கத்தார் நாடு ஏன் குறிவைக்கப்படுகிறது?

பல விடயங்களில், மத்தியஸ்தராக தன்னைக் காட்டிக் கொள்ளும் கத்தார் நாடு, அந்தத் தகுதியைப் பெற்றிருக்கிறதா?, கத்தார் ஏன் குறிவைக்கப்படுகிறது? அதன் இலக்கு என்ன?

கத்தார்

பட மூலாதாரம், Reuters

பிபிசி உலக சேவைக்காக, கத்தார் குறித்து அலசும் ஜேம்ஸ் ஃப்ளெட்சரின் விரிவான ஆய்வின் அடுத்த பாகம்:

இதில், முதலாவதாக, கத்தார் விவகாரங்கள் பற்றி நிபுணத்துவம் பெற்ற லீனா காதிப் பார்வையில் என்னென்ன விவரங்கள் கிடைக்கின்றன என்பதைத் தருகிறார்.

(பிரிட்டனுக்குச் செல்வதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் லெபனானில் வளர்ந்த லீனா காதிப், இப்போது சத்தம் சிந்தனைக் குழுவின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா திட்டக்குழுவின் தலைவராக உள்ளார்.)

கத்தார் பிராந்தியத்தில் இருந்து உலக அரங்குக்கு சென்றிருக்கிறது, அதற்கு ஏற்ற வலுவான போட்டி நாடு எதுவும் இல்லை.

எனது குழந்தைப் பருவத்தில் கத்தாரைப் பற்றித் தெரியாது. அல் ஜஸீரா வந்த பிறகுதான் கத்தார் பற்றி உலகுக்கு தெரியவந்தது, பெரிய அளவில் பேசப்பட்டது.

பட மூலாதாரம், Adam Pretty/Getty Images

பிற நாடுகளில் இருந்து கத்தார் எப்படி வேறுபடுகிறது? ஊடகம் மற்றும் நடுநிலை என்ற கலவையில் தன்னை வேறுபடுத்திக் காட்டும் கத்தார், மத்தியஸ்தத்தில் ஈடுபட்டு, அனைவருக்கும் நண்பராக பரிமளிப்பதோடு, சச்சரவுக்கான தீர்வு காணச் செல்லும் இடமாகவும் இதுவரை யாருடைய சார்பையும் எடுக்காமல் இருப்பதாக காட்டிக்கொள்கிறது.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியர்களிடையே ஒருபுறம் மத்தியஸ்தம் செய்வதுடன், மறுபுறம் இஸ்ரேலுடன் மத்தியஸ்தம் செய்வதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஒருகட்டத்தில் கத்தார், ஹமாஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, தோஹாவில் இஸ்ரேலுக்கான வர்த்தக அலுவலகத்தையும் வைத்திருந்தது. இது, சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடாத நாடுகளுடன் இஸ்ரேல் மேற்கொள்ளாத நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் அதிக சக்திபெற்ற செளதி அரேபியா போன்ற நாடுகள், அண்டை நாடான இரானுடன் கடுமையான விரோதப்போக்கை கடைபிடிக்க, ஷேக் ஹமாத் மட்டும் நெருக்கமான நட்பை முன்னெடுத்துள்ளார். பிராந்தியத்தில் அனைத்து நாடுகளும் இணக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக கத்தார் எடுத்த சில முயற்சிகள் வெற்றி பெற்றன. அதற்கான உதாரணம் லெபனான். அங்கு 2008இல் ஏற்பட்ட அரசியல் சிக்கல் உள்நாட்டுப் போராக மாறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவிய நிலையில், கத்தார் பிரச்சனையை சுமூகமாக மத்தியஸ்தம் செய்துவைத்தது.

பட மூலாதாரம், Getty Images

அந்த காலகட்டத்தில் நான் லெபனான் சென்றிருந்தேன். அங்கு கத்தாருக்கு நன்றி தெரிவிக்கும் பிரசாரங்கள் வழங்கப்பட்டது. 'தேங்க்யூ கத்தார்' என்ற பதாகைகள் தெருக்களில் ஒட்டப்பட்டிருந்தன. 'தேங்க்யூ கத்தார்' என்ற வார்த்தையானது லெபனான் மக்களிடம் அடிக்கடி புழங்கும் ஒரு சொல்லாகவே மாறிவிட்டதை கவனித்தேன்.

மாபெரும் மாற்றம்

2011இல் அரபு எழுச்சி ஏற்பட்டபோது மாபெரும் மாற்றம் நிகழ்ந்தது. 2011 வரை கத்தார், சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு, நடுநிலைமையான மத்தியஸ்தர் என்ற நற்பெயருடன் செயல்பட்டது. ஆனால், அரபு புரட்சி சமயத்தில், ஏற்கெனவே நற்பெயர் பெறும் பேராவல் கொண்ட கத்தார், இதைப் பயன்படுத்தி, சில அரபு நாடுகளை தனக்கு விசுவாசமாக மாற்றலாம் என்று நம்பியது.

