'பிளாஸ்டிக் அரிசி' - கட்டுக்கதைகளை மக்கள் நம்புவது ஏன்?

  • 9 ஜூலை 2017
ரப்பர் அரிசி படத்தின் காப்புரிமை YOU TUBE

இது ஒரு பரவலான பிரச்சனை என்பதற்கான ஆதாரங்கள் இல்லாத போதிலும், ஆஃப்ரிக்காவிலும் மற்றும் பிற பகுதிகளிலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறது என்ற வதந்தி சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

குறிப்பாக அரிசி உருண்டைகள் குதிப்பதாக காட்டும் வைரல் வீடியோக்களால் இது தூண்டப்படுகிறது.

பிளாஸ்டிக் அரிசி குறித்த வதந்திகள் கடந்த சில வாரங்களில் செனகல், காம்பியா மற்றும் கானா ஆகிய நாடுகளில் பரவின.

கானாவின் உணவு மற்றும் மருந்துகள் ஆணையம் இது குறித்து ஒரு விசாரணையை தொடங்கும் அளவுக்கு வதந்திகள் பரவின.

பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ள அரிசி என்று சந்தேகிக்கப்படும் அரிசிகளின் மாதிரிகளை சமர்ப்பிக்க நுகர்வோர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு கானா அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.

இறுதியாக கானாவின் சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிளாஸ்டிக் அரிசியை உண்மையான அரியில் கலந்து நுகர்வோரை ஏமாற்றுகின்றனர் என்ற சீனாவில் உருவான வதந்தி 2010-ம் ஆண்டில் இருந்தே சமூக வலைதளங்களில் மீண்டும் மீண்டும் பரவிவருகிறது.

உண்மையிலேயே இந்த வதந்திகள், முற்றிலுமாக பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் உணவு வகைகளைப் பற்றியதாக இல்லாவிட்டாலும்., `போலி அரிசி` விவகாரங்களால் தூண்டப்பட்டன.

சில விவகாரங்களில், உண்ணக்கூடிய ஆனால் அதே வேளையில் சாதாரண அரிசிகளை உயர்வகை `வுச்சாங்` அரிசி என்று சில நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன.

இதன் பின்னர் 2011-ம் ஆண்டில், உருளைக்கிழங்குகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒட்டும் பிசின்களிலிருந்தும் கலப்படத்துடன் அரிசிகள் உற்பத்தி செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின.

இதன் பின்னர் இந்த, பிளாஸ்டிக் அரிசியால் சமைக்கப்பட்ட மூன்று கிண்ணங்கள் அளவு சோற்றினை உண்ணுவது ஒரு பிளாஸ்டிக் பையை உண்பதற்கு இணையானது என்று சீன உணவங்களின் சங்கத்தை சேர்ந்த அலுவலர் ஒருவர் எச்சரித்த போது, இந்த வதந்திகள் மேலும் அதிகரித்தன.

இருப்பினும், அதிகளவிலான பிளாஸ்டிக் சில்லுகள் அரிசியாக விற்பனை செய்யப்பட்டன என்பதற்கான உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் ஒரு போதும் கிடைக்கவில்லை.

படத்தின் காப்புரிமை YOU TUBE

`பிளாஸ்டிக் அரிசி` போன்ற பொருள் ஏற்றுமதி அல்லது பொருட்களை எடுத்துச் செல்லும் பெட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உண்மையான அரிசியை விட பிளாஸ்டிக் சில்லுகளின் விலை உயர்வானதாக இருக்கும்.

கடந்த 2016-ம் ஆண்டு நைஜீரியாவின் சுங்க அதிகாரிகள் 2.5 டன் அரிசியை பறிமுதல் செய்த போது, இந்த செய்தி சமூக வலைதளங்களின் மூலம் ஆப்ரிக்காவில் பரவியது.

சுங்க அதிகாரிகள் முதலில் அதை பிளாஸ்டிக் அரிசி என்று கூறினர்.

