அமெரிக்கா-தென் கொரியா கூட்டாக நடத்திய ஏவுகணை சோதனை

ஏவுகணை சோதனை படத்தின் காப்புரிமை Ballistic Missile Defense Organization/Getty Image

அமெரிக்காவின் அலாஸ்கா மாகானம் வரை சென்று தாக்கும் வலிமை மிக்கது என்று சொல்லப்படும் நீண்டதூர ஏவுகணையை வடகொரியா பரிசோதித்துப் பார்த்ததைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதன் நேச நாடான தென் கொரியாவும் கூட்டாக ஜப்பானியக் கடலில் ஏவுகணைப் பரிசோதனை செய்துள்ளன.

போர் நிறுத்தம் போராக மாறாமல் இருப்பதற்குக் காரணம் சுயகட்டுப்பாடுதான் காரணம்; ஆனால் அந்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என அமெரிக்க- தென்கொரியக் கூட்டணி தெரிவித்துள்ளது. வடகொரியா வேறுமாதிரியாக நினைத்தால் அது மோசமான தவறாக மாறிவிடும் என்று இக் கூட்டணி தெரிவித்தள்ளது.

இருதரப்பும் தங்கள் ராணுவ புஜபலத்தைக் காட்டுவதை நிறுத்தவேண்டும் என சீனாவும், ரஷியாவும் வேண்டுகோள் விடுத்துள்ளன. வடகொரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எந்த முயற்சியையும் தாங்கள் எதிர்ப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன.

இதனிடையே, வடகொரியா ஏற்படுத்தும் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்ப்பதில் சீனாவுக்குள்ள அக்கறை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் சீனா-வட கொரியா இடையிலான வணிகம் 40 சதவீதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப் சீனாவுடன் பேசுவதில் பயனில்லை என்றும் ஆனாலும் முயன்று பார்ப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்புக் குழு விதித்த தடையை மீறி நடத்தப்பட்டதாகும்.

பாதுகாப்புக் குழுவை அவசரமாகக் கூட்டி இப்பிரச்சினையை விவாதிக்கவேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை செவ்வாய்க்கிழமை தாம் வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்ததாக வடகொரியா அறிவித்தது.

எனினும் நீண்டதூரம் சென்று தாக்கும் அணு ஆயுத வலிமை வட கொரியாவிடம் இருக்காது என்று பெரும்பாலான வல்லுநர்கள் நம்புகின்றனர். 1950-53 ஆண்டுகளில் நடந்த கொரியப் போரானது, போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றின் மூலமாகவே நிறுத்தப்பட்டுள்ளதால், இருநாடுகளுக்கும் இடையிலான போர் முறைப்படியாக இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க - தென் கொரிய கூட்டணி தமது ஏவுகணை பாதுகாப்பு தோற்றத்தை, நடவடிக்கை மூலமாகவே காட்டவேண்டும், அறிக்கை மூலமாக அல்ல என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் கூறியதாக அவரது அலுவலகம் தெரிவித்தது.

இதனிடையே, அமெரிக்க-தென்கொரியக் கூட்டணி அமைதியையும், சுய கட்டுப்பாட்டையும் பேணுவதாகவும் ஆனால், இது மாறக்கூடும் என்றும் கொரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் வின்சென்ட் புரூக்ஸ்- தென்கொரிய பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தலைவர் ஜெனரல் லீ சுன்-ஜின் ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வார்சோ மற்றும் ஹம்பர்கில் பயணம் மேற்கொள்ள அதிபர் டிரம்பும் அவரது மனைவி மெலானியும் வாஷிங்டனை விட்டு புறப்பட்டுள்ளனர்

"எங்கள் நாடுகளின் தேசியத் தலைவர்கள் உத்தரவிட்டால் நாங்கள் எங்கள் தேர்வை மாற்றிக்கொள்ள முடியும். வேறு மாதிரியாக யாராவது புரிந்துகொண்டால் அது மோசமான தவறாக இருக்கும்" என்று அந்தக் கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

வடகொரியாவின் செயல்பாடு பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக இருக்கிறது என்று விமர்சித்த அமெரிக்க ராஜீயத் துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், அணு ஆயுதம் உடைய வடகொரியாவை வாஷிங்டன் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது என்று எச்சரித்தார்.

உலகை அச்சுறுத்தும் செயல்பாட்டை நிறுத்த உலக அளவிலான நடவடிக்கை தேவை என்று கூறிய டில்லர்சன், வடகொரியாவுக்கு பொருளாதார, ராணுவ சகாயங்களை செய்யும் அல்லது ஐ.நா. பாதுகாப்புக் குழுத் தீர்மானங்களை முழுதாக செயல்படுத்தத் தவறும் எந்த நாடும் அபாயகரமான ஆட்சி அமைப்பைத் தூண்டுவதாகவும், அதற்கு உதவுவதாகவுமே பொருள் என்று அவர் தெரிவித்தார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்