செளதி அரசின் புதிய வரித் திட்டம்: வெளிநாட்டவர் வெளியேற கவுண்ட் டவுன் துவங்கிவிட்டதா?

"இந்த அளவு வரி செலுத்த எங்களுக்கு சக்தியில்லை, எனவே, மனைவி, குழந்தைகளை இந்தியாவிற்கே அனுப்ப வேண்டியதுதான்."இதைச் சொல்வது செளதி அரேபியாவின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் அபா நகரில் பணிபுரியும் கார் மெக்கானிக் முக்தார் அஹமத். வெளிநாட்டினர் மீது புதிய வரி விதிக்கும் செளதி அரசின் முன்மொழிவைப் பற்றித்தான் அஹ்மத் கவலைப்படுகிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption எண்ணெய் வர்த்தக வருவாய் குறைவால், வருமானத்திற்கான புதிய வாய்ப்புகளை தேடும் செளதி அரசு

1996-ஆம் ஆண்டில், அலகாபாதில் இருந்து செளதி அரேபியாவிற்கு பணிபுரிய சென்ற அஹமதுக்கு ஐந்து குழந்தைகள், இப்போது மனைவி மற்றும் குழந்தைகளை தாயகத்திற்கே அனுப்பிவிடும் சிந்தனையில் அவர் இருக்கிறார்.

2016 டிசம்பரில் செளதி அரேபிய அரசின் பட்ஜெட்டில், செளதி அரேபியாவில் குடியேறுபவர்கள் மீது 'குடும்ப வரி' விதிக்கும் முன்மொழிவும் இடம்பெற்றிருந்தது.

அதன்படி, புலம்பெயர்ந்த குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதம் நூறு ரியால்கள் (மாதத்திற்கு 1720 ரூபாய்), வரியாக விதிக்கப்படலாம். இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்.

வரி முன்மொழிவில் குழப்பம்

செளதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வரி முன்மொழிவுகளின்படி, வெளிநாட்டினர் ஒவ்வொருவரும், 2017 ஜூலை முதல் மாதந்தோறும் 100 ரியால்களும், 2018 ஜூலை முதல் மாதத்திற்கு 200 ரியால்களும், 2019 ஜூலை முதல் மாதந்தோறும் 300 ரியால்கள், அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2020 ஜூலை முதல் மாதந்தோறும் 400 ரியால்களும் வரியாக செலுத்தவேண்டும்.

படத்தின் காப்புரிமை SAUDI-EXPATRIATES.COM
Image caption புதிய வரி முன்மொழிவு குறித்த அறிவிப்புகள், செளதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களிடையே வாட்ஸ்-ஆப் குழுக்கள் மூலம் பரவலாக பகிரப்படுகிறது. இந்த செய்தியை பிபிசி சுயாதீனமாக உறுதி செய்யவில்லை.

அதன்படி, இந்த ஆண்டு ஜூலை முதல் தேதியில் இருந்து இந்த வரிகளை செலுத்தவேண்டும். ஆனால், இந்த வரியை எப்போது முதல், எவ்வளவு தொகையை வரியாக செலுத்தவேண்டும் என்று செளதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு தெளிவாக தெரியவில்லை.

இதுகுறித்து, செளதி அரேபியாவில் வசிக்கும் பலரிடம் கேட்டபோது, இதுவரை இந்த வரியை யாரும் கட்டியதில்லை என்றே கூறுகின்றனர்.

இந்த வரி தொடர்பாக செளதி அரேபியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் மத்தியில் குழப்பமும், சர்ச்சையும் தொடர்கிறது தெளிவாகத் தெரிகிறது.

சேமிப்பு முழுவதும் செளதி அரசுக்கே சென்றுவிடும்

15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து செளதி அரேபியாவுக்கு சென்றார் அலி இமான் சித்திகி. மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அவர் ஜுபல் நகரில் வசிக்கிறார்.

