டிரம்ப் பயணத்தடை: 6 முஸ்லிம் நாட்டினர் விசா பெற புதிய விதிகள்

பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற 6 நாடுகளின் பிரஜைகளுக்கும், அகதிகளுக்கும் புதிய விசா வரையறையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

இந்த நாடுகளை சேர்ந்தோரும், அகதிகளும் இனிமேல் அமெரிக்கா விசா பெறுவதற்கு, அமெரிக்காவோடு நெருங்கிய குடும்ப அல்லது வர்த்தகத் தொடர்புகள் கொண்டவராக இருக்க வேண்டும் என்று இந்த புதிய வரையறை வலியுறுத்துகிறது.

இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாட்டு மக்களை பாதிக்கின்ற இந்த விதிமுறைகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன.

அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்தடை உத்தரவின் ஒரு பகுதியை உச்ச நீதிமன்றம் அனுமதித்த பின்னர், இந்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய நிர்வாக ஆணை, கீழ் நீதிமன்றங்களால் தடைசெய்யபட்டிருந்தது.

புதிய விதிமுறைகள்படி, நெருங்கிய உறவுமுறையுடைய பெற்றோர், மனைவி, குழந்தை, மருமகன் அல்லது மருமகள், அல்லது அவர்களின் குழந்தைகள் ஆகியோரை தவிர இந்த ஆறு நாடுகளை சேர்ந்த ஏனையோர் அடுத்து வரும் 90 நாட்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்று பிபிசியிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த "நெருங்கிய" உறவுகள் என்பதில் தாத்தாக்கள், பாட்டிகள், அத்தைகள், மாமாக்கள், மருமகள்கள் உறவினர்கள், மைத்துனர்கள், மாமனார்-மாமியார், தூரத்து சொந்தங்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளடங்கவில்லை.

அமெரிக்காவோடு வர்த்தக அல்லது கல்வித் தொடர்புகளுடன் இருப்போருக்கும் இந்த பயணத்தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உறவு முறைகள் நிர்வாக ஆணையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் அல்லாமல், முறையானதாக, ஆவணப்படுத்தப்பட்டதாக, வழக்கமான நடைமுறைப்படியானதாக இருக்க வேண்டும் என்று இதன் வழிகாட்டு நெறிகளில் குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, செல்லுபடியாகும் விசாக்கள் வைத்திருப்போர் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள்.

இந்த ஆணையால் பாதிக்கப்படாத நாட்டை சேர்ந்தவராக, பாஸ்போர்ட்டுடன் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்போரும் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

வாஷிங்டன் நேரப்படி வியாழக்கிழமை இரவு எட்டு மணி முதல் இந்த விதிகள் அமலுக்கு வருகின்றன.

அமெரிக்க உச்ச நீதிமன்றம் இறுதிக்தீர்ப்பு அளிக்கும் வரை நடைமுறையில் இருக்கப்போகும் இந்த புதிய விதிமுறைகள் பெருமளவு சட்ட சவால்களுக்கு வழிவகுக்கும் என்று இந்த நிர்வாக ஆணைக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாதிட்ட வழங்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அக்டோபர் மாதம் வரை மீளாய்வு செய்யப் போவதில்லை. 90 நாட்கள் இந்த புதிய வரையறை நடைமுறையில் இருக்கப்போவதை இது சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்கா வரும் அகதிளுக்கு 120 நாட்கள் தடைவிதித்திருப்பதை நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவில் வாழும் தனி நபரோடு அல்லது அமெரிக்க நிறுவனத்தோடு எந்த வகையிலும் உறவு கொண்டிராதவர் எவரும் அகதி தஞ்சம் கோரி விண்ணப்பித்தால், அரசு அனுமதி மறுக்கலாம்.

50 ஆயிரம் அகதிகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்ற வரையறையை அமெரிக்கா வைத்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இந்த வரம்பு எட்டப்படும் என்று அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த நிர்வாக ஆணையை எதிர்த்து கடந்த 5 மாதங்களாக மனித உரிமைக் குழுக்கள் போராடி வருகின்றன.

பயங்கரவாதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு இந்த தடை மிகவும் அவசியமானது என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இது முஸ்லிம்கள் மீதான தடை என்று விமசகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி மாதம் முதலில் கையெழுத்திடப்பட்ட இந்த பயணத்தடை கீழ் நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்டது. மீளாய்வு செய்யப்பட்ட பயணத்தடை கடந்த மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தப்பட இருந்த சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஹவாய் நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டது.

அதிபர் டிரம்பின் பயணத்தடையின் ஒரு பகுதியை அனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை "தேசிய பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி" என்று டிரம்ப் புகழ்ந்திருக்கிறார்.

இதற்கிடையில், பயணத்தடையால் சிக்கலில் மாட்டித் தவிக்கும் பயணிகளுக்கு உதவ, தன்னார்வக் குழுக்கள் செயலில் இறங்கியுள்ளன. நேரடியாக விமான நிலையங்களுக்குச் சென்று, அங்கு சிக்கலைச் சந்திக்கும் நபர்களுக்கு உதவுவதற்காக, தங்கள் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன.

டிரம்பின் பயணத்தடைக்கு உச்சநீதிமன்றம் பாதி அனுமதி

தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்