இந்தியா - இஸ்ரேல் பாதுகாப்பு ஒத்துழைப்பு வளர்வதை எச்சரிக்கையுடன் நோக்கும் பாகிஸ்தான் ஊடகங்கள்

படத்தின் காப்புரிமை Twitter

இந்திய பிரதமர் மோதி இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது மற்றும் இருநாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வளர்வது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே ராஜாங்கரீதியான உறவுகள் துவங்கிய 25 ஆண்டுகளுக்கு பிறகு, இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் மோதி ஆவார்.

பாகிஸ்தான் நாளிதழ்களில் இந்த பயணம் குறித்து கருத்துகள் பெரிய அளவில் கூறப்படவில்லை.

ஆனால் தொலைக்காட்சிகளில் சில செய்திகள் மற்றும் ஆய்வாளர்கள், மோதி பயணத்தின் காரணமாக ஏற்படும் என கருதப்படும் பிராந்திய தாக்கங்கள் குறித்து விவாதித்தனர்.

'அரசுகளின் மற்ற தலைவர்களின் இரு தரப்பு பயணங்கள் குறித்து பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக கருத்து ஏதும் தெரிவிப்பதில்லை. எனினும் இந்த பயணம் பிராந்தியத்தின் கேந்திர ஸ்திரத்தன்மையில் தீவிரமான தாக்கங்கள் ஏற்படுத்தும் என கூறப்பட்டதிலிருந்து ,மோடியின் பயணத்தை பாகிஸ்தான் நெருக்கமாக பின் தொடர்ந்து வருவதாக' பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளிதழான 'தெ எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' சுட்டிக் காட்டியுள்ளது.

இஸ்ரேலை ஒரு நாடாக பாகிஸ்தான் தற்போது வரை அங்கீகரிக்கவில்லை.

2005-ஆம் ஆண்டு, முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் பதவிக்காலத்தில், பாகிஸ்தானும் இஸ்ரேலும் தங்களிடையே உறவைத் துவங்கின. அந்த நேரத்தில், இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் துருக்கியில் சந்தித்தனர். ஆனால் இந்த சந்திப்பு, இரு நாட்டு உறவில் பெரிய முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

பாதுகாப்பு ஒத்துழைப்பு

பாகிஸ்தானின் முன்னாள் ராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள், இஸ்ரேல் நாட்டினுடனான இந்திய பிரதமரின் நெருக்கம், `பிராந்தியத்தின் கேந்திர ஸ்திரத்தன்மையை பாதிக்கும்` இருக்கும் எண்ணுகின்றனர்.

ஆயுதங்கள் மற்றும் மற்ற ராணுவத் தளவாடங்கள் நீண்ட காலமாக இந்தியாவுக்கு விற்று வரும் முக்கிய நாடாக இஸ்ரேல் இருந்து வருகிறது.

`இஸ்ரேலுடனான பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவு காரணமாக இந்தியா சிறப்பாக பயனடைந்துள்ளதாக` பாதுகாப்பு நிபுணரும், ஓய்வு பெற்ற லெப்டினல் ஜெனரலுமான அம்ஜத் சோயிப் தெரிவித்ததாக `எக்ஸ்பிரஸ் டிரிபியூன்` நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

`அமெரிக்காவின் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வாய்ப்பை இஸ்ரேல் வாயிலாக இந்தியா பெற்றுள்ளது.` என அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Twitter

இதே கருத்தை பிரதிபலிப்பது போல , `இந்தியா-இஸ்ரேலுக்கு இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, தெற்காசியப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு தொந்தரவாக இருக்கும்.` என சர்வதேச உறவுகள் குறித்த ஆய்வாளரான டாக்டர் ஜாபர் நவாஸ் ஜஸ்பால் அந்த செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.

