ஹாங்காங்: “சீன இறையாண்மைக்கு சவால் விட கூடாது” - ஷி ஜின்பிங் எச்சரிக்கை

பதவியேற்ற பின்னர், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் கைகுலுக்கும் கார்ரியே லாம் படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஹாங்காங்கின் தலைமை பெறுப்பு வகிக்கும் முதலாவது பெண்ணான கார்ரியே லாம் மாறியுள்ளார்

ஹாங்காங் மீதான சீனாவின் அதிகாரத்திற்கு அனுமதிக்க முடியாத சவால்களை விடுப்பதற்கு எதிராக சீன அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்திருக்கிறார்.

பிரிட்டனிடம் இருந்து சீனா மீண்டும் ஹாங்காங்கை பெற்றுக் கொண்ட 20 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகையில், ஹாங்காங்கின் புதிய தவைலர் கார்ரியே லாமின் பதவியேற்பில் பேசியபோது ஷி ஜின்பிங் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

பலத்த போலிஸ் பாதுகாப்போடு நடைபெற்ற, கொடியேற்ற நிகழ்வு உள்பட பல ஆடம்பர நிகழ்ச்சிகளில் ஷி ஜின்பிங் பங்கேற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், இந்த இடத்திற்கு அருகில் ஜனநாயக ஆதரவு மற்றும் சீன ஆதரவு ஆர்ப்பாட்டக்கார்ர்களுக்கு இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளன. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2013 ஆம் ஆண்டு ஷி ஜின்பிங் அதிபராக பதவி ஏற்ற பின்னர் ஹாங்காங்கில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. பல மாதங்களாக ஜனநாயக ஆதரவுப் பேரணிகள் இந்த பிரதேசத்தை முடக்கிப் போட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஷி ஜின்பிங் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அப்பிரல்லா போராட்டத்தின் அடையாளமான மஞ்சள் குடை பிடித்தவாறு சீன அதிபர் ஷி ஜின்பிங் இருப்பது போன்ற கட்-அவுட்டை போராட்டக்காரர்களில் ஒருவர் கொண்டு வந்திருந்தார்

ஷி ஜின்பிங் மேற்பார்வையில், ஹாங்காங்கில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய செயல் தலைவியான கார்ரியே லாமும், அவரது அமைச்சரவையினரும் பதவி ஏற்றுக்கொண்டனர். ஹாங்காங்கின் தலைமை பெறுப்பு வகிக்கும் முதலாவது பெண்ணாக கார்ரியே லாம் மாறியுள்ளார்.

ஷி ஜின்பிங் உரையாற்றியபோது, "தேசிய இணையாண்மையை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை நிலைநிறுத்தக்கூடிய அமைப்புக்களை ஹாங்காங் மேம்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"சீனாவின் இணையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு முயற்சிகள், மத்திய அரசின் அதிகாரத்திற்கு சவால் விடுப்பது.... அல்லது ஊடுருவுவதற்கு ஹாங்காங்கை பயன்படுத்துவது மற்றும் சீனப் பெருநிலப்பகுதிக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபடுவது அனைத்தும், சிவப்பு கோடு வரம்பை தாண்டுகின்ற செயல்பாடாக அமையும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்று அவர் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
போலீஸோடு மோதும் ஒரு போராட்டக்காரர்

இதற்கு முன்பு இருந்ததைவிட ஹாங்காங் இப்போது அதிக சுதந்திரத்தை அனுபவித்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

"ஒரு நாடு, இரு அமைப்புகள்" என்ற கொள்கையின்கீழ் ஹாங்காங்கின் அடிப்படை சட்டம் பரந்த அளவிலான சுதந்திரங்களை வழங்குகிறது. உலகளாவிய வாக்குரிமை சுதந்திரத்தை வழங்க சீனா மறுத்து வருவது வன்முறை மிகுந்த மோதல்களை ஹாங்காங்கில் தூண்டியுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் தங்களுடைய 5 உறுப்பினர்களை போலீஸ் கைது செய்திருப்பதாக ஜனநாயக ஆதரவு கட்சியான டிமோசிஸ்டோ தெரிவித்திருக்கிறது. சமூக ஜனநாயக லீக்கை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

கைது செய்யப்பட்டுள்ளோர் குழுவினரில் அம்பிரல்லா போராட்ட இயக்கத்தின் தலைவரான ஜோசுவா வாங்கும் அடங்கியுள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் கொடியேற்ற இருந்த வான்சாய் மாவட்ட சதுக்கத்திற்கு செல்ல சமூக ஜனநாயக லீக் மற்றும் டெமோசிஸ்டோ தலைவர்கள் ஒன்றுகூடினர்.