பின்னர் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று நைஜீரியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்த பின்னர், அவர்கள் பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இருப்பினும் அந்த அரிசியானது அதிகளவிலான பாக்டீரியாவைக் கொண்டிருப்பதாக சோதனையில் தெரியவந்துள்ளது என நைஜீரியாவின் தேசிய உணவு மற்றும் மருந்துகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

குதிக்கும் அரிசி

ஆனால், அரிசி என்ற பெயரில் பிளாஸ்டிக் விற்கப்படுகிறது என்ற வதந்திகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

அரிசி உருண்டைகள் குதிப்பது போன்று மக்கள் எடுத்து அனுப்பும் வீடியோ காட்சிகள் இந்த வதந்திகள் மேலும் பரவுவதற்கு தூண்டுகோலாக இருக்கின்றன.

இந்த வீடியோக்களில் சில, அரிசி எவ்வாறு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது என்று காட்டும் வகையில் இருக்கின்றன.

படத்தின் காப்புரிமை YOU TUBE

ஐக்கிய இராஜ்ஜியத்தை மையமாக வைத்து இயங்கும், அரிசி சங்கம் என்ற தொழிலமைப்பின் இயக்குனராக இருக்கும் அலெக்சாண்டர் வா இது குறித்து கூறுகையில், இந்த வீடியோக்கள் நம்பகமானதாக இருக்கலாம் ஆனால், அதற்கு அரிசி பிளாஸ்டிக் என்பது காரணம் அல்ல. சரியான வழியில் தயாரிக்கப்படும் அரிசிகள் உண்மையில் குதிக்கக் கூடும் என்பதுதான் என்று. பிபிசி ட்ரெண்டிங் வானொலியிடம் தெரிவித்தார்.

`கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களே அரிசியின் இயற்கை பண்புகளாக அல்லது மூலக்கூறுகளாக இருக்கின்றன, மேலும் அரிசியின் மூலம் இவை போன்று எதாவது செய்ய முடியும்` , என்றார் அவர்.

வெளிநாட்டு இறக்குமதிகளின் மீதான நம்பிக்கையற்ற தன்மை மற்றும் உள் நாட்டு உற்பத்தி பாதுகாப்பு குறித்த கொள்கைகளே இதுபோன்ற வதந்திகள் தொடர்வதற்கான பின்னணியாக இருக்கின்றன என்பதே பிரான்ஸ் 24 தொலைகாட்சியின் தி அப்சர்வர்ஸ் நிகழ்ச்சியின் ஊடகவியளாலரான அலெக்சாண்டர் கேப்ரானின் கருத்தாக இருக்கிறது.

பிளாஸ்டிக் அரிசியினை சுற்றி நடக்கும் கட்டுக்கதைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த கேப்ரான் இதுகுறித்து கூறுகையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியினை வாங்குவதற்கு நுகர்வோர்களை ஊக்குவிக்க இதுபோன்ற போலியான வீடியோக்களை வேண்டுமென்றே மக்கள் பகிர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

` ஐவரி கோஸ்ட் மற்றும் செனகல் போன்ற இறக்குமதி செய்யப்படும் அரிசிகளை சார்ந்திருக்கும் நாடுகளில் இந்த வதந்திகள் மிகவும் பிரபலமாக உள்ளன` என்றும் ` பெரிய அளவில் வதந்திகள் பரவியுள்ள நிலையில், ஏன் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்பதை விளக்கும் அறிக்கைகளை வெளியிட அரசாங்கங்கள் நிர்பந்திக்கப்படுகின்றன.` என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசியின் ஃபோக்கஸ் ஆன் ஆஃப்ரிக்கா என்ற நிகழ்ச்சியின் ஆசிரியராக இருக்கும் ஹசன் அரோனி, போலி அரிசி குறித்த வதந்திகள் பற்றி குறிப்பிடும் போது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் சீனா போன்ற உணவு ஏற்றுமதி நாடுகளை வேண்டுமென்றே குறிவைத்து வருகின்றனரா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றார்.

ஆனால், தலையெடுக்கும் வதந்திகளின் மீது மேற்கு ஆஃப்ரிக்க நாடுகளின் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் கருதுகிறார்.

`இந்த வதந்திகள் உண்மையல்ல என்பதை மக்களுக்கு நிரூபிக்க இது தான் சரியான வழியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்` என்று தெரிவித்த அவர், ` இது உண்மையற்ற செய்தி என்பதையும் அநேகமாக சிலர் இணையத்தில் குறும்புத்தனமாக நடந்து கொண்டதையும் மக்களுக்கு இது உறுதிப்படுத்தும்` என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :