நிபந்தனைகளை நிறைவேற்ற கத்தாருக்கு மேலும் 48 மணிநேர அவகாசம்

செளதி அரேபியா மற்றும் மூன்று பிற அரபு நாடுகள், தாங்கள் விதித்த கோரிக்கைகளை நிறைவேற்ற கத்தாருக்கு மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

இரண்டு நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் கத்தார் கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைக்குள் அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

திங்களன்று, தனது அதிகாரப்பூர்வ பதிலை, கடிதமாக குவைத்திற்கு வழங்குவதாக வளைகுடா நாடான கத்தார் தெரிவித்திருந்தது.

கத்தார் தீவிரவாதத்திற்கு நிதி ஆதரவு வழங்குவதாக அண்டை நாடுகளால் குற்றம் சுமத்தப்பட்டது; ஆனால் கத்தார் அதனை மறுக்கிறது.

தொடர்புடைய பிற செய்திகள்:

இந்த வளைகுடா நெருக்கடிக்குத் தீர்வு காணும் முயற்சிகளில், முக்கிய மத்யஸ்தராகச் செயல்படும் குவைத்தின் அரசரிடம், கத்தாரின் அரசர் வழங்கிய கடிதத்தை வழங்குவதற்காக கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் திங்களன்று குவைத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

சனிக்கிழமையன்று இந்த கோரிக்கைகளை கத்தார் நிராகரித்துவிட்டதாக கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக்-முகமத்-பின்-அப்துல் ரஹ்மான்-பின்-ஜசிம்-அல்-தனி தெரிவித்தார்; ஆனால் நியாயமான நிலைகளில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை இல்லாத அளவிற்கு, சில வாரங்களாக செளதி மற்றும் அதன் கூட்டணி நாடுகளான எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிடமிருந்து ராஜரீக மற்றும் பொருளாதார தடைகளை கத்தார் எதிர்கொண்டு வருகிறது.

ஜூன் 23ஆம் தேதி இந்த நான்கு நாடுகளும் கத்தாருக்கு, துருக்கி ராணுவத் தளத்தை மூடுவது மற்றும் இரானுடனான ராஜரீக உறவுகளை துண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற பத்து நாட்கள் கால அவகாசம் வழங்கியது. மேலும் இந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நிலவி வரும் சூழல் குறித்து விவாதிக்க புதன்கிழமையன்று சந்திக்கவுள்ளனர்.

தொடர்புடைய பிற செய்திகள்:

எண்ணெய் வளம் மற்றும் எரிவாயு வளம் மிகுந்த நாடான கத்தார் தனது 2.7 மில்லியன் மக்கள் தொகையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இறக்குமதிகளை நம்பியிருக்கும் நிலையில் இந்த தடைகள் கத்தாரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விளைவாக இரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து அதிகப்படியான உணவு மற்றும் பிற பொருட்கள் கத்தாருக்கு விநியோக்கிக்கப்படுகின்றன.

முழுமையான முடியாட்சிகளாக விளங்கும் சில அரபு நாடுகளுக்கு முக்கிய அச்சுறுத்தலாக இருக்கும் அரசியல் இஸ்லாமியவாத அமைப்பான `முஸ்லிம் சகோதரத்துவம்` அமைப்பு உட்பட தங்களது அரசியல் எதிரிகளுக்கு கத்தார் புகலிடம் தந்து வருகிறது என்றும் மேலும் கத்தாரால் நிதி ஆதரவு வழங்கப்படும் அல் ஜசீரா தொலைக்காட்சியில் அவர்கள் இடம்பெற அனுமதிக்கிறது என்றும் சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் குற்றம் சுமத்துகின்றன.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும், பிராந்திய எதிரியான இரானுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தி, ஒரு மாதத்திற்கு முன்பு இந்த நான்கு நாடுகளும், கத்தாருடனான தங்களது ராஜீரிக மற்றும் பயண உறவுகளை துண்டித்தன; ஆனால் கத்தார் அந்நாடுகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

அதிலிருந்து மேலும் பல தடைகளை விதிப்பதாக அந்நாடுகள் கத்தாரை அச்சுறுத்தி வருகின்றன.

பத்து வருடங்களில் வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட மிக மோசமான நெருக்கடி இதுவாகும்.

பிற கோரிக்கைகள் என்னென்ன?

  1. அரபு நாடுகள் பலவற்றில் தடைசெய்யப்பட்ட ’முஸ்லிம் சகோதரத்துவம்’ என்ற அமைப்புடனான உறவை கத்தார் துண்டிக்க வேண்டும்.
  2. தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் கத்தார் தலையிடுவதாக அந்த நான்கு நாடுகள் கருதுவதால் அந்நாட்டிலிருந்து வரும் நபர்களுக்கு கத்தார் குடியுரிமை வழங்கக்கூடாது மேலும் அவர்களை தங்கள் பிராந்தியத்திலிருந்து கத்தார் வெளியேற்ற வேண்டும்
  3. பயங்கரவாதம் தொடர்பாக தேடப்படும் தனிநபர்களை கத்தார் ஒப்படைக்க வேண்டும்.
  4. அமெரிக்காவால் பயங்கரவாத கும்பல் என்று கருதப்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குவதை கத்தார் நிறுத்த வேண்டும்.
  5. செளதி அரேபியா மற்றும் பிற நாடுகளில் கத்தாரால் நிதி ஆதரவு வழங்கப்படும் எதிர்தரப்பினர் பற்றிய தகவல்களை தர வேண்டும்.
  6. அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக மற்றும் பிற வழிகளில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் கத்தார் தன்னை ஒருங்கிணைத்து கொள்ள வேண்டும்.
  7. `அல் ஜசீரா` உட்பட `அரபி21` மற்றும் `மிடில் ஈஸ்ட் ஐ` ஆகிய செய்தி ஊடகங்களுக்கு நிதி ஆதரவு வழங்குவதை கத்தார் நிறுத்த வேண்டும்.
  8. இழப்பீடாக ஒரு தொகையை கொடுக்க வேண்டும் ஆனால் அது எவ்வளவென்று நிர்ணயிக்கப்படவில்லை.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு, அல் கய்தா, லெபனானின் ஷியா தீவிரவாத குழுவான ஹெஸ்பொல்லா ஆகியவற்றுடனான உறவை கத்தார் துண்டிக்க வேண்டும் என இந்த நாடுகளிலிருந்து பெயர் வெளியிடப்படாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ராயடர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த கோரிக்கைகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த செய்தி இருதரப்பிற்கு மத்தியில் சச்சரவை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

நவோதயா பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் இல்லாதது ஏன்?

''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''

தென் சீனக்கடலில் அமெரிக்க போர்க் கப்பல்: போர் விமானம், கப்பலை அனுப்பி சீனா பதிலடி

ஃபிரான்ஸில் மசூதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 8 பேர் காயம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்