பிற செய்திகள்

ஹாங்காங் வாக்குரிமையில் அதிக உரிமைகள் வழங்கவும், சீன கொள்கை எதிர்ப்பாளர் லியு சியாவ்போவை உடனடியாக விடுதலை செய்யவும் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption ஹாங்காங் தங்க பௌஹினியா சதுக்கத்தை கொடிகளை சுமந்தவாறு தாண்டி செல்லும் ஹெலிகாப்டர்கள்

ஆனால், எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீஸூக்கு இடையில் சண்டை மூண்டது. பின்னர் சீன ஆதரவாளர்கள் கொடிகளை அசைத்து கொண்டும், நாட்டுப்பற்று இசையை முழக்கி கொண்டும் அங்கு வந்தனர். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கத்தி வசைசொற்களால் மோதிகொண்டனர்.

இந்த மோதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அவ்விடத்தில் கூடியது சட்டப்பூர்வமற்றது என்று கூறி ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் தலைவர்கள் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்ட பிறகுதான் இந்த மோதல் முடிவுக்கு வந்தது.

பிரிட்டனின் ஆட்சியில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் கையளிக்கப்பட்ட 20வது ஆண்டு விழாவை அடையாளப்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்வில், சீனா மற்றும் ஹாங்காங்கின் கொடிகள் அருகருகே ஏற்றப்பட்டன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சனிக்கிழமை நடைபெற்ற சடங்கில் சீன மற்றும் ஹாங்காங் கொடிகள் ஏற்றப்பட்டன

மத்திய ஹாங்காங்கில் தங்க பௌஹினியா சதுக்கத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வின்போது, மேலே ஹெலிகாப்டர்கள் கொடியோடு பறக்க பார்வையாளர்கள் அதனை பார்த்து ஆரவாரம் செய்தனர்.

வெள்ளிக்கிழமையன்று மாநாட்டு மையத்திற்கு அருகிலுள்ள அதிகாரப்பூர்வ போராட்ட மண்டத்தில் "ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிறுத்து" என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்கினர்.

இந்த மாநாட்டு மையத்தில்தான் கொண்டாட்ட விருந்தும் பல்வகை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், கடுமையான பாதுகாப்பு அங்கு போடப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption “என்னுடைய நாடு” பாடலை பாடுவோரோடு சோந்து பாடும் சீன அதிபர் ஷி ஜின்பிங் (சிவப்பு டைய் அணிந்து கொண்டு வலது மையத்தில்)

அதிக அளவிலான சுதந்திரம் கொடுக்கப்படும் என்று சீனா வாக்குறுதி அளித்திருந்தாலும், ஹாங்காங்கிற்குள்ள அதிக அரசியல் சுதந்திர பாரம்பரியங்களை சீன மத்திய அரசு புறக்கணிப்பதாக கவலைகள் அதிகரித்து வருகின்றன.

ஜனநாயக ஆதரவு மற்றும் சீன ஆதரவாளர்களை பிரிப்பதற்கு முயன்ற இடத்தில் இந்த இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.

பொது மக்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு ஷி ஜிங்பின் மட்டும்தான் காரணம் என்று ஜனநாயக ஆதரவு செய்பாட்டாளர்களில் ஒருவரான வாங், முன்னதாக ஆர்ப்பாட்டகாரர்களிடம், கூறியிருந்தார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஹாங்காங்கின் சின்னமான பௌஹினியா மலரின் தங்க சிலையில் ஏறி சங்கிலியால் பிணைத்து கொண்ட போராட்டக்காரர்கள்

ஹாங்காங்கின் சின்னமான பௌஹினியா மலரின் தங்க சிலையில் ஏறியதால், "பொது தொல்லை சட்டத்தை" மீறியதற்காக வாங்கும் 25 பிற செயற்பாட்டாளர்களும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இந்நகரத்தின் துறைமுகத்தின் முன்னிலையில் இருக்கின்ற இந்த சிலை, சீனா வழங்கிய பரிசாகும். பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவுக்கு வழங்கியதை அடையாளப்படுத்தும் அறிகுறியாகவும் இது விளங்குகிறது.

100 பெண்கள் தொடர்: ஹாங்காங் போராளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
100 பெண்கள் தொடர்: ஹாங்காங் போராளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்