"இந்த புதிய வரியால் நாங்கள் அனைவருமே பாதிக்கப்படுவோம். இதுவரை நாங்கள் சிறிதளவு சேமித்துவந்தோம், இனிமேல் சேமிப்பிற்கு பதிலாக, செளதி அரசுக்கு கப்பம் கட்டவேண்டும்."

"இதுவரை கிடைத்த தகவல்களின்படி, நாங்களே வரி கட்டவேண்டும். நிறுவனங்கள் எங்களுக்காக வரி கட்ட மறுத்துவிட்டன. இதை நாங்களே, எங்கள் சம்பளத்தில் இருந்துதான் கட்டவேண்டும். இனிமேல் இங்கு குழந்தைகள் வைத்துக் கொள்வது முடியாத ஒன்றாகிவிடும். தொடக்கத்தில் குடும்பத்தை எங்களுடன் இங்கேயே வைத்துக் கொண்டாலும், ஒருவருக்கு மாதம் 400 ரியால்கள் என்று வரி அதிகமாகும் காலத்தில் அது சாத்தியமற்றுப் போகும்."

படத்தின் காப்புரிமை ALI IMAN SIDDIQUE
Image caption வரி பற்றிய வருத்தத்தில் அலி இமான் சித்திகி, ஜியாவுதின் மற்றும் அப்துரப் அன்சாரி

எனினும், இந்த வரி பற்றிய நம்பிக்கையளிக்கக் கூடிய தகவல்கள் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமான் சொல்கிறார், "இங்கு வேலையும் நிலையாக இல்லாத நிலையில், புதிய வரி நிலைமை மோசமாகிவிடும்".

இமானுடன் இருக்கும் ஜியாவுதின் சொல்கிறார், "குடும்பத்தை கூடவே வைத்துக் கொள்ளலாம் என்ற இயல்பான ஆசை, இந்த புது வரியால் சாத்தியமற்றதாகிவிடும். குடும்பத்தை ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டியதுதான் ஒரே வழி. நிலைமை இப்படியே நீடித்தால், இங்கு வசிப்பதே கேள்விக்குரியதாகிவிடும்".

தொடக்கத்தில் இந்த நடவடிக்கையால் செளதி அரசுக்கு நன்மைகள் இருப்பதாக தோன்றினாலும், நாளடைவில் இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று ஜியாவுதீன் கூறுகிறார்.

அலகாபாதில் இருந்து செளதி அரேபியா சென்றிருக்கும் அப்துரப் அன்சாரி சொல்கிறார், "அரசின் எண்ணம் வெளிப்படையானது, அதிக வெளிநாட்டினரை நாட்டில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. செளதி அரேபியாவில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டதாக எனக்கு தோன்றுகிறது. இங்கு பணிபுரிபவர்கள், முதலில் தங்கள் குடும்பத்தை அனுப்புவார்கள், பிறகு சிறிது காலத்தில் அவர்களும் தாயகத்திற்கே சென்றுவிடுவார்கள்".

படத்தின் காப்புரிமை AFP
Image caption சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய செளதி அரசு இந்த வரியை விதிக்கிறது.

அரசர் காலித் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்துடன் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர் தனது பெயரை வெளியிட விரும்பாமல் தனது கருத்தை மட்டும் பகிர்ந்துக் கொள்கிறார். "குடியிருப்பு உரிமத்தை புதுப்பித்தேன். ஆனால், என்னிடம் இந்த வரியை வசூலிக்கவில்லை. இந்த நிலையில், வரி கொடுக்கவேண்டுமா, தேவையில்லையா என்று எதுவுமே தெரியவில்லை" என்கிறார் பேராசிரியர்.

"வெளிநாடுகளில் இருந்து செளதி அரேபியாவில் குடியேறியவர்கள் இந்த வரியை நினைத்து கவலைப்படுகிறார்கள். இருந்தாலும், சிலர் ஒரு வருடம் மட்டும் இந்த வரியை கொடுத்துப் பார்த்தால்தான் என்ன என்றும் நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு பிறகு ஆண்டுதோறும் வரி அதிகமாகும்போது யாரும் வரியை செலுத்த விரும்பமாட்டார்கள். ஐந்தாயிரம் அல்லது ஆறாயிரம் ரியால் மாத சம்பளம் வாங்குபவர்கள், தங்கள் குடும்பத்தை தாயகம் திருப்பி அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை" என்று பேராசிரியர் கூறுகிறார்.

