அமலுக்கு வந்தது அமெரிக்க பயணத்தடை: முஸ்லிம்களுக்கு எதிரானதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆறு முஸ்லிம் நாடுகளும் அமெரிக்க பயணத்தடையும்

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாடுகளைச்சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிரான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தற்காலிக பயணத்தடை அமலுக்கு வந்திருக்கிறது.

பயங்கரவாதிகள் அமெரிக்காவுக்குள் வருவதை தடுப்பதற்கு இந்த தடை அவசியம் என ட்ரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

ஆனால் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதால் இந்த தடை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று பலர் வாதாடுகின்றனர்.

வியாழன்முதல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறுநாடுகளைச் சேர்ந்த பயணிகள் 90 நாட்களுக்கும், அகதிகள் 120 நாட்களுக்கும் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அதிபர் ட்ரம்பின் தடையில் இருந்து யாருக்கு விலக்களிக்கப்படலாம் என்பது குறித்த தனது பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் திங்களன்று அறிவித்தது. அமெரிக்க குடிமகன் அல்லது நிறுவத்துடன் உண்மையான தொடர்புடையவர்கள் அமெரிக்கா வர நீதிமன்றம் அனுமதித்தது.

இது தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்துள்ள விளக்கத்தில், அமெரிக்க குடிமகனின் பெற்றோர், பிள்ளைகள், மனைவி, குழந்தைகள், உடன்பிறந்தவர், மருமகன், மருமகள், பெற்றோரின் இரண்டாவது/மூன்றாவது துணைகளுக்கு பிறந்தவர்கள் உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் கல்வி அல்லது தொழில்தொடர்புகள் இருப்பவர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் இந்த தொடர்புகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, மாமன், மாமி அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கு அனுமதியில்லை.

அகதி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட எல்லா அகதிகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

இதற்கு எதிராக ஹவாய் மாகாணம் ஏற்கனவே நீதிமன்றம் சென்றிருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் யார் என்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் விளக்கம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக இருப்பதாக அது வாதிட்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்