தென் சீனக்கடலில் அமெரிக்க போர்க் கப்பல்: போர் விமானம், கப்பலை அனுப்பி சீனா பதிலடி

தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவிற்கு அருகில் ஒரு அமெரிக்க போர்க்கப்பல் இருப்பது "தீவிரமான அரசியல் மற்றும் ராணுவரீதியான ஆத்திரமூட்டல்" என்று பெய்ஜிங் கண்டித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption 2015 ஆம் ஆண்டு டிரைடன் தீவிற்கு அருகே வந்த அமெரிக்காவின் ஸ்டெதெம் போர்க்கப்பல்

சீனா மற்றும் பிற நாடுகளால் உரிமை கொண்டாடப்படும் பராசெல் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான டிரைடன் தீவுக்கு அருகே, அமெரிக்காவின் போர்க்கப்பல் சென்றிருக்கிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, தனது ராணுவ கப்பல்களையும் போர் விமானங்களையும் அங்கு அனுப்பியுள்ளது சீனா.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய சில மணி நேரங்களில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த உரையாடலின்போது, சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவை "எதிர்மறை காரணிகள்" பாதிப்பதாக, சீன அதிபர், அமெரிக்க அதிபரிடம் கூறியதாக, சீன அரசின் தேசிய தொலைகாட்சியில், வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

"கொரிய தீபகற்பம் தொடர்பான உறுதிப்பாட்டை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தின" என்று கூறும் வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு, இந்த சம்பவம் குறித்து இரு அதிபர்களும் விவாதித்த்து குறித்து எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பிராந்தியத்தில், சீனாவில் அத்துமீறிய ஆக்கிரமிப்பு குறித்து அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவரும் நிலையில், இது தங்கள் நாட்டின் இறையாண்மை உரிமை என்று சீனா பதிலுரைக்கிறது.

டிரைடன் தீவுக்கு அருகில் என்ன நடக்கிறது?

அமெரிக்காவின் ஸ்டெதெம் போர்க்கப்பல், சீனாவிற்கு உரிமையான பகுதிக்குள் நுழைந்துவிட்டதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் ஞாயிறன்று தெரிவித்தது..

படத்தின் காப்புரிமை CHINA NEWS SERVICE
Image caption சீன சுற்றுலாக் குழுக்கள் பாரசெல் தீவுகளுக்கும் செல்கின்றன

"கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தின்படி" டிரைடன் தீவின் 12 கடல் மைல்கள் தொலைவுக்குள் அமெரிக்க போர்க்கப்பல் பயணித்ததாக, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி, செய்தி ஊடகங்களும், ஃபாக்ஸ் நியூசும் கூறுகின்றன.

ஐ.நாவின் விதிமுறைகளின்படி, எந்தவொரு பிராந்தியமும், தனது கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் தொலைவு வரை தனது பகுதி என்று உரிமை கோரலாம். ஐ.நாவின் பிராந்திய கூற்றுக்களை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்பதை, அமெரிக்க போர்க்கப்பல் 12 கடல் மைலுக்குள் சென்றிருப்பது சுட்டிக்காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுடன் பேரம் , சமரசம் இல்லை - அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ

தென் சீனக்கடல் விவகாரம் : டிரம்ப் நிர்வாகத்துடன் மோத தயாராகும் சீனா

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பயணித்த அமெரிக்க கப்பலால் பரபரப்பு

தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்க-சீன அதிபர்கள் தொலைபேசி உரையாடல்; தென் சீன கடலில் பரபரப்பு

தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பெய்ஜிங் கூறுகிறது.

பிராந்தியத்தில் சீனா மற்றும் அதன் தென்கிழக்கு ஆசியாவின் அண்டை நாடுகளிடையே நிலைமை சுமூகமாகவும், ஸ்திரமாகவும் இருப்பதால், அமெரிக்கா "வேண்டுமென்றே சிக்கல்களைத் தூண்டும்" நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சீனா குற்றம் சாட்டுகிறது.

