போலிச் செய்திகளைக் கண்டுபிடிக்க எட்டு வழிகள்

(போலிச் செய்திகளை எப்படிக் கண்டறிவது என்பது தொடர்பாக 2017 ஜூலை மாதம் வெளியிட்ட செய்தி இது. இந்தியாவில் ஏழு நகரங்களில் போலிச் செய்திகளுக்கு எதிராக பிபிசி #BeyondFakeNews கருத்தரங்கம் நடப்பதையும், பிபிசி போலிச் செய்தி ஆய்வறிக்கை வெளியாவதையும் ஒட்டி இந்த கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம்)

பொய்ச் செய்திகளை கண்டுபிடிப்பது எப்படி?

பட மூலாதாரம், SEBASTIEN BOZON/AFP/Getty Images

இல்லை. புதிய 2000 ரூபாய் நோட்டில் ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்ட சிப் இல்லை.

இல்லை. இந்தியாவின் தேசிய கீதத்தை யுனெஸ்கோ (ஐநாவின் கல்வி மற்றும் கலாசாரக் கழகம்) உலகின் மிகச் சிறந்த தேசியகீதமாக அறிவிக்கவில்லை. உண்மையில் சொல்லப்போனாலோ, அவ்வாறு தேர்வு செய்வதை ஓர் அமைப்பு என்ற வகையில் யுனெஸ்கோவின் வேலையே அல்ல.

இல்லை. இந்தியாவில் 2016ல் உப்புப் பற்றாக்குறை நிலவவில்லை.

இவையெல்லாம், பொருட்படுத்த தேவையில்லாத , யாருக்கும் பிரச்சனை கொடுக்காத விஷயங்கள் போல தோன்றினாலும், அந்தப் பட்டியலில் கடைசியாகச் சொல்லப்பட்ட உப்பு விவகாரம், கான்பூரில் ஒரு பெண்ணின் உயிரை பறிக்கக் காரணமாக அமைந்து, மக்கள் மத்தியில் பீதியையும் கிளப்பிவிட்டது.

இவையெல்லாமே ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் வாட்ஸப்பில் பரவிய பொய்ச் செய்திகள் . நீங்களே இந்த செய்திகளை நம்பியிருக்கலாம். அல்லது உங்களுக்குத் தெரிந்த சிலர் நம்பியிருக்கலாம்.

இணையத்தில் உள்ள சுதந்திரம் பொய்ச் செய்திகள் தழைக்க சரியான இடமாக அதை உருவாக்கியிருக்கிறது. ஆனால் நம்பிக்கையிழக்க வேண்டாம். அதே சுதந்திரம் தான் இணையத்தை மானுட குல வரலாற்றில், உண்மையான , நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட தகவல்களை சேகரித்து வைக்குமிடமாகவும் உருவாக்கியிருக்கிறது.

எனவே , உங்களுக்குக் கிடைக்கும் செய்திகளை சரிபார்க்க என்ன செய்ய வேண்டும் ?

இதோ ஒரு பட்டியல் :

பட மூலாதாரம், YASUYOSHI CHIBA/AFP/Getty Images

1.வாட்சப் பயன்படுத்துகிறீர்களா? உங்கள் இணைய உலாவியையும் பயன்படுத்துங்கள்

உங்கள் குடும்பத்தினர் அல்லது பள்ளி நண்பர்களின் வாட்சப் குழுவிலிருந்து உங்களுக்கு செய்திகள் பரிமாறப்படுகின்றன. அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லையா ? வாட்சப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் நிச்சயமாக ஒரு திறன்பேசி ( ஸ்மார்ட்ஃபோன்) வைத்திருப்பீர்கள். இணையமும் உங்களுக்கு இருக்கும். எனவே உங்களுக்கு வரும் எந்த தகவலையும் கூகுள் மூலமாக தேடிப் பார்த்து சரி பார்க்கலாமே ! உங்களுக்கு வாட்சப்பில் வரும் எந்த ஒரு தகவலையும் மற்றவர்களுக்கு அனுப்புமுன், அதில் உள்ள தகவல்கள் உண்மைதானா என்று சரி பாருங்கள். அப்படிச் செய்தால்,பொய்ச்செய்திகளை பரப்புவதைத் தவிர்க்கலாம்.

