கத்தார் நெருக்கடி: சவுதி அரேபியா மற்றும் நட்பு நாடுகள் கெய்ரோவில் சந்திக்கின்றன

 • 5 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை AFP
Image caption "கருத்து சுதந்திரத்தை தடுப்பதான" கோரிக்கைகள் எனகிறார் கத்தார் வெளியுறவு அமைச்சர்

பஹ்ரைன், எகிப்து, செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள், கத்தாருடனான உறவுகளை முறித்துக் கொண்ட ஒரு மாதத்திற்கு பிறகு இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இருக்கின்றன.

கோரிக்கைகள் பட்டியலை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது மேலும் அதிகத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கத்தாருக்கு விதிக்கப்பட்ட கால அவகாசம் முடிவுக்கு வரும் நாளன்று, தடை விதித்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கெய்ரோவில் கூடி கலந்தாலோசனை மேற்கொள்கின்றனர்.

"நடைமுறைக்கு ஒத்துவராத மற்றும் செயல்படுத்த முடியாத கோரிக்கைகள்" என்று கத்தார் இந்தக் கோரிக்கைப் பட்டியல் குறித்து கூறியிருக்கிறது.

பிராந்தியத்தில் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் வளர்ப்பதாக வளைகுடா அண்டை நாடுகள், தன்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை, கத்தார் மறுக்கிறது.

படத்தின் காப்புரிமை Adam Pretty/Getty Images

சிறிய நாடான கத்தார், முன்னெப்போதும் இல்லாத அரசாங்கரீதியான மற்றும் பொருளாதாரரீதியான தடைகளை செளதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைனிடம் இருந்து எதிர்கொண்டுள்ளது.

2.7 மில்லியன் மக்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இறக்குமதியை நம்பியிருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளமுள்ள நாடான கத்தாருக்கு இந்தக் கட்டுப்பாடுகள் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

பிற செய்திகள்:

ஏற்கனவே கொடுக்கப்பட்ட பத்து நாட்கள் அவகாசம் முடிவடைந்த நிலையில், திங்களன்று, கத்தாருக்கு விதித்திருந்த காலக்கெடு மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

கோரிக்கைகளுக்கான பதிலை கத்தார் ஆட்சியாளர்கள் கொடுத்துவிட்டாலும், இதுவரை அது வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. இந்தக் கோரிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்று கத்தார் சுட்டிக்காட்டுகிறது.

இந்தக் கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை என, கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் மொகம்மத் பின் அப்துல் ரஹ்மான் அல்-தானி செவ்வாயன்று தெரிவித்தார்.

"இது தீவிரவாதம் தொடர்பானது அல்ல, கருத்துச் சுதந்திரத்தை நிறுத்துவது தொடர்பானது" என அவர் கூறினார்.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு உள்ளிட்ட இஸ்லாமிய குழுக்களுக்கு தோஹா ஆதரவு கொடுப்பதாக கத்தார் மீது குற்றம் சுமத்தும் நான்கு நாடுகளும், அவைகளுக்கு கத்தார் அரசின் நிதியுதவியில் இயங்கும் அல் ஜஸீரா தொலைகாட்சி மூலம் தளம் அமைத்துக் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகளை கத்தார் நிரகரித்துவிட்டது.

இந்தத் தடையினால், இரானும், துருக்கியும், கத்தாருக்கான உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கி வருகின்றன.

எதிர்வரும் ஆண்டுகளில் கத்தார், திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) உற்பத்தி திறனை அதிகரிக்கப்போவது தொடர்பான திட்டங்களை செவ்வாயன்று அறிவித்தது.

சர்வதேச அளவில் திரவநிலை இயற்கை எரிவாயு உற்பத்தியில் கத்தார் முன்னணியில் இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

பிற கோரிக்கைகள் என்ன?

கோரிக்கைகள் அடங்கிய பட்டியலின் ஒரு பிரதியைப் பெற்றுள்ள அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி, கத்தாருக்கு வழங்கப்பட்ட பட்டியலில் கீழ்கண்ட கோரிக்கைகளும் அடங்கும்:

 • பஹ்ரைன், எகிப்து, செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் ஆகிய நாடுகளால் தேடப்பட்டு வரும் அந்நாடுகளின் பிரஜைகளுக்கு கத்தார் குடியுரிமை தருவதை நிறுத்த வேண்டும். இது கத்தார், தங்களது உள் விவகாரங்களில் தலையிடுவதை தடுக்கும் ஒரு முயற்சி என்று நான்கு அரபு நாடுகளும் கூறுகின்றன.
 • தீவிரவாதம் தொடர்பாக நான்கு நாடுகளுக்கு தேவைப்படும் தனிநபர்களை ஒப்படைக்கவேண்டும்.
 • அமெரிக்காவால் தீவிரவாதக் குழுக்கள் என்று குறிப்பிடப்பட்ட குழுக்களுக்கு நிதியுதவி வழங்குவதை கத்தார் நிறுத்தவேண்டும்.
 • சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளில் இருக்கும் எதிர்க்கட்சி பிரமுகர்களுக்கு கத்தார் நிதியுதவி வழங்கியது தொடர்பான விரிவான தகவல்களை வழங்கவேண்டும்.
 • அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் (GCC) இணக்கமாக செயல்படவேண்டும்.
 • அல் ஜஸீரா செய்தி நிறுவனத்தைத் தவிர, அரபி21, மிடில் ஈஸ்ட் ஐ உள்ளிட்ட செய்தி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தவேண்டும்.
 • நட்ட ஈடு (தொகை குறிப்பிடப்படவில்லை) வழங்கவேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அவை வெளியிடப்பட்டதும் இரு தரப்பினரிடையே உரசல்கள் அதிகரித்துவிட்டன.

படத்தின் காப்புரிமை Sean Gallup/Getty Images

கத்தார் தடை தொடர்பான முக்கிய நிகழ்வுகள்

 • ஜூன் 5: கத்தார், பிராந்தியத்தில் நிலைத்தன்மையை சீர்குலைப்பதாக குற்றம்சாட்டிய செளதி அரேபியா, எகிப்து உட்பட பல அரபு நாடுகள் அந்த நாட்டுடான அரசுமுறை உறவுகளை துண்டித்துக்கொண்டன. கத்தார் ஏர்வேஸ், தங்களது வான்வழியை பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட தடைகள் இதில் அடக்கம்.
 • ஜூன் 8: வளைகுடா நாடுகளிடையே ஒற்றுமை வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்த நிலையில், கத்தார், தனது வெளியுறவுக் கொள்கைகளின் சுதந்திரத்தை "ஒப்புவிக்கமுடியாது" என்று உறுதிபட கூறிவிட்டது.
 • ஜூன் 23: இரானோடு தொடர்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும், துருக்கியின் ஒரு ராணுவ தளத்தை மூடிவிட வேண்டும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான உறவுகளை துண்டிக்கவேண்டும், இரானுடனான அரசுமுறை தொடர்புகளை குறைத்துக் கொள்ளவேண்டும் என 13 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைப் பட்டியல் கத்தாருக்கு கொடுக்கப்பட்டு, அவற்றை நிறைவேற்ற 10 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டது.
 • ஜூலை 1: இந்த கோரிக்கைகளை நிராகரித்த கத்தார் வெளியுறவு அமைச்சர், எனினும், நியாயமான நிபந்தனைகளின்கீழ் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்று கூறினார்.
 • ஜூலை 3 : கத்தாருக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில், மேலும் 48 மணி நேர கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா?

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்