சீனா உரிமை கொண்டாடும் இந்த மிகச்சிறிய தீவுக்கு வியட்நாமும், தைவானும் உரிமை கோருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் சீனா, பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளுடன் கடல்சார் உறவுகளில் மோதல் நிலையையே கடைபிடிக்கின்றது.

அமெரிக்க போர்க்கப்பல் ஏன் இந்த தீவுக்கு சென்றது?

"கடல் போக்குவரத்து சுதந்திரம்" என்ற திட்டத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இது, உலகின் கடல் மற்றும் வான் பரப்பில் "அதிகப்படியான உரிமைகளுக்கு" சவால்விடுகிறது.

ஐ.நா. கடல்சார் விதிமுறைகளை அனைத்து நாடுகளும் கடைபிடிப்பதை உறுதி செய்ய இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது

அமெரிக்க இராணுவம், பிற நாட்டு அரசுகளுடன் "செயல்படும் விதிமுறைகள்" குறித்து கலந்தாலோசித்து இந்தத் திட்டங்களை ராஜாங்க ரீதியாக செயல்படுத்துவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு எடுக்கப்படும் இரண்டாவது நடவடிக்கை இது. ஸ்பார்டி தீவுகளில் ஒன்றாக சீனாவால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவான "மிஸ்சீஃப் ரீஃப்" க்கின், 12 கடல் மைல்களுக்கு உள்ளே, மே மாதத்தில் அமெரிக்க போர்க்கப்பல் டேவே வந்தது.

பிராந்தியத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தீவுகளை சீனா ராணுவமயமாக்குவதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் தெரிவித்தார்.

சீனா, மலேசியா, பிலிப்பின்ஸ், தைவான், வியட்நாம் போன்ற பல நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா இதுபோன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தென்சீனக் கடல் சர்ச்சைக்கான காரணம்?

தென்சீனக்கடலில், நாடுகளுக்கு இடையே பிராந்திய தகராறுகள் பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது, ஆனால், அண்மை ஆண்டுகளில் சீனா தனது மேலாதிக்கத்தை அதிகரிப்பதால் தென் சீனக் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தப் பகுதி முக்கியமான ஒரு கடல் வழிப்பாதை என்பதோடு, மீன்வளம் அதிகமுள்ள பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர, இங்கு ஏராளமான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தப் பிராந்தியத்தில், பாராசெல்ஸ் மற்றும் ஸ்ப்ரடில்ஸ் தீவுக்கூட்டங்களுக்கு இடையிலான பகுதிதான் மோதல்களின் மையமாக இருக்கிறது.

பிராந்தியத்தின் பெருமளவுப் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனா, நூற்றாண்டுகளாக தனது உரிமைகள் தொடர்வதாக கூறுவதோடு, தனக்கு உரிமையான பகுதிகள் என்பதை விளக்கும் வரைபடத்தை 1947 ஆம் ஆண்டில் வெளியிட்ட்து.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஆட்சியின்கீழ், சீனா பல்வேறு பிராந்தியங்களுக்கான உரிமையை கோருகிறது. தென் சீனக் கடல் பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்குவதோடு, ரீஃப் தீவில் ராணுவ வசதிகளையும் மேம்படுத்தியிருக்கிறது. சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் படகுகள் மூலம் ரோந்துப் பணிகளையும் சீனா மேற்கொள்கிறது.

ஆனால், ரீஃப் தீவில் ராணுவ வசதிகளை மேம்படுத்துவதான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சீனா, அங்கு மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு வசதிகள், பொதுமக்களின் வசதிக்கானது, பாதுகாப்பு நோக்கங்கள் கொண்டது என்று கூறுகிறது.

தென்சீனக் கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பான பிலிப்பின்சின் முறையீட்டை கடந்த ஆண்டு விசாரித்த சர்வதேச தீர்ப்பாயம், சீனாவின் உரிமைக் கோரல்களை நிராகரித்தது. ஆனால், சீனா அந்தத் த்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்துவிட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்