்லதாக அமையும் என்று எண்ணினோம்.

11 ஆம் வாரம், மூன்றாவது மாத ஸ்கேன் செய்வதற்கு சற்று முன்னதாக, எனக்கு ரத்தப்போக்கு தொடங்கியது.

மருத்துவமனைக்கு விரைந்தோம். கரு வளரத் தொடங்கியிருந்தது. ஆனால் கரு முளை ஆறாவது அல்லது ஏழாவது வாரத்தில் வளர்வது நின்றிருந்தது. கருவில் இதயத் துடிப்பு உருவாகவில்லை.

அதிர்ச்சியடைந்த நாங்கள் மருத்துவர்களிடம் செல்ல அவர்கள் சில பரிசோதனைகளை செய்யச் சொன்னார்கள்.

இதுபற்றி ஆராய்வதற்கு மருத்துவ ஆலோசனை பெற அனுப்பப்பட்டபோது, அந்த மருத்துவர். நான் 18 மாதங்களாக கருத்தரிக்க முடியாமல் போனது பற்றி மிகவும் கவலைப்பட்டார்.

என்னுடைய கரு முட்டை குழாயில் அடைப்பு, ஆன்ட்ரூவுக்கு பரிசோதனை என மேலும் பரிசோதனைகள் தொடர்ந்தன. அனைத்திலும் எவ்வித குழப்பமும் இல்லை என தெரியவர மீண்டும் இயற்கையான முறையில் கருத்தரிக்க முயற்சி செய்தோம், ஆனால் தோல்விதான் மிஞ்சியது.

செயற்கை முறை கருத்தரிதல்

இவை அனைத்தும் அடுத்ததாக செயற்கை முறையில் கருத்தரிக்கும் முயற்சிக்கு வழிகாட்டியது.

இதற்கு சில வாரங்கள் ஆயின. பல ஊசிகள், பல ஸ்கேன்கள். பல மருத்துவர் சந்திப்புக்கள். இதற்கு மேலும் சொல்லப்போனால், எங்களுடைய நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அதிக நேரம் செலவானது.

கருத்தரிப்பு சோதனையில் நேர்மறையாக வந்தால், ஸ்கேன் எடுத்து உறுதிசெய்ய காத்திருக்க வேண்டியது. சில வாரங்கள் ஏதுமே தெரியாத நிலை. ஆனால், செயற்கை முறை கருத்தரிப்பில் ஒவ்வொரு நிலையிலும் தவறுகள் நடக்க வாயப்பு உள்ளது.

செயற்கை கருத்தரிப்புக்கு கரு முட்டைகளை சேகரிக்கும்போது, அவை போதுமானதாக இருக்காது. அவர்கள் சேகரித்த கரு முட்டைகள் முழு வளர்ச்சி பெற்றவையாக இருக்காது. அவற்றை கருவளம் பெற செய்தால், அவை கருத்தரிக்கும் நிலைமைக்கு வளம் பெறுமா என்ன? அந்த கரு வளர்ச்சி பெறுமா என்ன?

பின்னர் அவை வளர்வதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் பதட்டம், கவலை, உண்மையிலேயே கருத்தரித்து விட்டதா என்று அறிய இரு வாரங்கள் காத்திருப்பு எல்லாம் உண்டு. இந்த இரண்டு வாரங்களும் மிகவும் மோசமானவை.

தேசிய சுகாதார சேவையில் இரண்டு முறை செயற்கை கருத்தரித்தல் மேற்கொண்டேன். ஒன்று வெற்றிகரமாக அமையவில்லை. இன்னொன்று ஆறு அல்லது ஏழு வாரங்களுக்குள் கருச்சிதைவில் முடிந்தது.

செயற்கை கருத்தரித்தல் செய்துகொள்ள குடும்பத்தில் இருந்து கடன் வாங்கினோம். ஒவ்வொரு காசாக சேமித்தோம். மீண்டும் ஒரு செயற்கை கருத்தரித்தல் முயற்சி. அதுவும் தோல்வியில் முடிந்தது. துரதிர்ஷ்டவசமாக மேலதிக கரு முட்டையும் இருக்கவில்லை.

இந்நிலையில், ஒரு சின்ன அதிர்ஷ்டம். எங்களது நிலைமையை பார்த்து, நாங்கள் சிகிச்சை எடுத்துகொண்ட மையம் ஒரு சலுகை அளிக்க முன்வந்தது. மருந்துக்கு மட்டும் செலவழிப்பதாக இருந்தால், மையத்திற்கு கட்டணம் எதுவும் வழங்காமல் இன்னொரு முறை செயற்கை கருத்தரிதலுக்கு முயற்சிக்கலாம் என்பதுதான் அது. மருந்துக்கு மட்டும் செலவு என்றாலும் செலவு சற்று அதிகமாகத்தான் இருக்கும்.