2. உண்மையா என சரிபார்க்க கூகுள்

சந்தேகம் ஏற்பட்டால், கூகுள் அல்லது பிங் போன்ற `தேடும் பொறியை` (search engine) பயன்படுத்துங்கள். இதே செய்தியை மற்ற நம்பத்தகுந்த செய்தி நிறுவனங்கள் சொல்கின்றனவா என்று பாருங்கள். மற்ற ஊடகங்கள் இந்த செய்தியைத் தரவில்லையென்றால், அந்தச் செய்தியை நம்பாதீர்கள். கட்டுரை அல்லது செய்தியை எழுதியவரின் பெயரை வைத்தும் தேடலாம். அவர்கள் எழுதிய மற்ற செய்திகள் ஒரு சித்தாந்த சாயலுடன் இருந்தால், அதற்கேற்ப இந்த செய்தியை புரிந்துகொள்ளலாம்.

பட மூலாதாரம், Chris Jackson/Getty Images

3.செய்தியின் மூலம் மற்றும் யூ.ஆர்.எல்லை (URL) சரிபார்ப்பது

இணையத்தில் ஏதாவது படிக்கும்போது, அதை யார் பிரசுரித்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள் . நீண்டகாலமாக இருக்கும், நம்பிக்கைக்குறிய செய்தி வெளியீட்டாளர்களை நம்ப முடியும். இதுவரை கேள்விப்பட்டிராத இணைய தளங்கள், இதற்கு முன் போலிச் செய்திகளை வெளியிட்டோர் எனில் அவர்களைப் பொருட்படுத்தாதீர்கள்.

வெளியீட்டாளர்களை வைத்து மட்டுமே நம்ப வேண்டும் என்பதும் இல்லை. எந்த மூலங்களை வைத்து செய்தி எழுதப்பட்டுள்ளது, செய்தியில் சொல்லப்பட்டதை போதிய அளவில் அவர்கள் நியாயப்படுத்தி உள்ளார்களா, சொல்லியவர்களின் நம்பகத் தன்மை ஆகியவற்றையும் பரிசோதியுங்கள். இணையத்தின் முகவரியைப் (URL) பரிசோதியுங்கள். நீங்கள் பி.பி.சி.யோ, தி குயிண்ட்டோ, தி கார்டியனோ, டைம்ஸ் ஆஃப் இந்தியாவோ படிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இந் நிறுவனங்களின் முகவரியில் சிறிய மாறுதல் செய்யப்பட்ட முகவரியை போலி செய்தி பரப்புவோர் பயன்படுத்தக்கூடும். .com என்பதை .co என்றோ .in என்றோ மாற்றிய இணைய முகவரிகள் இருக்கலாம். உதாரணமாக, www.bbchindi.in என்பது பி.பி.சி.யின் ஹிந்தி இணைய தளம் அல்ல.

4. தேதியைப் பாருங்கள்.

உலகளாவிய வலைத் தளத்தில் ( www) வெளியிடப்பட்ட எதுவும் காலாகாலத்துக்கும் அங்கே இருக்கும். செய்திக் கட்டுரைகளுக்கும் இது பொருந்தும். நல்ல காலமாக, எல்லா நம்பகமான செய்தி தளங்களிலும் வெளியீட்டுத் தேதி இருக்கும். எதையும் பகிர்வதற்கு முன்னால் பதிப்பிக்கப்பட்ட தேதியைப் பாருங்கள். பழைய செய்திகள், குறிப்பாக பயங்கரவாதத்துக்கு எதிரான போர், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை காலம் கடந்து பகிர்வது பொருத்தமாக இருக்காது.

