அமெரிக்கா விலகினாலும் பருவநிலை மாற்றம் உடன்படிக்கையை செயல்படுத்த ஜி-20 மாநாட்டில் முடிவு

  • 8 ஜூலை 2017
பருவநிலை மாற்றத்திற்கு எதிராக டிரம்பின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் நடைபெற்ற ஆர்பாட்டம் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பருவநிலை மாற்றத்திற்கு எதிராக டிரம்பின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் நடைபெற்ற ஆர்பாட்டம்

பருவநிலை மாற்றம் தொடர்பாக எட்டப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா பின்வாங்குவதை ஜி-20 குழுவில் உள்ள பிற 19 நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதே நேரத்தில், தாங்கள் பாரிஸ் உடன்பாட்டை செயல்படுத்துவதை முன்னெடுத்துச்செல்வது என்ற உறுதிமொழியை புதுப்பித்துக் கொண்டனர்.

ஹாம்பர்க்கில் முந்தைய நாளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது முட்டுக்கட்டையான இந்த விவகாரம், இறுதியில் உடன்பாட்டை எட்டுவதற்கு வழிவகுத்தது.

பாரிஸ் உடன்பாட்டில் பிற நாடுகள் காட்டிய ஈடுபாட்டுக்கு பாதிப்பு நேராத வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விலகலை உச்சி மாநாடு அங்கீகரித்தது.

ஹாம்பர்க்கில் வன்முறை போராட்டங்கள் வெடித்த நிலையில், இந்த சமரசம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை German government
Image caption ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கலும் அதிபர் டிரம்பும் வியாழக்கிழமை ஒரு மணிநேரம் கலந்துரையாடினர்

சனிக்கிழமை வெளியிடப்பட்ட உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில், "பாரிஸ் உடன்பாட்டில் இருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்கா எடுத்த முடிவை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்"என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம், ஜி20 உறுப்பு நாடுகளின் மற்ற தலைவர்கள், அந்த உடன்பாடு "திரும்பப்பெற முடியாதது" என ஒப்புக் கொண்டுள்ளனர்.

சமரச உடன்பாட்டை உறுதிப்படுத்திய, ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்க்கல் கூறுகையில், "பாரிஸ் உடன்பாடு மீதான டிரம்பின் நிலைப்பாட்டை தற்போதும் வெறுக்கிறேன்" என்றார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption காவல்துறையினர் தண்ணீர் அடித்தும், மிளகு கலந்த நீர் அடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்

ஆனால், மறுபேச்சுவார்த்தையை எதிர்த்த மற்ற 19 நாடுகளின் நிலைப்பாடு மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் பேச்சுக்கள், "மிகவும் கடினமானவை" என்றார் ஏங்கலா மெர்க்கல்.

ஹாம்பர்க்கில் முன்னதாக தலைவர்கள் தனியாகவும் பேச்சு நடத்தினர்.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேவை அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்ததும், "அமெரிக்கா-பிரிட்டன் வர்த்தக உடன்பாடு விரைவில் கையெழுத்தாகும்" என்றார்.

ஜி20 (இருபது நாடுகள் குழு) என்பது வளர்ந்த மற்றும் வளரும் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அடங்கிய உச்சி மாநாடாகும்.

ஹாம்பர்க்கில் ஏன் வீதிதோறும் போராட்டங்கள்?

ஹாம்பர்க் தெருக்களில் மிகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் இடையே சனிக்கிழமை அதிகாலை வேளையில் மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
காவல்துறையினர் தண்ணீர் அடித்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புடின் ஆகியோரின் பங்கேற்பு மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய செல்வச் சமநிலையின்மை ஆகியவற்றுக்கு எதிராக போராடி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள், வாகனங்கள் மற்றும் தடுப்புகளுக்கு தீ வைத்தல், காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசுதல், கடைகளைச் சூறையாடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில், கூரை மிது ஏறி போராட்டக்காரர்களை காவல்துறையினர் விரட்டினர். தெருக்களில் இருந்த காவல் அதிகாரிகள் போராட்டக்காரர்களை தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் கலைத்தனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தொடர்புகளை சரி செய்ய விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதினும், அமெரிக்க அதிபர் டிரம்பும் தெரிவித்துள்ளனர்

சுமார் 200 காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தின்போது காயம் அடைந்தனர். டஜன் கணக்கில் போராட்டக்காரர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

டிரம்ப் - புதின் சந்திப்பில் என்ன நடந்தது?

கடந்த வெள்ளிக்கிழமை ஜி20 உச்சி மாநாட்டிற்கு இடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான தமது முதலாவது சந்திப்பை, கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ரஷிய ஹேக்கர்கள் தலையிட்டதாகக் கூறப்படுவது குறித்து விவாதிக்க, அதிபர் டிரம்ப் பயன்படுத்திக் கொண்டார்.

அந்த சந்திப்பை சாதகமான, ஆனால் ஹேக்கிங் விவாதத்தில் மாறுபாட்டைக் கொண்டிருந்ததாக இரு தரப்பும் கூறின.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாட்டிலை காவல்துறையினர் மீது எறியும் பெண்

ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாஃப்ரோவ் கூறுகையில், "ரஷிய ஆட்சியாளர்கள் (அமெரிக்க அதிபர் தேர்தலில்) தலையிடவில்லை என மிகத் தெளிவான அறிக்கைகள் கூறியதாக தாம் கேள்விப்பட்டதாகவும் அந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்வதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்" என்றார்.

அதே சமயம், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் கூறுகையில், "2016-ஆம் ஆண்டு தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக அமெரிக்க மக்களுக்கு உள்ள கவலைகளை அதிபர் புதினிடம் தனது சந்திப்பின்போது டிரம்ப் எழுப்பினார்" என்றார்.

"அந்த தலைப்பில் மிகவும் வலுவான மற்றும் நீண்ட பரிமாற்றத்தை இருவரும் செய்தனர். ஒன்றுக்கும் அதிகமான தருணத்தில் ரஷியாவின் தொடர்பு பற்றி அதிபர் புதினிடம் அதிபர் டிரம்ப் வலியுறுத்திப் பேசினார்."

இரு நாடுகளும் என்ன நடந்தது என்பது தொடர்பான உடன்பாட்டுக்கு வந்ததா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இருவரின் சந்திப்பின்போது சிரியா போர், பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பிற விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

ட்ரம்ப் புடின் முதல் சந்திப்பு: அமெரிக்க ரஷ்ய உறவு மேம்படுமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ட்ரம்ப் புடின் முதல் சந்திப்பு: உறவு மேம்படுமா?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :