வத்திகான் வாசலுக்கே வந்திருக்கும் பாலியல் துஷ்பிரயோக வழக்கு

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான வத்திக்கானின் பொருளாளர் கார்டினல் ஜியார்ஜ் பெல் தனது சொந்த ஊரான ஆஸ்திரேலியாவில் நீண்டகாலமாக தான் பலமுறை பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக பதியப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கடுமையாக மறுத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகள் நீடித்த புலன்விசாரணைகளின் போது தனக்கு எதிராக திட்டமிட்டு மிகப்பெரிய அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.

கார்டினல் ஜியார்ஜ் பெல் மீதான புகார்கள், பாலியல் துஷ்பிரயோக பிரச்சனையை கத்தோலிக்கத்திருச்சபையின் தலைநகரான வத்திக்கானின் வாசலுக்கே கொண்டுவந்திருக்கிறது.

இவர் பல புகார்களை எதிர்கொள்கிறார். அடுத்த மூன்றுவாரங்களில் மெல்போர்ன் மேஜிஸ்ட்ரேட்கள் முன்பு இவர் ஆஜராகவிருக்கிறார்.

காவல்துறையின் நீண்ட புலனாய்வின் இறுதியில் இது வந்திருக்கிறது.

ஆனால் சிட்னி மற்றும் மெல்போர்னின்முன்னாள் பேராயராக பணிபுரிந்த கார்டினல் ஜியார்ஜ் பெல்லோ ஆஸ்திரேலியா சென்று நீதிமன்றத்தில் தோன்றி தன்மீதான களங்கத்தை துடைப்பேன் என்கிறார்.

ஊடகங்களின் ஒரு பிரிவினர் தன்னை களங்கப்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் இவர் முன்பு குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பாக ரோமில் பேசிய கார்டினல், தொடர் பொய்பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டவராக தன்னை வர்ணித்ததோடு, தன் மீதான புகார்களை கடுமையாக மறுத்தார்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்து பெல்லார்ட் நகரில் பிறந்தவர் கார்டினல் பெல். அங்கே அருட்தந்தையாக பணிபுரிந்த 1970 காலகட்ட சம்பவங்களை ஒட்டியே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

வத்திக்கானின் நிதித்துறையை சீர்திருத்துவதற்காக இவரை பொருளாளராக நியமித்தார் போப் பிரான்ஸிஸ். பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் துறவிகளை சகித்துக்கொள்ளமாட்டேன் என போப் முன்பு கூறியிருந்தார்.

கார்டினல் தன் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க இப்போது அவர் அனுமதித்திருக்கிறார்.

இவர் மீதான புகார்கள் குறித்த விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. அவற்றை வெளியிடுவது குறித்து நீதிமன்றம் அடுத்தவாரம் முடிவு செய்யும்.

கத்தோலிக்கத்திருச்சபை மீதான நாள்பட்ட பாலியல் துஷ்பிரயோக சர்ச்சைகளில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வத்திக்கானின் மிக உயர் பதவி வகிப்பவர் இந்த ஆஸ்திட்ரேலிய கார்டினல் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்