பாலியல் உறவால் ஏற்படும் கொடிய நோய் தொற்றை தடுக்க முதல் தடுப்பூசி

தடுப்பூசி படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் உறவின் மூலம் பரவும் கொனாரியா (gonorrhoea) எனப்படும் மேகவெட்டை நோய்த்தொற்றுக்கு முதன்முறையாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, நியூசிலாந்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேகவெட்டை நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் கண்டுபிடிக்க முடியாது என்ற அச்சம் நிலவிவந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

"சூப்பர் கொனொரியா" உலக அளவில் பரவுவதை தடுக்க மருந்து கண்டுபிடிப்பது இன்றியமையாதது என உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது.

15 ஆயிரம் இளைஞர்களுக்கு தடுப்பூசி கொடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மூன்றில் ஒரு பங்கினருக்கு நோய் பாதிப்பு குறைந்திருப்பதாக லான்செட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.

ஆண்டுதோறும் சுமார் 78 மில்லியன் மக்களுக்கு பாலியல் உறவு மூலம் பரவும் இந்த நோய்த் தொற்றால், மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது.

நோய்த்தொற்று எவ்வளவு முறை ஏற்பட்டாலும், மனித உடல் இந்த நோய்க்கான எதிர்ப்புத் திறனை மேம்படுத்தாது.

எதிர்பாராத துவக்கம்

மூளையுறை அழற்சி (Meningitis) நோய் பரவலை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி, நியூசிலாந்தில் 2004 முதல் 2006 வரை, வயது வந்த சுமார் ஒரு மில்லியன் பேருக்கு வழங்கப்பட்டது.

பாலியல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் இருந்து கிடைத்த தரவுகளின்படி, இந்தத் தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில் 31 சதவீதத்தினருக்கு நோய்த்தொற்று குறைந்திருப்பதை ஆக்லாந்து பல்கலைகலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

மூளையுறை அழற்சி (Meningitis), நெய்ஸெரியா மெனின்கிடிடிஸ் (Neisseria meningitides) ஆகியவற்றை உருவாக்கும் நுண்ணுயிரிகளுக்கு மிகவும் நெருக்கமான இனங்கள்தான், கொனாரியா மற்றும் நெய்ஸெரியா கொனாரியாவையும் உருவாக்குகின்றன.

கொனாரியாவுக்கு எதிராக "கூட்டு பாதுகாப்பை" மெனின்ஜிடிஸ் பி வழங்கும் என்று தோன்றுகிறது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்களின் ஒருவரான டாக்டர் ஹெலன் ஹாரிஸ் சொல்கிறார், "கொனாரியாவுக்கு எதிரான முதல் பாதுகாப்பு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் எதிர்ப்பு செயல்முறையின் காரணம் கண்டறியப்படவில்லை, ஆனால், எங்களது கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் தடுப்பூசிகளை மேம்படுத்த உதவியாக இருக்கும்."

இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று நம்பப்படுகிறது.

கொனாரியா என்றால் என்ன?

படத்தின் காப்புரிமை CAVALLINI JAMES/SCIENCE PHOTO LIBRARY

நெய்ஸெரியா மெனின்ஜிடிஸ் என்ற நுண்ணுயிரியால் ஏற்படும் கொனாரியா நோய்த் தோற்று, பாதுகாப்பில்லாத பாலியல் உறவால் பரவுகிறது.

பிறப்புறுப்புகளில் இருந்து மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் திரவம் வெளியேறுவது, சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது, மாதவிடாய் காலத்துக்கு இடைப்பட்ட காலத்தில் உதிரப் போக்கு ஏற்படுவது போன்றவை இந்த நோயின் அறிகுறிகள்.

எதிர்பாலினத்தவருடன் பாலியல் உறவில் ஈடுபடும் ஆண்களில் பத்தில் ஒருவருக்கும், பெண்களில் நான்கில் மூன்று பங்கு பெண்களுக்கும் இந்த நோய் ஏற்படுகிறது. ஓரினச் சேர்க்கை ஆண்களிடம் இந்த நோயை சுலபமாக அடையாளம் காணக்கூடிய அறிகுறிகள் தென்படுவதில்லை

சிகிச்சையளிக்கப்படாத நோய்த்தொற்றினால் மலட்டுத்தன்மை, இடுப்பு அழற்சி நோய் ஏற்படலாம். கருவுற்ற தாயிடமிருந்து சிசுவுக்கும் இந்த நோய் பரவலாம்.

தடுப்பூசி கிடைக்குமா?

MeNZB என்று அறியப்படும் இந்த தடுப்பூசி, இனிமேலும் கிடைக்குமா என்பதும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது.

இதில் காணப்படும் கூறுகளில் பல, புதிய மென் பி ஜேப் (Men B jab) எனப்படும் 4CMenB லும் இருக்கிறது.

வழக்கமாக குழந்தைகளுக்கு கொடுக்கும் தடுப்பு மருந்தாக பிரிட்டனில் மட்டுமே 4CMenB பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவில் சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரியும் பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான ஸ்டீவென் பிளாக் கூறுகிறார், "பிரிவு பி வகையை சேர்ந்த மெனிகொகோகல் தடுப்பூசியின் திறன் கொனாரியாவுக்கு மிதமான பாதுகாப்பு வழங்க முடிந்தால்கூட, அது பொது சுகாதார நலன்களை கணிசமான அளவில் பாதுகாக்கும்".

படத்தின் காப்புரிமை Getty Images

கொனாரியாவிற்கு சிகிச்சையளிப்பது சிரமம் என்னும்போது, கொனாரியா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கவேண்டியது அவசியமாகிறது.

கொனோரியா உலக அளவில் பரவிவருவதாக கடந்த வாரம் எச்சரித்த உலக சுகாதார நிறுவனம், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் கொண்டு குணப்படுத்துவது மிகவும் சிரமமானது என்றும் எச்சரித்திருந்தது.

ஜப்பான், பிரான்சு மற்றும் ஸ்பெயினில் தலா ஒரு நோயாளிக்கு கண்டறியப்பட்ட இந்த நோய்த்தொற்று முற்றிலும் சிகிச்சையளிக்க முடியாததாக இருந்ததாக உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் டியோடொரோ வி கூறுகிறார்.

"கூட்டு பாதுகாப்பிற்கான சில நம்பிக்கைகளுக்கான வாய்ப்புகள் தற்போது அதிகமாகியுள்ளது" என்று அவர் சொல்கிறார்.

"கொனாரியாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கான சாத்தியங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன."

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :