பிரான்ஸ் அதிபர் மக்ரோங் வருகை எதிரொலி: அல்-கய்தா வீடியோவில் மாலி பிணைக் கைதிகள்

பிரான்ஸ் அதிபர் இமான்வெல் மக்ரோங்கின் மாலி வருகையையொட்டி, அந்த நாட்டில் செயல்படும் அல்-கய்தா துணை அமைப்பு ஒன்று, ஆறு வெளிநாட்டு பிணைக் கைதிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை SITE
Image caption சோஃபி பெட்ரோனின். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உதவி வழங்குவதற்கான என்ஜிஓ-வை நடத்தி வந்த அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், காவோ நகரில் கடத்தப்பட்டார்

பிரான்ஸ் தொண்டு நிறுவன ஊழியர், வயோதிக நிலையில் உள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர், கொலம்பியாவை சேர்ந்த செவிலியர் உள்ளிட்டோர் அதில் அடங்குவர்.

பிணைக்கைதிகளை விடுவிக்க எந்தவொரு உண்மையான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று அந்த விடியோவில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக பிராந்திய படையை அமைக்கும் நடவடிக்கைக்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்குடன் அதிபர் மக்ரோங், மாலி வந்துள்ளார்.

மாலி தலைநகர் பமாகோவில் பேசிய அவர், "பிரான்ஸும் "சாஹெல் ஜி5" நாடுகளான மாலி, புர்கினா ஃபாஸோ, சத், மெளரிடானியா மற்றும் நிகெர் ஆகியவை பயங்கரவாதிள், குண்டர்கள், கொலைகாரர்கள் ஆகியோரை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிற செய்திகள்:

அல்-கய்தா விடியோவில் காணப்பட்ட பிணைக் கைதிகளில் சோஃபி பெட்ரோனின் என்பவரும் ஒருவர். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உதவி வழங்குவதற்கான என்ஜிஓ-வை நடத்தி வந்த அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், காவோ நகரில் கடத்தப்பட்டார்.

வீடியோ காட்சியை விவரித்தவர், பிரான்ஸ் அதிபர் மக்ரோங், தாம் திரும்பவும் குடும்பத்துடன் வசிக்க உதவுவார் என்று பெட்ரோனின் நம்புவதாகக் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிணைக் கைதி ஸ்டீஃபன் மெக் கெளன், தனது மீளா துயரம் எப்போது முடிவுக்கு வரும் என்று எழுப்புகிறார்.

படத்தின் காப்புரிமை SITE
Image caption 2011ஆம் ஆண்டிலிருந்து மெக் கெளன் பிடித்து வைக்கப்பட்டுள்ளார்

"இப்போது புதிய வீடியோவில் பேசுகிறோம். ஆனால், என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றையும் கடந்த காலத்திலேயே பேசினோம்" என்றார் அவர்.

மாலியில் பிரான்ஸ் அதிபரும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ள நேரத்தில் இந்த விடியோ வெளியிடப்பட்டுள்ளதாக பலரும் நம்புவதற்கு வழிவகுக்கிறது.

இந்த பிராந்தியத்தில் அல்-காய்தாவின் துணை அமைப்புகள் முக்கிய ஜிகாதி அச்சுறுத்தல் சக்திகளாகத் திகழ்வது நினைவில் கொள்ளத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில பிணைக்கைதிகள் கடத்தப்பட்டனர். அண்மையில் சிலர் கடத்தப்பட்டனர்.

நீண்ட காலத்துக்கு பிணைக் கைதிகளை தடுத்து வைத்திருப்பதும், புதியவர்களை கடத்துவதும் எந்த அளவுக்கு பிணைத்தொகையை நம்பி அல்-கய்தா செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு பாதுகாப்புப் படையினர் சாஹெலில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு மிக அதிகளவிலான பாதுகாப்புக்கு படையை அனுப்புவது பற்றிய விவாதமும் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், போதுமான உள்கட்டமைப்புகள் இல்லாததால் ஜிகாதி குழுக்கள் அங்கு ஆதிக்கம் செலுத்த வாய்ப்புகள் அனுமதிக்கின்றன என்றும் வறிய நிலையில் உள்ள இந்த பிராந்தியத்தில் அரசியல் தீர்வுகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

டிம்புட்குவில் உள்ள ஹோட்டலில் 2011-ஆம் ஆண்டில் மெக் கெளன் கடத்தப்பட்டார். அவருடன் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜோஹன் குஸ்டஃப்சன், டென்மார்க்கை சேர்ந்த ஸ்ஜாக் ரிஜிகே ஆகியோரும் கடத்தப்பட்டனர். இதில் ஜோஹன் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டார். ஸ்ஜாக் ரிஜிகே 2015-இல் பிரெஞ்சு சிறப்புப் படைகளால் மீட்கப்பட்டார்.

