ஆய்வறிக்கையில் அதிபரின் பெயர்: மாணவியின் ஆராய்ச்சிப் பட்டம் நிறுத்திவைப்பு

படத்தின் காப்புரிமை LEILA SIDHOUM
Image caption அதிபர், ராணுவம் பற்றிய கருத்துக்களை நீக்குமாறு சொல்லப்பட்டதாகச் சொல்கிறார் மாணவி லீலா சிதோயும்

தனது ஆய்வறிக்கையில் அரசியல் ரீதியிலான கருத்துகள் குறித்து ஆட்சேபணைகள் இருந்ததால், பல்கலைக்கழகம் தனது பட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக அல்ஜீரிய ஆய்வு மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை அந்த மாணவி சித்தரித்த விதத்தில் தனக்கு சில கவலைகள் இருந்ததாக ஆசிரியர் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது ஆய்வறிக்கையை தணிக்கை செய்ததுடன், தன்னை அச்சுறுத்தியதாக அல்ஜிர்ஸ் 3 பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை மீது மாணவி லெய்லா சித்தோம் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது ஆய்வறிக்கையை ஏற்கனவே வெற்றிகரமாக தேர்வுக்குழுவின் முன் சமர்ப்பித்து, அது குறித்த ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக இருக்கும் சித்தோம், 1989-2016 காலகட்டத்தில் அல்ஜீரியாவின் ஜனநாயக மாற்றத்தில் ஆளும் அதிகாரவர்கத்தின் பங்கு என்ன என்பதை விளக்கும் வகையில் தனது ஆய்வின் கருப்பொருளை தேர்ந்தெடுத்திருந்தார்.

குழுவினரின் கோரிக்கைகளான முந்தையை திருத்தங்களை மேற்கொண்ட பின்னர் அவரது ஆய்வு சரிபார்க்கப்பட்டு, முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பல்கலைக்கழகத்தின் தற்காலிகத் துறைத் தலைவரால், அவரது பட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து அவரது ஆய்வு நீக்கப்பட்டுள்ளதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை UNIVERSITY OF ALGIERS 3
Image caption ஆய்வறிக்கைக்கு அல்சீயர்ஸ் பல்கலை ஆசிரியர்கள் ஒப்புதல் அளித்துவிட்டனர்

பெயர் வெளியிட விரும்பாத பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் இது குறித்து பிபிசியிடம் தெரிவிக்கும் போது, அவரது ஆய்வறிக்கையில் இராணுவம் குறித்து குற்றச்சாட்டுகள் மற்றும் சித்தாந்த ரீதியான, அறிவியல் பூர்வமாக நிறுவப்படாத கருத்துகள் இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்வாளர்கள் குழு ஆய்வறிக்கையின் உள்ளடக்கத்தை முறையாக சரிபார்க்கவில்லை என்றும் அதன் தரத்தை ஆராயவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவம், நாட்டின் அதிபர் மற்றும் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய சால்வேசன் முன்னணி கட்சி குறித்து இடம் பெற்றிருக்கும் பகுதிகளை நீக்குமாறு தன்னிடம் கூறப்பட்டதாகவும் சித்தோம் தெரிவித்துள்ளார்.

1991-ம் ஆண்டு அல்ஜீரியாவில் நடைபெற்ற பல கட்சிகள் போட்டியிட்ட முதல் தேர்தலில் இஸ்லாமிய சால்வேசன் முன்னணி கட்சி முதல் சுற்றில் வெற்றிபெற்றது, ஆனால் இரண்டாவது சுற்றை இராணுவம் ரத்து செய்தவுடன் ஆயுதமேந்திய மோதல் வெடித்தது.

தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோதலில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

1999-ம் ஆண்டு முதல் ஆட்சி புரிந்து வரும் அதிபர் அப்தெலிசிஸ் போட்டிஃப்லிக்காவின் தலைமையிலான அரசு, இஸ்லாமிய குழுக்களுடன் வழங்கிய சமாதான ஒப்பந்தம் பொதுவாக்கெடுப்பிற்கு பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதையம் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்