வளம் பெற்ற கருவை கருப்பைக்குள் மாற்றும் மூன்று முயற்சிகளில் இரண்டு வெற்றிகரமாக அமையவில்லை. ஆனால், ஒன்று அப்படியல்ல.

இதில் எது சிறந்தது? கருத்தரித்து விட்டோம் என்று நேர்மறை முடிவை பெறுவதா?, கருச்சிதைவு அல்லது நேர்மறை முடிவு எப்போதுமே பெறாமல் இருப்பதா? இதில் எது மிகவும் மோசமானது என்று எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை.

இவை இரண்டுமே சமமாக இதயத்தை உடைத்துவிடக் கூடியவையே

கருத்தரிப்பு என்றால் சற்று மகிழ்ச்சிதான். அதற்கான பரிசோதனை என்பது சிறந்த உணர்வு தான். ஆனால் அடுத்த வினாடியே ."ஓ! அதிக உணர்ச்சிவசப்பட்டுவிடக் கூடாது. நம்முடைய நம்பிக்கையை அதிகமாக வளர்த்துகொள்ள வேண்டாம். நம்முடைய ஸ்கேன் அறிக்கையை பெறும் வரை காத்திருப்போம் என்ற உணர்வு தோன்றிவிடுகிறது.

நம்பிக்கையும், சந்தேகமும்

எல்லாம் நன்றாகவே நடக்கும் என்று உள்ளுக்குள் நம்பிக்கை இருந்தாலும் அதில் மிகவும் ஒன்றிப்போவதில்லை. குழந்தைக்கு நர்சரி பள்ளி பற்றி சிந்திப்பது அல்லது குழந்தையை சுமந்து செல்லும் தள்ளுவண்டி வாங்குவது பற்றி எல்லாம் சிந்திக்காமல் இருந்துவிட வேண்டும்.

நான் நேர்மறை கருத்தோடு இருக்க விரும்புகிறேன். நான் நேர்மறையாக சிந்திக்க கூடியவர். ஆனால், என்னுடைய மனதில் ஒரு பக்கத்தில் இந்த முறை எல்லாம் சரியாக அமைந்து விடுமா? என்ற எண்ணம் தான் இருக்கிறது.

எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. இன்னொரு பக்கம், இல்லாமல் போய்விடுமோ என்ற உறுத்தலும் இருக்கிறது. ரத்தப்போக்கு இல்லாத வரை எல்லாம் நன்றாக நடக்கப்போகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது.

நாங்கள் இருவரும் இந்த அனுபவத்தை பெற்றுள்ளோம். எங்களில் ஒருவர் நம்பிக்கையாய் வலுவாய் இருப்போம். இன்னொருவர் சற்று உடைந்து போய்விடுவோம். வலுவாய் இருப்பவர் உடைந்து போகிறவரை மீண்டும் வலுப்பெறச் செய்ய உதவியாக இருந்தது.

இந்த அனுபவத்தால் நாங்கள் இருவரும் மிகவும் நெருங்கி வந்துள்ளோம். நாங்கள் ஒருவரையொரவர் குற்றஞ்சாட்டியது கிடையாது.

என்னுடைய கணவர் மிகவும் நல்லவர். ஒவ்வொரு மருத்துவர் சந்திப்பின்போதும் என்னுடைய கைகளைப் பற்றிக் கொண்டு, மருத்துவமனை வரவேற்பு அறையில் என்னருகில் வீற்றிருப்பார்.

செயற்கை முறை கருத்தரிதலுக்கு சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் டாலர் வரை செலவாவது அழுத்தங்களை அதிகரித்தது.

என்னுடைய கடைசி இரண்டு கருத்தரித்தலும் இடம்மாறிய கருத்தரிப்புகளாக இருந்தன.

கரு வெளிவரும் குழாய் இழப்பு

இதற்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் கரு முட்டை வருகின்ற குழாய் இரண்டையும் ஒவ்வொன்றாக இழக்க வேண்டியதாயிற்று.

சில வேளைகளில் கரு முட்டை மிக முன்னதாக, அது வருகின்ற குழாயில் வைத்தே கருத்தரிக்க தொடங்கிவிடும். என்னுடைய நிலையில், அவ்வாறு கரு வளர்ந்து அந்த குழாயையே சிதைத்திருந்தது. அது என்னுடைய உயிருக்கே ஆபத்து என்பதால், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியதாயிற்று.

அறுவை சிகிச்சையில் இருந்து தேற வேண்டும் என்பதால், குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்பதை எண்ணாமல் விட்டுவிடுகிறோம்.

இரண்டாவது அறுவை சிகிச்சையின்போது, அடுத்த கரு முட்டை வருகின்ற இன்னொரு குழாயையும் எடுத்து விடலாமா? என்று மருத்துவர்கள் கேட்டனர்.