பட மூலாதாரம், Chris Jackson/Getty Images

5. கிண்டல் செய்தியா என்பதைப் பாருங்கள்.

ஃபேக்கிங் நியூஸ், தி ஆனியன் போன்ற தளங்கள் வெளிப்படையாகவே கிண்டல் தன்மை கொண்ட கட்டுரைகளைப் பிரசுரிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட, நடந்த செய்தியை அடிப்படையாக கொண்டே அவை கிண்டல்களை வெளியிட்டாலும் அவை உண்மை அல்ல என்ற எச்சரிக்கை அவசியம். எனவே, நீங்கள் படிப்பது ஒரு கிண்டல் செய்தித் தளமா என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

6. "எங்களைப் பற்றி" இருக்கிறதா பாருங்கள்.

எல்லா நம்பகமான தளங்களிலும் ஆங்கிலத்தில் 'about' என்றும் தமிழ்த் தளமெனில் "எங்களைப் பற்றி" என்றும் ஒரு பகுதி இருக்கும். அதைப் படியுங்கள். அதன் மூலம் அந்த தளத்தின் நம்பகத்தன்மை குறித்துத் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், தளத்தை நடத்துகிறவர்கள் யார், அவர்களின் சாய்வு, சார்பு என்ன என்பதையும் அறிந்துகொண்டால் அதற்கேற்ப செய்தியை அணுக முடியும்.

7. உங்கள் உணர்ச்சிகளைப் பாருங்கள்.

என்னது... படிப்பவர்கள் தங்கள் உணர்ச்சியை வைத்து செய்தியின் உண்மைத்தன்மையை அறியமுடியுமா என்று கேட்கிறீர்களா? பொறுங்கள். ஒரு செய்தியைப் படிப்பதன் மூலம் கோபம், சோகம், அதீத மகிழ்ச்சி அடைகிறீர்களா. அப்படியெனில் நிச்சயம் அதை கூகுள் செய்து செய்தி உண்மையா என்று பார்த்துக்கொள்ளுங்கள். படித்து அதிகம் உணர்ச்சி வசப்பட்டால்தான் உடனடியாகப் பகிர்வார்கள் என்பதால் போலிச் செய்திகளைப் பரப்புவோர் , அதிகம் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய செய்திகளைத்தான் , அனுப்புவார்கள்.

பட மூலாதாரம், Rob Stothard/Getty Images

8. தலைப்பைத் தாண்டிப் படியுங்கள்.

செய்தியில், பதிவில் அதிக எழுத்துப் பிழைகளும், இலக்கணப் பிழைகளும், காட்சித் தரம் குறைந்த படங்களும் இருந்தால் நிச்சயமாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்துகொள்ளுங்கள். பொய்ச் செய்தியைப் பரப்பும் தளங்கள் அதிகம் பேரைப் பார்க்கவைத்து, கூகுள் விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்ட விரும்புகிறவையாக இருக்கலாம். எனவே தங்கள் உள்ளடக்கத்தின் தரத்தைக் கூட்ட அவர்கள் விரும்ப மாட்டார்கள். செய்திக்குள்ளேயே உள் முரண்பாடு இருந்தாலோ, பொய் என்று உறுதியாகத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தாலோ, நம்ப முடியாதவற்றை எழுதியிருந்தாலோ , முன்பே போலியென நிரூபிக்கப்பட்டதாக இருந்தாலோ, அது போலிச் செய்தியாக இருக்கக்கூடும்.

கடைசியாக, இணைய வெளியில் எல்லாச் செய்திகளும் பகிரப்படுவதற்கு, படிப்பவர்களாகிய உங்களைச் சார்ந்துதான் இருக்கின்றன. நீங்கள்தான் அவற்றை சமூக வலைத்தளங்களிலும், அரட்டைப் பெட்டிகளிலும் பகிர்கிறீர்கள். போலியான தகவலைப் பகிர்ந்தால் அதனால், தீய விளைவுகள் இருக்கும். எனவே பொறுப்போடு பகிருங்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்