வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

வடகொரியா தனது மேற்குப் பிராந்தியத்திலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை KOREA NEWS SERVICE
Image caption இந்த ஆண்டு நடத்தப்பட்ட 11-ஆவது பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணிக்கு, வட பியாங்கான் மாகாணத்தில் பாங்யான் பகுதியிலிருந்து அந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரிய ராணுவத்தை மேற்கோள் காட்டி யான்கோப் செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஜப்பான் கடலில் உள்ள ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அந்த ஏவுகணை விழுந்திருக்கலாம் என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக, வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை அதிகரித்திருப்பதால் பதற்றமும் அதிகரித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை ஏவப்பட்ட ஏவுகணை, சுமார் 40 நிமிடங்களுக்கு 930 கிமீ பறந்து கடலில் விழுந்ததாக ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது இந்த ஆண்டில் நடத்தப்பட்ட 11-ஆவது ஏவுகணை சோதனை என்றும், ஆனால், அதிக திறன் மிக்கதாகத் தோன்றுகிறது என்றும் சோலில் உள்ள பிபிசியின் ஸ்டீவன் இவான்ஸ் கூறுகிறார்.

வடகொரியா இறுதியாக கடந்த மே மாதம் ஏவுகணை சோதனை நடத்தியது. இரு ஏவுகணைகளும் ஜப்பான் கடல் பகுதியை நோக்கியே செலுத்தப்பட்டன.

வடகொரியாவின் தொடர் தூண்டுதல் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதுகுறித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருப்பதாகவும் ஜப்பானின் தலைமை கேபினட் செயலர் யோஷிதே சுகா தெரிவித்தார்.

தென்கொரியாவின் புதிய அதிபர், தனது நாட்டின் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜப்பான் மற்றும் சீனத் தலைவர்களுடன் வடகொரியா குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசிய அடுத்த நாள், இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கொரியப் பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவது தொடர்பான நிலைப்பாட்டை அந்தத் தலைவர்கள் தங்கள் பேச்சின்போது உறுதிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்:

''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''

விமானத்தில் `குண்டுப்பெண்' என தொல்லை கொடுத்தவரை வறுத்தெடுத்த மாடல் அழகி!

நிபந்தனைகளை நிறைவேற்ற கத்தாருக்கு மேலும் 48 மணிநேர அவகாசம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்