இதுவரை குழந்தை இல்லாத ஒரு பெண்ணிடம், நிச்சயம் குழந்தை பெற்றாக வேண்டும் என்று மிகவும் விரும்பும் பெண்ணிடம் இவ்வாறு கேட்பதை சற்று உணர்ச்சியற்ற பேச்சாக உணர்ந்தேன். ஆனால், அவர்கள் தங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதனையே செய்யுமாறு கூறியதாக எண்ணுகிறேன்.

பெற்றெடுக்காத குழந்தைக்கு இறுதிச்சடங்கு

இடம்மாறி கருத்தரிப்பு ஏற்பட்டதால் செய்த இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு பின்னர், அவர்கள் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்து விட்டார்களா? என்று கேட்டு தொலைபேசி அழைப்பு வந்தது.

எட்டு வாரம் வளர்ச்சி பெற்ற கருவுக்கு இறுதிச் சடங்கு என்பது எமக்கே மிவும் ஆச்சரியமாக இருந்தது.

மருத்துவமனையிலுள்ள இறப்புச் சடங்கு அலுவலகத்தை அணுகிக் கேட்டபோது, இறந்த குழந்தை, பிறப்புக்கு முன்னால் இறந்த குழந்தை அனைத்திற்கும் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் உண்டு என்பதை அறிந்து அங்கு சென்றோம்.

இந்த இறுதிச் சடங்கு வழிபாடு மிகவும் நன்றாக இருந்தது. ஆம். நான் என்னுடைய குழந்தையை இழந்திருக்கிறேன். அதுவொரு வெறும் கரு மட்டுமல்ல என்ற உணர்வு ஏற்பட்டது.

10 நிமிடமே நடைபெற்ற இந்த இறுதிச் சடங்கு வழிபாடு எங்களுக்கு மிகவும் உதவியது. இந்த வழிபாட்டை நடத்தியவர். எமது குழந்தை விண்ணகத்தில் இருப்பது பற்றி பேசினார். பெரும்பாலும் மதம் சார்ந்ததாக இருந்த இந்த சடங்கு, என் மனதுக்கு மிகவும் ஆறதல் அளித்தது.

இதற்காக இருக்கின்ற நினைவு, தோட்டத்திற்கு சென்று மலர்கள் வைத்து நேரம் செலவழிப்பது மிகவும் இனிமையான உணர்வை தந்தது.

தளராத நம்பிக்கை

இத்தனையும் அனுபவித்த பின்னரும் நாங்கள் நம்பிக்கையை விட்டுவிடுவதாக இல்லை. எனக்கு எங்களுடைய குழந்தை வேண்டும். நான் என்னுடைய குழந்தையைப் பார்க்க வேண்டும். என்னுடைய கணவர் என்னை திரும்பிப் பார்க்க வேண்டும்.

எனக்கு கருத்தரிக்கும் உணர்வு வேண்டும். என்னுள் குழந்தை வளர்வது, அதனால் ஏற்படும் உணர்வுகள் எல்லாம் அனுபவிக்க வேண்டும். இத்தகைய தருணத்திற்காக நான் என்னுடைய நம்பிக்கையை விட்டுவிட முடியாது.

நான் வித்தியாசமாக உணரும் நேரம் கண்டிப்பாக வரும். மூன்று கரு முட்டைகளை சேமித்து பதப்படுத்தி வைத்திருப்பது இன்னும் உள்ளன. இனிமேலும் எங்களால் செயற்கை கருத்தரிதலை செய்ய முடியாது என்றாலும், இந்த மூன்று கரு முட்டைகளும் எங்களுடைய கடைசி நம்பிக்கை. அவை இருப்பது வரை எமது நம்பிக்கையும் இருக்கும்.

இதுதான் எங்களுக்கு தற்போதைய பாதுகாப்பு போர்வை. இது இல்லையென்றால் வாழ்க்கையின் அம்சத்தை மாற்றி எவ்வாறு வாழப் போகிறோம் என்று முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

குழந்தையை தத்தெடுப்பதை நாங்கள் கருத்தில் கொள்ளலாம். இப்போது அதைப் பற்றி எண்ணவில்லை. என்னிடம் இன்னும் நம்பிக்கை உள்ளது.

புதியவை எப்போதும் நடைபெறுகின்றன. எங்களுக்கு நல்லவை நடைபெறுவதை காண்போம். இதனால் ஒரு மாற்றமாக அதிர்ஷ்டம் எங்களுக்கு வாய்க்கும்.

இது கடினம் தான். என்னுடைய கணவர், குடும்பம் மற்றும் என்னுடைய நண்பர்கள் மூலமாக இதனை அடைவோம். நாங்கள் இதில் ஒரு மனதாக இருக்கிறோம். நான் வெற்றி பெறுவதில் குறியாக இருக்கிறேன்.

தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்