வீடியோவில்,80 வயதுடைய ஆஸ்திரேலியாவை சேர்ந்த கென் எலியாட் உள்ளார். கடந்த 2015, ஜனவரியில் தனது மனைவி ஜோஸிலினுடன் சேர்த்து டிஜிபோ நகரில் அவர் கடத்தப்பட்டார். அந்த நகரில் ஒரே மருத்துவ வசதிகள் நிலையத்தை இந்த தம்பதி நடத்தி வந்தது. இருவரில் ஜோஸ்லின் கடந்த 2016, பிப்ரவரியில் விடுவிக்கப்பட்டார்.

வீடியோவில் பேசிய கெளன், "எனது குடும்பத்துக்கு... உங்களை எல்லாம் நேசிக்கிறேன் என மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்..." என கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

வீடியோவில் காணப்படும் மற்றவர்களில் ஒருவரான, ரோமேனியாவைச் சேர்ந்த சுரங்க ஊழியர் லுலியான் கெர்குட், 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புர்கினா ஃபாசோவில் தான் கடத்தப்பட்டதாகக் கூறுகிறார்.

ஸ்விஸ் மதபோதகரான பீட்ரைஸ், 2016-ஆம் ஆண்டு ஜனவரியிலும், கொலம்பியாவைச் சேர்ந்த செவிலியர் குளோரியா அர்கோட்டி கடந்த பிப்ரவரி மாதம் மாலியிலும் கடத்தப்பட்டனர்.

17 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த வீடியோவை, இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படும் குழு என அழைத்துக் கொள்ளும் குழு வெளியிட்டுள்ளது.

மாலியில் இருந்து செயல்படும் ஜிகாதி குழுவான அன்சர் டைன், அல் - மெளரபிடோன் மற்றும் இஸ்லாமிய மக்ரெப் அல் - காய்தா (ஏக்யூஐஎம்) சஹாரா பிரிவும் இணைந்த பிறகு இந்த விடியோவை வெளியிட்ட குழு கடந்த மார்ச் தொடக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் கிஃப்ட் ஆஃப் தி கிவர்ஸ் என்ற தொண்டு நிறுவனம் கூறுகையில், பிணைக் கைதியாக உள்ள மெக் கெளனை விடுவிக்க அல்-கய்தா இஸ்லாமிக் மக்ரெப் அமைப்பின் மூத்த தலைவர்கள் உடன்பட்டதாகவும் அதை அந்த அமைப்பின் இளைய உறுப்பினர்கள் தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தது.

மாலியின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த இஸ்லாமிய ஆதரவு மற்றும் துவாரெக் கிளர்ச்சியாளர்களை, பிரெஞ்சு படைகள் முறியடித்த பிறகு மாலியின் பாதுகாப்பு நிலைமை 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக மோசமடைந்தது.

பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள, 5,000 வலிமையான படையினர் கொண்ட படைத்தளத்தை மத்திய மாலியின் செவாரேவில் உருவாக்க, சஹெல் ஜி5 நாடுகளின் மிகப் பெரிய ஆதரவை மக்ரோங் கோருகிறார்.

பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடும் அதே வேளை, பிராந்தியத்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், ஆளுகை மேம்படு்த்துதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்தும் முயற்சியை இணையாக மேற்கொள்ள வேண்டும் என்றார் மக்ரோங்.

இந்த பிராந்தியத்தில் 4,000 பிரெஞ்சு துருப்புகள், 12,000 ஐ.நா. அமைதிப்படையினர் தற்போது உள்ளனர்.

கடந்த மாதம், மாலி தலைநகர் பமாகோ நகரில் உள்ள சுற்றுலா விடுதிக்குள் அல்-கய்தா தொடர்புடைய ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில், போர்ச்சுகீஸ், மாலி ஆகியவற்றின் தலா ஒரு படை வீரர், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பணியாற்றும் மாலியின் ஒரு பெண்மணி, சீனா, கபோன் ஆகியவற்றைச் சேர்ந்த தலா ஒருவர் உள்பட மொத்தம் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

பிபிசியின் பிற செய்திகள்:

ஜி.எஸ்.டி வரி என்றால் என்ன? (காணொளி)

''போக்குவரத்து விதிமுறையில் தவறிழைத்ததே காரணம்''; வழக்கை சந்திக்கும் வீனஸ் வில்லியம்ஸ்

காஷ்மீரில் நீண்ட போராட்டத்துக்கு பின் இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்