புரட்சியை கத்தார் தூண்டிவிடவில்லை என்பது உண்மை என்றாலும், வாய்ப்பை சாதகமாக பயன்படுத்தி, அனுதாபத்திற்கு உரியவர்கள் என்று தான் நினைத்த குழுக்களுக்கும், மக்களுக்கும் ஆதரவு காட்டியது.

அரபு எழுச்சியில், அல் ஜஸீரா மிகமுக்கிய பங்காற்றியது. அதாவது, நடைபெறும் நிகழ்வுகளை படம்பிடித்து ஒளிபரப்பும் பணியை மட்டும் செய்யவில்லை. அது அரபு புரட்சிக்கு ஆதரவும் அளித்தது.

சர்ச்சைக்குரிய மத, சமூக மற்றும் அரசியல் இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்போடு தொடர்பு கொண்ட குழுக்களுக்கு கத்தார் பெருமளவிலான ஆதரவை வழங்கியதும், இந்த அமைப்பின் பல தலைவர்கள் கத்தாரில் வசித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Reuters

துனீஷியா மற்றும் எகிப்தின் சில பகுதிகளிலும் இந்த இயக்கம் அரசியல் ரீதியான வெற்றியை பெற்றது. ஆனால், கத்தாரின் அண்டை நாடுகளால் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தீவிரவாதக் குழுவாக பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் இங்கு ஏற்பட்ட குழப்பமானது, சிரியாவில் உள்நாட்டு போரில் காணப்படும் குழப்பத்தைவிட மிகவும் அதிகமாக இருந்தது.

ஜிகாதி குழுக்களுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம், அஸாதை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றிவிடமுடியும் என்று கத்தார் திட்டமிட்டது, இதற்கு அடிப்படைக்காரணம் இந்த ஜிகாதிக் குழுக்களில் சில, முஸ்லிம் சகோதரத்துவ கட்சியுடன் தொடர்பு வைத்திருந்தன. எனவே, அஸாத் வெளியேறியபிறகு, சிரியாவில் புதிய தலைவர்களை உருவாக்க இது ஒரு எளிய வழி என்றும், ஒரு புதிய பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தமுடியும் என்றும் கத்தார் கருதியது.

முஸ்லிம் சகோதரத்துவ கட்சியுன் தொடர்பு வைத்திருக்கும் அல் ஜஸீராவை மூடவேண்டும், தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்தவேண்டும் என்று கத்தாரின் அண்டை நாடுகள் நிபந்தனை விதித்திருப்பதன் பின்னணியை நமது நிபுணத்துவம் பெற்ற உதராணம் தெளிவாக விளக்குகிறது. ஆனால் பிந்தைய குற்றச்சாட்டில் ஒரு பாசாங்குத்தனம் இருப்பதாக லீனா காதிப் கூறுகிறார்.

சிரியா விவகாரத்தில் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பது குறித்த கத்தாரின் இதே கொள்கையைத்தான் செளதி அரேபியாவும் கொண்டிருக்கிறது

எனவே நாம் மீண்டும் முன்னெழுப்பும் கேள்வி, தீவிரவாதக் குழுக்களுக்கு அனைத்து நாடுகளும் நிதியுதவி அளிக்கும்போது, ஏன் கத்தார் மட்டும் இந்த விவகாரத்தில் பிரத்யேகமாக குறி வைக்கப்படுகிறது?

கத்தார் ஒரு சிறிய நாடு, அனைவருடனும் நட்புடன் இருக்க விரும்பும் ஒரு நாடு என்று வெளியில் இருந்து பார்க்கும் நாடுகளுக்கு தோன்றினாலும், கத்தாரின் அண்டை நாடுகள் இதை வேறுவிதமாக பார்க்கின்றன.

பட மூலாதாரம், EPA

தன்னுடைய பாதையை சுயமாக முடிவுசெய்யும் ஒரு நாடு, அது தேர்ந்தெடுத்திருக்கும் பாதையானது, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு அதிக ஆதரவை கொடுக்கிறது. மேலும், இரானுடன் அதிக இணக்கத்துடன் இருப்பது போன்ற விசயங்களை செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளால் முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

எனவே, கத்தார் தங்களது பரம்பரை எதிரியுடனான உறவுகளை வலுப்படுத்தினால், அதை எப்படி நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியும்?

சரி, கத்தார் விவகாரம் குறித்து, அடுத்த நிபுணர் சொல்லும் சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

இன்றியமையாத நண்பன்

லண்டனில் கிங்க்ஸ் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்வதற்கு முன்னதாக, ஆய்வு படிப்புக்காக பல ஆண்டுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார் டேவிட் ராபர்ட்ஸ். ஆய்வில் சலிப்படையாமல் இருப்பதற்காக, விசித்திரமான, அற்புதமான நாடான கத்தாரை தேர்ந்தெடுப்பது சரியான தேர்வாக இருக்கும் என்று கருதிய அவரது பார்வை:

உலகில் ஆபத்தான பகுதியில் இருக்கும்போது, பாதுகாப்பு வேண்டுமானால் வலுவான ராணுவம் வேண்டும் என்பது சர்வதேச அடிப்படை கருத்தாக்கங்களில் ஒன்று, இது கத்தாருக்கு அசாதாரணமானது.

பிரச்சனை முளைத்தது, எனவே, கத்தார் உட்பட வளைகுடா நாடுகள் அமெரிக்க ராணுவ உதவியைப் பெறுவதற்கு ஆவலாக இருந்தன; பதிலும் வழங்கப்பட்டு, அமெரிக்க ராணுவத்தின் சக்தி அதிசயமாக பார்க்கப்பட்டது.

தனது அண்டை நாடுகளை வெல்வதற்காக பெருமளவு பணத்தை செலவளிப்பதில் கத்தாருக்கு ஆட்சேபணை இருந்ததில்லை என்று ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம்.

பட மூலாதாரம், Getty Images

1996 முதல், அல்-உதீத் (Al Udeid) என்ற பிரம்மாண்டமான ராணுவத் தளத்தை ஒரு பில்லியன் டாலர் செலவில் கத்தார் அமைத்தது. கத்தார் எந்தவிதமான நடவடிக்கைக்கும் தயார் என்பதை அது சுட்டிக்காட்டியது. நீங்கள் விரும்பினால், உங்களுக்காக பிரம்மாண்டமான ராணுவத் தளத்தை நாங்கள் கட்டித்தருகிறோம் என்று அமெரிக்கா சொன்னது. எனவே, கத்தாரில் அமெரிக்காவின் இருப்புக்கான ஒரு முக்கியமான காரணமாக இந்த ராணுவத் தளம் அமைந்துவிட்டது.

இந்த உத்தி பலித்தது. 2003இல் அமெரிக்கா செளதி அரேபியாவில் இருந்த தனது பெரிய ராணுவ தளத்தை கத்தாருக்கு மாற்றிவிட்டது. அல் உதீதில் இருக்கும் ராணுவத்தளம்தான், அமெரிக்கா பிற நாடுகளில் அமைத்திருப்பதிலேயே மிகப்பெரியது. பிராந்திய நடவடிக்கைகளுக்கான தலைமையகமாகவும், சிறப்பு படைகளின் செயல்பாட்டு தளமாகவும் மாறிய அல் உதீதில் மொத்தம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இருக்கின்றனர்.

கத்தாரின் இந்த உத்தியின் அடிப்படைநோக்கம் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை தடுப்பதுதான். அமெரிக்கா, கத்தாருக்கு அடிப்படை பாதுகாப்பை அளிக்கிறது.

அமெரிக்க நிலை மாறுமா?

செளதியில் இருந்து 2003 இல் வெளியேறியது போல், தனது ராணுவதளத்தை அமெரிக்கா மீண்டும் மாற்றினால் கத்தாரின் நிலை?

அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அது மிகவும் அசாதரணமான நிலையில் மட்டுமே நடக்கக்கூடியது. இதுபோன்ற பல சாத்தியங்களையும் கத்தார் கூர்ந்து ஆராய்ந்து, சுலபமாக இந்தத் தளத்தை மாற்றிவிட முடியாதவாறு இந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது.

பட மூலாதாரம், Sean Gallup/Getty Images

அமெரிக்காவால் தவிர்க்க முடியாத அளவு முக்கியத்துவத்தை கத்தார் ஏற்படுத்தியிருந்தாலும், டொனாலட் டிரம்ப் அதிபராக இருக்கும்போது எதுவும் நடக்கலாம் என்பதையும் மறுக்கமுடியாது. ஆனால், சக்திவய்ந்த நாடுகளை நட்பாக வைப்பதற்கு ராணுவ கூட்டணியை மட்டுமே கத்தார் நம்பவில்லை.

கத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது என்பதை நிபுணர்களின் ஆதரங்கள் சிறப்பாக விளக்கியிருக்கின்றன. ஷேக் ஹமாத் தலைமையில் இந்த சிறிய நாடு, மாபெரும், தைரியமான கண்ணோட்டம் கொண்டதாக உருமாறியிருக்கிறது. தனது சிறப்பம்சங்கள் மற்றும் பிரச்சனைகளில் மத்தியஸ்தம் செய்யும் கத்தாரின் செயல்பாடுகள் உலகில் ஒரு முக்கியப் புள்ளியாக மாற்றியிருக்கிறது.

அமெரிக்காவுடனான உறவுகள் மற்றும் சர்வதேச இயற்கைவாயு வாடிக்கையாளர்கள் என்ற பாதுகாப்பு கவச உத்தி கத்தாருக்கு அனுகூலமாக இருப்பது அதன் வெற்றி. ஆனால், தொலைதூரத்தில் உள்ள நாடுகளுடன் இருக்கும் உறவு, அண்டை நாடுகளுடன் இல்லை என்பது நெருடலானதுதான்.

ஆனால், பங்காளிச் சண்டை என்பது உலகம் முழுவதும் இயல்பாகிவிட்டது.

குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா?

காணொளிக் குறிப்பு,

குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :