ராணுவ வலிமையை அதிகரிக்க புதிய போர்க் கப்பலை அறிமுகப்படுத்திய சீனா

சீனா தனது ராணுவத்தை நவீனப்படுத்தும் சமீபத்திய முயற்சியாக, உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட போர்கப்பலை புதன்கிழமையன்று அறிமுகப்படுத்தியது என சீன அரச ஊடகம் தெரிவித்தது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption புதிய போர்க் கப்பலை அறிமுகப்படுத்திய சீனா

கடந்த ஏப்ரல் மாதம், முழுவதும் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலை சீனா அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது இந்த புதிய கப்பல் வெளிவந்துள்ளது.

தென் சீனக் கடலில் தற்போது நிலவிவரும் பதற்றங்களுக்கு மத்தியில், தான் உரிமை கோரும் அக்கடற்பகுதியில் தனது உறுதிப்பாட்டினை நிலைப்படுத்தும் வகையில் அதிகளவு முயற்சிகளை பெய்ஜிங் எடுத்துவருகிறது.

சீனாவின் புதிய 10,000-டன் போர்க் கப்பல் விரிவான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

இந்த போர்க் கப்பலில் ``புதிய விமான பாதுகாப்பு, ஏவுகணை எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன`` எனச் சீனாவின் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனமான ஜின்குவா கூறியுள்ளது.

சிறிய வகை 052டி போர்கப்பல்களின் வாரிசாக, இந்த முதல் வகை 055 போர்க் கப்பல் கருதப்படுகிறது என அரசு நடத்தும் பத்திரிகையான `குளோபல் டைம்ஸ்` கூறுகிறது.

இறையாண்மையைப் பாதுகாக்க

தென் சீனக் கடற்பகுதியின் பிராந்தியத்தை சீனா கைப்பற்றுவதைத் தடுக்கப்போவதாக டிரம்பின் நிர்வாகம் சூளுரைத்துள்ள நிலையில், இப்பகுதியில் தனது ``மறுக்க முடியாத இறையாண்மையை`` சீனா இதன் மூலம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா பலமுறை சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகில் தனது ராணுவக் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பியுள்ளதுடன், இந்நடவடிக்கைகளை முக்கிய கப்பல் மற்றும் விமான பாதைகளுக்கான அணுகலை உறுதிப்படுத்தும் "கடலோடும் சுதந்திரம்" என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

தென் சீனக்கடலை ராணுவமயமாக்குவதாக இரு நாடுகளும், ஒன்றையொன்று குற்றம்சாட்டியுள்ளன.

முக்கிய நீர்வழி பகுதியான இந்தப் பிராந்தியத்திற்காக, போட்டி நாடுகளுக்கு இடையே பல நூற்றாண்டுகளாக பிரச்சனை இருந்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா மற்றும் புரூனெய் ஆகிய நாடுகள் அனைத்தும் போட்டியிட்டு இதனை உரிமை கோருகின்ற.

சீனா , இத்தீவுகளில், விரிவான கட்டட முயற்சிகள் மற்றும் கடற்படை ரோந்து போன்றவை மூலம் இக்கடல் பகுதி மீதான தனது உரிமைகளுக்கு வலு சேர்க்கிறது.

விமானம் தாங்கிக் கப்பல் ஏப்ரல் மாதம் வெளியான நிலையில், அடுத்ததாக வெளியாகியுள்ள இந்த புதிய போர்க் கப்பல் மற்றோரு மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.

சோவியத் ஒன்றியத்தால் கட்டப்பட்டு, உக்ரேனியாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஒரு பழைய விமானம் தாங்கிக் கப்பல் சீனாவிடம் உள்ள நிலையில், இது நாட்டின் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல்.

ராணுவத்திற்கு அதிக செலவு

பொருளாதாரம் விரிவடைந்து கொண்டிருக்கும் நிலையில், சீனா தனது ராணுவப்படைகளை நவீனமயமாக்கி வருகிறது.

சீனா, இந்த ஆண்டு அதன் ராணுவ பட்ஜெட்டை 7% உயர்த்தும் என மார்ச் மாதம் அறிவித்திருந்தது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அதிக அளவு ஒதுக்கீடுகள் இருந்து வந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது வருடமாகத் தனது ராணுவ நிதி ஒதுக்கீட்டை 10% சதவிகிதத்துக்கு குறைவாக உயர்த்தியுள்ளது.

ஆயினும், அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டை விட சீனாவின் ராணுவ பட்ஜெட் இன்னும் குறைவாகவே உள்ளது.

2017ல் சீனா அதன் திட்டமிட்ட பொருளாதார உற்பத்தியில் சுமார் 1.3% பாதுகாப்புக்காக செலவிட திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்கா ராணுவத்தில் சுமார் 3% செலவழிக்கிறது.

அமெரிக்க பொருளாதாரம் பெரியதாக இருப்பதால், டாலர் மதிப்பு வேறுபாடு மகத்தானதாக இருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ராணுவ பட்ஜெட்டை 10% அதிகரிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

இதையும் படிக்கலாம்:

பிரபல சஞ்சிகையின் அட்டைப்படத்தில் செரீனா 'நிர்வாண போஸ்'

சிறைக் கைதிகளை `குஷி`ப்படுத்திய ஆடை அவிழ்ப்பு நிகழ்வு

"தனிப் பெண்ணா? அறை கிடையாது": ஹோட்டல்

பால் கலப்பட சர்ச்சை: குற்றச்சாட்டுகள் உண்டு, நடவடிக்கைகள் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்