கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு

படத்தின் காப்புரிமை Franco Origlia

வத்திக்கானின் பொருளாளரும், ஆஸ்திரேலியாவின் மிக மூத்த கத்தோலிக்க கார்டினலுமான ஜார்ஜ் பெல் மீது ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளுடன் தொடர்புடையது என்று விக்டோரியா மாகாண போலீஸார் கூறுகின்றனர்.

மேலும், கார்டினல் பெல் மீது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக போலீஸ் துணை ஆணையர் ஷேன் பேட்டன் தெரிவித்துள்ளார்.

வத்திக்கானில் இருந்து இயங்கும் கார்டினல் பெல் தன் மீதான குற்றச்சாட்டுக்களை கடுமையாக மறுத்துள்ளார்.

வத்திக்கானின் பொருளாளராக, கார்டினல் பெல் கத்தோலிக்க திருச்சபையில் மூன்றாவது கட்ட அதிகாரத்தில் உள்ளவராக கருதப்படுபவர்.

படத்தின் காப்புரிமை Handout

''கார்டினல் பெல் தன் மீதான களங்கத்தை போக்க, அவரது மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் அனுமதியைப் பெற்ற பின் , விரைவாக ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவார். கார்டினல் பெல்லின் பயண ஏற்பாடுகள் குறித்தும் மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்,'' என்று இன்றைய தினம் (வியாழக்கிழமை) திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

''அவர் நீதிமன்றத்தில் தனது நாளுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை கடுமையாக எதிர் கொள்வார்~, என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் அரச வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெற்றதையடுத்து கார்டினல் பெல் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யும் முடிவை எடுத்ததாக விக்டோரியா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்கள் பற்றிய மேலதிகத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்