மொசூல் போர்: பொதுமக்கள் இறப்புகளுக்கு அரசு, ஐஎஸ் மீது அம்னெஸ்டி குற்றச்சாட்டு

  • 11 ஜூலை 2017
மொசூல் நகரிலி்ருந்து வெளியேறும் பொதுமக்கள் (23,ஜுன்,2017) படத்தின் காப்புரிமை AFP
Image caption கூட்டணிப் படைகள் மற்றும் ஐ.எஸ் போராளிகள் என இரு தரப்பினரும், மொசூல் நகர பொதுமக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இராக்கின் மொசூல் நகரத்தை மீட்க இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட்ட இராக் மற்றும் அதன் கூட்டணிப் படைகள் அதிக திறன் வாய்ந்த ஆயுதங்களைத் அவசியமில்லாமல் பயன்படுத்தியதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த பகுதிகளில் அப்படைகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அம்னெஸ்டி கூறுகிறது.

கூட்டணிப் படைகளின் அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், பொதுமக்களைக் காப்பாற்ற தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ததாக முன்னர் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இஸ்லாமிய அரசு அமைப்பின் போராளிகளும் தீவிரமான உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அம்னெஸ்டி குற்றம்சாட்டியுள்ளது.

அந்தத் தீவிரவாதிகள், கூட்டணிப் படைகளின் தாக்குதலின்போது மனிதக் கேடயங்களைப் பயன்படுத்தியதாகவும், குறுகிய காலத்தில் நூற்றுக் கணக்கானோரை, ஒரு வேளை ஆயிரக் கணக்கானோரைக் கொன்று, அவர்களின் உடல்களை, பிறரை எச்சரிக்கும் விதமாக மின் கோபுரங்களில் தொங்கவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

"துல்லியமற்ற ஆயுதங்கள்"

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவரின் கூற்றை மேற்கோள்காட்டும், அம்னெஸ்டி அமைப்பின் 'மேற்கு மொசூலில் மனிதப் பேரழிவு' என்னும் அறிக்கை, இராக்கிய மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் குண்டுவீச்சு "மிகப் பெரிய எண்ணிக்கையிலான" பொதுமக்களைக் கொன்றதாக கூறுகிறது.

உயிரிழந்த பொது மக்களின் எண்ணிக்கை குறித்து விசாரிக்க ஒரு சுதந்திரமான ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை கோரிக்கை வைக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption `தப்பிச் செல்ல முயலும் பொதுமக்கள் ஐ.எஸ் அமைப்பினரால் சுடப்படுவார்கள் அல்லது வீட்டில் கொல்லப்படுவார்கள்`- அம்னெஸ்டி

'மொசூலில் ஐ.எஸ் எதிர்ப்புப் படைகள் அதீத ஆயுதங்களை பயன்படுத்தின'

ஜனவரி முதல் மே மாதத்தின் மத்திய காலம் வரை மொசூலின் மேற்கு பகுதியில் நடந்த போரை ஆய்வு செய்த அந்த அமைப்பு, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ள பகுதிகளுக்குள் பொதுமக்களை அடைத்து வைத்தபோதும் கூட்டணிப் படைகள் தங்கள் போர் உத்திகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அவர்கள் "துல்லியமாகத் தாக்காமல் பரவலான பகுதிகளில் மோசமான விளைவுகளை உண்டாக்கும் ஆயுதங்களை மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த பகுதிகளில் பயன்படுத்தினார்கள்," என்று கூறும் அந்த அறிக்கை, அப்படையினர் திகிலூட்டக்கூடிய அளவுக்கு நெருப்பு அரண்களைப் போரில் பயன்படுத்தியாகத் தெரிவிக்கிறது.

"ஐ.எஸ் அமைப்பினர் மனித கேடயங்களைப் பயன்படுத்தியது, அரசு ஆதரவுப் படைகளுக்கு உள்ள, பொதுமக்களைக் காக்க வேண்டிய சட்டரீதியான பொறுப்பைக் குறைத்து விடாது," என்று அம்னெஸ்டி அமைப்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆய்வு இயக்குனர் மாலூஃப் லின் கூறியுள்ளார்.

இராக்கிய மற்றும் கூட்டணிப் படைகளுக்கு எதிரான அம்னெஸ்டியின் குற்றச்சாட்டுகள்

  • அப்படைகள் மேற்கொண்ட தாக்குதல்கள், அவர்களின் ராணுவ இலக்குகளை மட்டும் குறிவைத்துத் தாக்கியது போல தெரியவில்லை. மாறாக அதில் பொதுமக்கள் கொல்லப்படவும் காயமடையவும் நேர்ந்தது.
  • சில பொதுமக்களின் உயிரிழப்பும், காயங்களும் பொருத்தமற்ற ஆயுதங்களைத் தேர்வு செய்தது மற்றும் இலக்கைப் உறுதிப்படுத்துவதற்கு முன்னர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஆகியவற்றால் ஏற்பட்டது போலத் தோன்றுகிறது.
  • மார்ச் 17அன்று மொசூலின் அல்-ஜடிடா பகுதியில் இரண்டு துப்பாக்கி ஏந்திய ஐ.எஸ் படையினரைக் கொல்ல அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஆனால் அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
  • மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ராயல் ஏர் ஃபோர்ஸ் நடத்திய வான் வழித் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று பிரிட்டன் அரசு கூறுவது "மிகவும் சாத்தியம் இல்லாதது."

இஸ்லாமிய அரசு படைகளுக்கு எதிரான அம்னெஸ்டியின் குற்றச்சாட்டுகள்

  • மொசூல் பகுதியில் பொதுமக்களைக் கட்டாயமாக வெளியேற்ற ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் மூலம் அருகாமையில் இருந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்கள் மனித கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டனர்.
  • வீடுகளின் கதவுகளில் உள்ள உலோகங்களை உருக்கி பற்றவைத்தும், நுழைவாயிலின் முன்பு குழிகளைத் தோண்டியும் பொதுமக்களை வீடுகளிலேயே சிறை பிடித்தனர். தப்ப முயன்ற நூற்றுக்கணக்கான, ஒரு வேளை ஆயிரக்கணக்கான மக்களை குறுகிய காலத்தில் கொன்றனர்.
  • தப்ப முயன்ற குடிமக்களை அவர்கள் எவ்வாறு கொன்று , அவர்களின் உடல்கள் மின் கோபுரங்களில் தொங்க விட்டனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் விவரித்தார்.
  • "உங்கள் வீட்டின் உள்ளேயே இருந்தால் போரினால் உங்கள் வீட்டுக்குள்ளேயே இறந்து போவீர்கள். தப்ப முயன்றால் அவர்கள் உங்களைப் பிடித்துக் கொல்வார்கள்," என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :