பொய் செய்திகளை கண்டறிய உதவும் சில கையடக்க கருவிகள்

सांकेतिक तस्वीर படத்தின் காப்புரிமை Getty Images

ஒரு அரசியல்வாதியோ பிரபலமானவரோ ஒரு தவறை செய்திருக்கிறார். அதனால் அவரை ஆதரிக்க வேண்டாம் என்று ஆதாரத்தை முன்வைக்காமல் உங்கள் வாட்சப் குழுக்களில் வரும் செய்திகளால் சலிப்படைந்துள்ளீர்களா?

அல்லது நீங்கள் படிக்கும் இணையக் கட்டுரையின் பக்கத்தில் தோன்றும், ஒரு மர்மமான பழத்தை உண்டால் புற்று நோய் நீங்கும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி உங்களை அப்பழத்தை உண்ண நிர்ப்பந்திக்கும் இணையதள பக்கங்களின் இணைப்பால் சலிப்படைந்துள்ளீர்களா?

அல்லது நீங்கள் முன்னர் கேள்விப்பட்டிராத பதிப்பகம் ஒன்றில், சாத்தியமற்றதாகத் தோன்றும் உங்களால் நம்ப முடியாத செய்தி தலைப்பைக் கண்டு குழம்பியுள்ளீர்களா?

இருக்கட்டும். நீங்கள் இணையத்தில் ஒரு விடயத்தை படிப்பதற்கு அல்லது பார்ப்பதற்கு முன்னால் அதன் உண்மைத் தன்மையை பரிசோதிக்க சில கையடக்க கருவிகளை பட்டியலிடுகிறோம்.

1.தேடு பொறிகள்

தேடு பொறிகள் எப்போதுமே உண்மையை அறிய சோதிப்பவர்களின் உற்ற நண்பர்கள்.

உங்களுக்கு சந்தேகமேற்பட்டால், உடனடியாக தேடல் சொற்களை கூகுள் போன்ற தேடு பொறிகளில் உடனே பதிவிட்டு என்ன முடிவுகள் என்பதை பாருங்கள்.

அந்த செய்தி உண்மையானதாக இருந்தால் நம்பத்தகுந்த செய்தி முகமைகளும் நிறுவனங்களும் ஏற்கனவே அந்த செய்தியை பிரசுரித்து இருப்பார்கள்.

இதன் மூலம் அந்த தகவலை உண்மையாக்கும் பல செய்தி ஆதாரங்களை நீங்கள் பார்க்கலாம்.

அது உண்மை இல்லையென்றால், அதை வெளியிடும் நம்பத்தகுந்த நிறுவனங்கள் ஏதும் இல்லை என்பது உங்களுக்கு தெளிவாகத் தெரியும். உண்மை நிலையை சரி பார்க்கும் ஓரிரு இணையதளங்கள் அந்த செய்தியை தோலுறித்துக் காட்டுவதை கூட நீங்கள் பார்க்க நேரலாம்.

செய்திகளின் உண்மை நிலையை ஆராய கூகுள் ஒரு பிரத்யேக கருவி ஒன்றை தொடங்கியுள்ளது.

அது உண்மை நிலையை சரி பார்க்கும் இணையதளங்களிலிருந்து முடிவுகளை உங்கள் பக்கத்தின் முதலில் தேடல் முடிவாக தரும்.

அதன் மூலம் நீங்கள் தேடும் செய்தி உண்மையா இல்லையா என்பதை அறியலாம்.

எடுத்துக்காட்டாக, "டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளார்" என்பதை நீங்கள் தேடினால், Politifact எனும் உண்மையை சரிபார்க்கும் இணைய தளத்தின் செய்திகளே முதல் இரு முடிவுகளாக வரும்.

இரணடாவது இணைப்பில், கூறப்பட்டது என்ன என்பதையும், யார் அதைக் கூறினார் என்பதையும் அது குறித்த உண்மை-சோதனை முடிவுகளையும் ஒரே நேரத்தில் காணலாம்.

2. பிரசுரிக்கப்பட்ட படத்தை பின்னோக்கித் தேடுவது ( ரிவர்ஸ் இமேஜ் சர்ச்)

படங்களை பின்னோக்கித் தேடும் (Reverse Image Search) முறை மூலம் ஒரு குறிப்பிட்ட படத்தை முதன் முதலில் எந்த இணையதளம் பதிப்பித்தது என்பதை தேடலாம்.

அந்த தேடல் முடிவு, அந்த படத்தில் யார் இருக்கலாம், வேறு எங்கு அது பதிப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் அது போன்ற மற்ற படங்கள் ஆகியவற்றையும் பட்டியலிடும்.

இது அசல் படங்களை கண்டுபிடிப்பதையும், அதில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் சுலபமாக கண்டுபிடிக்க உதவும்.

இது ஒரு சம்பவத்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, வேறு ஒரு விஷயத்தைப் பற்றி பொய்யான செய்திகளை வெளியிடும் செய்திகளை எளிதில் வெளிப்படுத்த உதவும்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, ட்விட்டரில் உலவும் மூத்த பத்திரிகையாளர் பர்க்கா தத்தின் புகைப்படம்.

அப்படத்தில் அவர் பாகிஸ்தானின் தேசிய கோடியை அவர் கையில் பிடித்திருப்பதை போன்று உள்ளது.

இதன் பின்னோக்கிய தேடல் அவர் பாகிஸ்தான் கொடியில்லாமல் இருக்கும் அது போன்ற மற்றோரு படத்தை www.careers360.com. இணையதளம் வெளியிட்டிருப்பதை காண்பித்தது.

அந்த தேடல் முடிவு உண்மை நிலையை பரிசோதிக்கும் ஒரு இணையதளம் அதன் நம்பகமற்றதன்மையை தோலுரிப்பதையும் அந்த பாகிஸ்தான் கொடி போட்டோஷாப் மூலம் சேர்க்கப்பட்டது என்பதையும் காட்டியது.

3. `ஃபர்ஸ்ட் டிராஃப்ட்` செய்தி சரிபார்ப்பு இணையம்

ஃபர்ஸ்ட் டிராஃப்ட் (First Draft) என்பது கூகுள் நியூஸ் லேப் உள்ளிட்ட ஒன்பது கூட்டாளிகளின் லாப நோக்கமற்ற ஒரு கூட்டு அமைப்பு. இணைய யுகத்தில் உண்மை மற்றும் நம்பகத்தன்மைகள் குறித்த சவால்களை எதிர்கொள்ளவும் அவை பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த கூட்டணி நியூஸ்செக் (NewsCheck) எனும் இணைய சேவையை வெளியிட்டிருக்கிறது. இந்த சேவை மூலம் படங்கள் மற்றும் காணொளிகளின் உண்மைத் தன்மையை சோதிப்பதுடன் அவற்றை மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகளையும் முடிவாக தரும்.

இது ஒரு எளிமையான நான்கு அடுக்கு செயல்முறை. இது ட்விட்டர் மூலம் உள்நுழைவதால் அந்த படத்தை அல்லது காணொளியை மதிப்பீடு செய்து அதன் உண்மை நிலையை கேள்விக்குள்ளாகிய நபரையும் உங்களால் காண முடியும்.

4. ஃபேஸ்புக்கின் உண்மை பரிசோதிக்கும் கருவி

போலியான செய்தி கட்டுரைகள் ஃபேஸ்புக்கில் பரவலாக பகிரப்படுவதை தடுக்க, அந்த சமூக ஊடக இணையதளம் ஒரு கருவியை தொடங்கியுள்ளது. இந்த கருவி பயனாளர்கள் படிக்க அல்லது பகிர விரும்பும் கட்டுரைகளின் உண்மைத்தன்மையை சில பரிசோதகர்கள் கேள்விக்குள்ளாக்கியதை அவர்களுக்குத் தெரிவிக்கும். இக்கருவி பாய்ண்டர் இன்ஸ்டியூட் ஆஃப் மீடியா ஸ்டடீசால் பரிந்துரைக்கப்பட்ட விழுமியங்களுக்கு உட்பட்டு உள்நுழைந்த பரிசோதகர்கள் முடிவுகளையே காட்டும். ஆனால் அந்த பட்டியலில் உலகிலுள்ள பல உண்மை நிலை பரிசோதகர்களும் அடக்கம்.

5. கூகுள் மொழிபெயர்ப்பு கருவி

இது இந்த பட்டியலுக்கு ஒரு வினோதமான இணைப்பாக தோன்றலாம். ஆனால் அது அப்படியல்ல. வாட்சப்பில் வரும் பல செய்திகள் அல்லது கட்டுரைகள் அந்த செய்தியை பெறுபவர் புரிந்து கொள்ளும் மொழியில் இருக்காது. ஆனால் அதில் அதைத் தொடர்ந்து ஒரு மொழிபெயர்ப்பு இருக்கும். அந்த மொழிபெயர்ப்பை சார்ந்து இருப்பதற்கு பதிலாக அதை கூகுள் மொழிபெயர்ப்பு கருவி மூலம் நீங்களே மொழிபெயர்த்து அது என்ன செய்தி என்று அறியலாம்.

இந்த ஆண்டு நடைபெற்ற பிரஞ்சு அதிபர் தேர்தலின்போது அல்-கயிதா எம்மானுவேல் மாக்ரோனுக்கு ஆதரவளிப்பதாகக் கூறும் ஒரு ட்விட்டர் செய்தி வைரலானது.

அல்-கய்தாவுடன் தொடர்புடைய அல்-மஸ்ரா எனும் நாளிதழ் வெளியிட்ட கட்டுரையின் படமும் அந்த பதிவுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கட்டுரை மாக்ரோனுக்கு ஆதரவளிக்கவில்லை. ஆனால் அப்போதைய அதிபர் வேட்பாளரான அவர் அந்த ஆண்டின் தொடக்கத்தில் அல்ஜீரியாவுக்கு மேற்கொண்ட பயணம் குறித்து எழுதப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தைப் படிக்க இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :