நான் நவீன கால அதிபர் - டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் சமூக வலைதள பயன்பாட்டை தொடர் டிவீட்டுக்களின் மூலம் நியாயப்படுத்தியுள்ளார். முன்னதாக எம்.எஸ்.என்.பி.சி. தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இருவர் குறித்து அவர் தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு உள்ளானது.

படத்தின் காப்புரிமை Getty Images

"நான் சமூக ஊடகத்தைப் பயன்பயன்படுத்துவது அதிபராக அல்ல- நவீன கால அதிபராக", என்று சனிக்கிழமையன்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், மிகா ப்ரஸென்ஸ்கி மற்றும் ஜோ ஸ்கேர்பரோ ஆகியோர் மீது, அதிபர் டிரம்ப் தனிப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருந்தார்.

வெள்ளை மாளிகை அவருக்கு ஆதரவாகக் களமிறங்கினாலும், அவரின் ட்விட்டர் கருத்துக்கள் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினரால் ஒரு சேர கண்டிக்கபட்டது.

டிரம்பின் உதவியாளர்கள் அவருடைய டிவீட்டுக்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தனர்.

"போலி செய்திகள்" என்று டிரம்ப் தொடர்ந்து டிரம்ப் கூறிவரும் உள்ளடக்கங்களை வெளியிடும் முக்கிய ஊடகங்களை புறக்கணித்துவிட்டு மக்களுடன் நேரடியாக தம்மை இணைத்துக்கொள்ள சமூக ஊடகங்கள் உதவுவதாக அவர் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.

"போலியான மற்றும் பொய் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் நான் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக் கூடாதென்று, குடியரசு கட்சியினரையும் பிறரையும் நம்ப வைக்க கடுமையாக உழைத்து வருகின்றன," என்றும் "நான் 2016-இல் நடந்த அதிபர் தேர்தலில் பேட்டிகள், பேச்சுகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகவே வெற்றி பெற்றேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்," என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை @realDonaldTrump/Twitter

அமெரிக்காவின் சி.என்.என் செய்தி ஊடகம், அதிபரின் உதவியாளர் ஒருவர் அமெரிக்க காங்கிரசால் விசாரிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வெளியிட்ட ஒரு கட்டுரையை திரும்பப் பெற்றுக்கொண்டபின், அந்நிறுவனத்தின் மீதான தாக்குதலை டிரம்ப் அதிகரித்துள்ளார்.

"கடைசியாக சி.என்.என் போலி செய்தி வெளியிடும் நிறுவனம் என்பதும் அவர்களுடையது குப்பை இதழியல் என்பதும் வெளிப்பட்டிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது," என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த கட்டுரை, சி.என்.என் இணையதளத்திலிருந்து, ஒரு உள் விசாரணைக்குப் பின் நீக்கப்பட்டது. அதன் விளைவாக அந்நிறுவனத்தின் புலன் விசாரணை பிரிவின் ஆசிரியராக இருந்த தாமஸ் ஃபிராங்க், அப்புலன் விசாரணையைக் கண்காணித்த புலிட்சர் பரிசு பெற்ற எரிக் லிக்ட்ப்லா மற்றும் லெக்ஸ் ஹாரிஸ் ஆகியோர் பணி விலகினர்.

டிரம்ப் சி.என்.என் நிறுவனத்தை தொடர்ந்து "போலி செய்தி" என்றும், முன்னதாக பஸ்ஃபீட் செய்தி இணையத்தை "தோற்றுக்கொண்டிருக்கும் குப்பை குவியல் " என்றும் கூறியிருந்தார். பிப்ரவரியில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் பிபிசியின் வட அமெரிக்க ஆசிரியர் ஜோன் சோபெலை அறிமுகம் செய்து வைத்தபோது, "இதோ, இங்கு இன்னொரு அழகு," என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Drew Angerer/Getty Images

இதனிடையே, வாஷிங்டனில் உள்ள ஜான் எஃப் கென்னடி நிகழ்த்து கலை மையத்தில் சனிக்கிழமையன்று, முன்னால் ராணுவத்தினரிடையே உரையாற்றிய டிரம்ப், அமெரிக்கா "மீண்டும் வெற்றிபெறும்" என்று உறுதியளித்து, ஊடகங்களை தாக்கி பேசியது அங்கு கூடியிருந்தவர்களிடையே மிகுந்த உட்சாகத்தை ஏற்படுத்தியது.