``இஸ்ரேலின் உதவி இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தை மேலும் மேம்படுத்தக்கூடும். அவ்வாறு நடப்பது என்பது,பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிரான நம்பகமான தாக்குதல் தடுக்கும் திறனை வைத்துக்கொள்ளவேண்டும் என்ற கொள்கையை குலைக்கும்``, என்று அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தானின் முக்கிய பத்திரிக்கையாளராக கருதப்படும் கம்ரான் கான், உருது தொலைக்காட்சியான துன்யாவில் நடத்திய , ஒரு நிகழ்ச்சியில், `பாகிஸ்தானில் நிலையற்ற அரசியல் தன்மை இருக்கும் போது , இந்திய பிரதமர் மாபெரும் ராஜதந்திர நகர்வுகளை செய்து வருகிறார்.` என தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு முன்னணி கட்டுரையாளரான நஸ்ரத் ஜாவேத், தாராளவாத உருது தொலைக்காட்சியான `டான் டிவி`யில் தெரிவித்த கருத்துக்களில், இந்திய பிரதமரின் முதல் இஸ்ரேலிய பயணத்தை, இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த சிறந்த முன்னேற்றம்.` என கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு என்பது பாகிஸ்தான் மீது நேரடி தாக்கத்தை செலுத்த வல்லது என்று பாகிஸ்தானின் முன்னாள் தூதரான அலி சர்வார் நக்வியும் கூறினார் என்று `எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்` நாளிதழ் கூறியது.

தீவிரவாதத்தின் பொதுவான சவால்

இரண்டு நாடுகளுக்கு இடையிலான செயற்பட்டியலில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் முக்கிய பிரச்சனையாக இருக்கும் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Twiiter

டெல் அவிவ் நகருக்கு கிளம்பும் முன்னர், டெல்லிக்கும், டெல் அவிவிற்கும் இடையே பயங்கரவாதம் `ஒரு பொதுவான சவால்` என மோதி குறிப்பிட்டார். பாகிஸ்தானில் உருவாகும் பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளில் இந்தியாவிற்கு டெல் அவிவ் ஆதரவளித்தது என இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

`பாகிஸ்தானை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்த இந்திய கடுமையாக உழைத்துள்ளதாகவும், இதன் மூலம் இந்தியாவில் எந்த பயங்கரவாத செயல்கள் நடைபெற்றாலும் அந்த பழியை பாகிஸ்தான் மீது சுமத்துவதாகவும் ` தெ எக்ஸ்பிரஸ் டிரிபியூன்` பத்திரிக்கை இந்தியாவை விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது.

`இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானைப் பற்றி மிக அதீத கவனத்துடன் இருக்கின்றன.` என ஆய்வாளர் நக்வி கூறியதாகவும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக இஸ்ரேல் மிக அதிக தூரம் செல்லாது என வெளியுறவுத்துறை பிரதிநிதிகள் நினைக்கின்றனர்.

`இஸ்ரேலின் தீவிர கண்காணிப்பின் கீழ் பாகிஸ்தான் இல்லை. அவர்களின் முன்னுரிமை தற்போதைக்கு மத்திய கிழக்கு பிராந்தியம்தான்.` என நக்வி தெரிவித்துள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளியுறவுக் கொள்கை

தங்களையுடைய நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக இஸ்ரேலுடனான செயல்படக்கூடிய உறவை பாகிஸ்தான் தொடர வேண்டும் என சில ஆய்வாளர்கள் நினைக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Twitter

`இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே வளர்ந்து வரும் நெருக்கமான உறவில் பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் இருக்கிறது.`என பாதுகாப்பு ஆய்வாளரான லெப்டினல் ஜெனரல் அஜ்மத் சோயிப் எண்ணுகிறார்.

`இந்தியாவினால் இஸ்ரேலுடனான தனது உறவை பலப்படுத்த முடியும் அதே வேளையில், அதன் எதிரி நாடான இரானுடனான ராஜாங்க உறவுகளையும் தொடர முடியும் போது, தனது வெளியுறவுக் கொள்கையில் பாகிஸ்தானினால் ஏன் இந்த நெகிழ்வுத் தன்மையை காட்ட முடிவதில்லை.` என அவர் கூறியுள்ளார்.

தாராளவாத உருது செய்தித்தாளான `டெய்லி எக்ஸ்பிரசின்` தலையங்கத்தில், மோடியின் இஸ்ரேல் பயணம் மூலம் ஏற்பட்டுள்ள `முக்கிய வளர்ச்சி`, பாகிஸ்தான் தனது வெளியுறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அறிவுறுத்தல் என கூறியுள்ளது.

பனிப்போர் கால யுக்தியிலிருந்து பாகிஸ்தான் வெளிவர வேண்டும் மற்றும் இந்தியா-இஸ்ரேல் உறவை பார்த்தாவது, தனது வெளியுறவுக் கொள்கைகளுக்கான முன்னுரிமைகளை பாகிஸ்தான் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் அந்த தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்