சிரியா போர்: டமாஸ்கசில் கார் தற்கொலை குண்டுத் தாக்குதல், 19 பேர் பலி

சிரியா தலைநகர் டமாஸ்கசில் தற்கொலை கார் குண்டுதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக அரசு தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

படக்குறிப்பு,

தலைநகரில் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் குண்டு வெடிப்பை நிகழ்த்த தாக்குதல்தாரிகள் திட்டமிட்டிருந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது

தலைநகருக்குள் நுழைய முயன்ற கார் குண்டுதாரிகள் என சந்தேகிக்கப்படும் 3 நபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர்.

இரண்டு கார்களைத் தடுத்து நிறுத்திய நிலையில், மூன்றாவது நபர், நகரின் கிழக்குப் பகுதி வழியாக தஹரிர் சதுக்கத்தில் நுழைந்தார். போலீசார் சுற்றி வளைத்ததும் தன்னைத் தானே வெடிக்க வைத்து உயிரிழந்தார்.

ஆறு ஆண்டுகால உள்நாட்டுப் போரின் மத்தியில் சிக்கிக் கொண்டிருக்கும் சிரியாவில், டமாஸ்கஸ் நகரின் பெரும்பாலான பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஞாயிறன்று நடைபெற்ற இந்த வெடிகுண்டு தாக்குதலில் , குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானிற்கு பிறகான முதல் வேலை நாளின் போது தலைநகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் குண்டு வெடிப்பை நிகழ்த்த தாக்குதல்தாரிகள் திட்டமிட்டிருந்ததாக சிரியா அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி, காலை 6 மணிக்கு துப்பாக்கிச் சத்தமும், அதன் பிறகு குண்டுவெடிப்புச் சத்தமும் கேட்டதாகவும், அதன் தாக்கத்தால் அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதாகவும் உள்ளூர்வாசி ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

2011-ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக துவங்கிய போராட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட சிரியா உள்நாட்டுப் போரில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மோதல் துவங்கியதிலிருந்து இதுவரை 5.5 மில்லியன் மக்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், 6.3 மில்லியன் மக்கள் உள்நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நாவின் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

டமாஸ்கஸ் நகரின் பெரும்பாலான பகுதிகள் சிரியா அதிபர் பஷார்-அல்-அசாதின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்தப் பகுதியில் அதிக அளவு சண்டை தவிர்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த மார்ச் 31-ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உட்பட பல தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல்கள் தலைநகரில் நடைபெற்றுள்ளன.

இரசாயனத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் பதிலடி: அமெரிக்கா எச்சரிக்கை

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்