"இந்த போலி ஊடகங்கள் நம்மை நிசப்தமாக்க முயல்கின்றன. ஆனால் நாம் அவர்களை அதை செய்ய விடமாட்டோம்," என்று சுதந்திரத்தை கொண்டாடுவோம் எனும் பேரணியில் அவர் கூறினார். "அந்த போலி ஊடகங்கள் நாம் வெள்ளை மாளிகையை அடைவதிலிருந்து நம்மை தடுக்க முயன்றன. ஆனால் இப்போது நான்தான் அதிபர், அவர்களல்ல," என்றார் டிரம்ப் .

பிற செய்திகள்

அமெரிக்க அதிபரை ட்விட்டரில் 3.3 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். தன் பதிவுகள் மூலம் பின்தொடர்வோரை அதிர வைப்பது அவருக்கு கூடுதல் கடினமானதாக தெரிந்தாலும், அவரின் 140 எழுத்துக்களைக் கொண்ட பதிவுகள் அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்களால் ஒருங்கே கண்டிக்கப்படுகின்றன.

டிரம்ப் வகிக்கும் மதிப்பு மிக்க பொறுப்பிற்கு அவர் பயன்படுத்தும் மொழி நடை பொருத்தமானதாக இல்லை என்று சிலர் கருதுகின்றனர். வெள்ளிக்கிழமையன்று, நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ், "நிறுத்துங்கள். உடனே நிறுத்துங்கள்." என்று மூன்று சொற்களை மட்டும் கொண்ட தலையங்கத்தை வெளியிட்டது.

வியாழக்கிழமை காலை, எம்.எஸ்.என்.பி.சி மார்னிங் என்னும் நிகழ்ச்சியின் வழங்குனர் மிகா ப்ரஸெசின்க்ஸீயை நகையாடி, தான் அவரை ஆறு மாதத்திற்கு முன்பு பார்த்தபோது அவர் "முக புதுப்பிப்பு அறுவைசிகிச்சையால் மோசமாக ரத்தப்போக்குக்கு ஆளாகியிருந்தார்," என்று டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருந்ததை தொடர்ந்து அந்த தலையங்கம் வெளியிடப்பட்டது.

படத்தின் காப்புரிமை Reuters

அவரின் சக வழங்குனர் மற்றும் கூட்டாளியான ஸ்கேர் போரோவையும் மிக மோசமான வசவாக "மன நோயாளி" என்று தாக்கியிருந்தார்.

ப்ரஸெசின்க்ஸீ மற்றும் ஸ்கேர்பரோ ஆகிய இருவரும், அதிபருக்கு தங்கள் இருவர் மீதும் "ஆரோக்கியமற்ற பெருவிருப்பம்" இருப்பதாக விமர்சனம் செய்திருந்தனர். தங்கள் நிகழ்ச்சியில் டிரம்ப் மீதான எதிர்மறை விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்கும்படி வெள்ளை மாளிகையால் தாங்கள் மிரட்டப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

டிரம்பின் கருத்துக்கள் அதிபர் அலுவலகத்தின் தரத்தை விட "கீழானவை" என்று செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் கூறியியுள்ளார். அவரின் சக குடியரசு கட்சி உறுப்பினர் பென் சாசே "இது இயல்பானதல்ல மற்றும் அதிபர் அலுவலகத்தின் கண்ணியத்திற்கு கீழானது" என்று கூறியுள்ளார்.

விமர்சனங்களுக்கு உள்ளானபோதும், மிகா ப்ரஸெசின்க்ஸீ மீதான தாக்குதலை அதிகப்படுத்திய டிரம்ப் , சனிக்கிழமை அவரை "பாறையைப் போல உணர்ச்சியற்றவர்," என்று கூறியுள்ளார்.

மோடி- டிரம்ப் சந்திப்பு: ஆண்டுக்கு 50,000 இந்தியர்கள் பயனடைவார்களா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மோடி- டிரம்ப் சந்திப்பு: ஆண்டுக்கு 50,000 இந்தியர்கள் பயனடைவார்களா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்