இந்த வரி விதிக்கப்படுவது பற்றிய எந்தவொரு தகவலோ, அறிக்கையோ தாங்கள் வெளியிடவில்லை என்று, செளதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார். செளதி அரேபியாவில் முப்பது லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர்.

இந்த வரி விதிக்கப்பட்டாலும் பல இந்தியர்கள் செளதி அரேபியாவில் வசிக்கவே விரும்புகிறார்கள். இந்தியாவிற்கு வந்தால் வேலை இல்லாமல் என்ன செய்வது என்பதுதான் அவர்களின் கவலை.

குடும்பத்தினரை பிரிந்து ஓராண்டாக செளதி அரேபியாவில் வசித்து வரும் அப்துல் மொயின் சொல்கிறார், "இங்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் இந்தியாவில் இல்லை. இந்த புது வரி விதிக்கப்பட்டாலும்கூட இங்கு வசிக்கலாம்".

வியாபாரிகள் அதிருப்தி

வரி விதிப்பு இன்னும் அமல்படுத்தப்படாவிட்டாலும், அதன் தாக்கம் இந்திய சமூகத்தினரிடையே பிரதிபலிக்கிறது.

"பலர் கல்விக்கூடங்களில் இருந்து பிள்ளைகளின் பெயரை நீக்குகின்றனர். வேலையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, தொழிலில் ஈடுபட்டவர்களும்கூட, புதிய வரியை பற்றி அதிருப்தி அடைந்துள்ளனர்" என்று பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறுகிறார்.

அவர் சொல்கிறார், "இந்த நிலைமை மோசமாக இருக்கிறது, பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல், சிரமத்தில் இருக்கும் பல இளைஞர்களை எனக்குத் தெரியும்" என்று அவர் கூறுகிறார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால், செளதி அரேபியாவுக்கு ஏற்படும் கடும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய, வெளிநாட்டினர் மீது அந்நாட்டு அரசு வரி விதிக்கும் புது வழியை கண்டறிந்துள்ளது.

செளதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அங்கு நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்பவர்களுக்கு இதுபோன்ற வரி விதிப்பு கிடையாது.

ஜூலைக்காக காத்திருப்பு

ரிஜாவானுதீன் அண்மையில் தனது குடும்பத்தினருக்கு குடியிருப்பு அனுமதியை புதுப்பித்திருக்கிறார். ஆனால் அவரிடம் வரி செலுத்துமாறு கேட்கப்படவில்லை. இந்த புதிய வரி குறித்த நிலை எதுவும் தெளிவாக தெரியவில்லை என்றும், ஜூலை மாதம்வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சொல்கிறார்.

பட்ஜெட்டில் குறிப்பிட்ட பிறகு, இந்த வரியைப் பற்றி செளதி அரசு வேறு எந்த அறிவிக்கையும் வெளியிடவில்லை. எனவே, இந்த வரிவிதிப்பிற்கான முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கலாம். இல்லாவிட்டால் சில துறைகளுக்காவது விலக்கு அளிக்கப்படும் என்றும் பலர் நம்புகின்றனர்.

பிற செய்திகள்:

வெள்ளை மாளிகையில் `ஈத்` விருந்து வழக்கத்தை நிறுத்திய டிரம்ப்

10 ஆண்டுகளில் 10 கருச்சிதைவுகள்: ஒரு தம்பதியின் துயரம்

மசூதியை பாதுகாக்கும் இந்துக் குடும்பம்

கொச்சி மெட்ரோவுக்கு நியமனமான திருநங்கைகள் வீட்டு வசதி கோருகிறார்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்