ரஷ்ய வழக்கறிஞருடன் சந்திப்பு: `ஒன்றுமில்லாத விஷயம்` என்கிறார் டிரம்ப் மகன்

  • 12 ஜூலை 2017
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் டொனால்ட் டிரம்ப்பை கட்டித்தழுவும் அவரது மகன் ஜுனியர் டிரம்ப் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2016-ஆம் ஆண்டு ஜுலை மாதம் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவரை கட்டித் தழுவும் டொனால்ட் டிரம்ப் ஜுனியர்

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் தனக்கு உதவி செய்வதாக கூறிய ரஷ்ய பெண் வழக்கறிஞர் உடனான சந்திப்பு குறித்து, தன்னுடைய தந்தையிடம் கூறவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து `சொல்லும் அளவுக்கு ஒன்றுமில்லை ` என ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியிடம் தெரிவித்த டொனால்ட் டிரம்ப் ஜுனியர் , ஆனால் இதை தான் வேறு விதமாக கையாண்டிருக்க வேண்டும் என்றார்.

கிரெம்ளின் மாளிகையுடன் தொடர்புடையதாக கூறப்பட்டவரும்,, ஹிலாரி கிளிண்டன் குறித்த பாதகமான தகவல்கள் அடங்கிய ஆவணங்களை வைத்திருப்பதாக கூறப்பட்டவருமான ஒரு பெண் வழக்கறிஞர் , தன்னை சந்திக்க வருமாறு விடுத்த அழைப்பை தான் வரவேற்றதைக் காட்டும் மின்னஞ்சல்களை டிரம்ப்பின் மகன் வெளியிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு குறித்து கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ரஷ்யா இடையூறு செய்ததாக வரும் குற்றச்சாட்டுகள் டொனால்ட் டிரம்பை சூழ்ந்து வருகின்றன.

இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என டிரம்ப் மறுத்திருந்த நிலையில், தேர்தலில் இடையூறு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ந்து திட்டவட்டமாக மறுத்து வந்தது.

`கடந்த ஆண்டு நடந்த இந்த சந்திப்பு குறித்து உங்கள் தந்தையிடம் கூறினீர்களா?` என ஃபாக்ஸ் நியூசின் சீன் ஹன்னிட்டி எழுப்பிய கேள்விக்கு,` இல்லை. இது ஒன்றுமே இல்லாத ஒரு சாதாரண சந்திப்பு. இதில் சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை.` என டிரம்ப் ஜுனியர் பதிலளித்தார்.

`இந்த விடயம் குறித்து நீங்கள் ஆராயத் துவங்கும் வரை, அந்த சந்திப்பு குறித்து எனக்கு எதுவும் நினைவில்லை. அது என்னுடைய 20 நிமிடங்களை வீணடித்த, ஒரு வருந்தத்தக்க சந்திப்பு` என்றார் அவர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவர் கட்டிடத்தில், டொனால்ட் டிரம்ப் ஜுனியர்,அவருடைய மைத்துனர் ஜாரெட் குஷ்னர் மற்றும் பிரச்சாரக்குழு தலைவரான பால் மனஃபோர்ட் ஆகியோர் ரஷ்ய வழக்கறிஞரான நடாலியா வெசெல்னிட்ஸ்கயாவை சந்தித்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption துவக்க விழா கொண்டாட்டத்தில் டொனால்ட் டிரம்ப் ஜுனியர் மற்றும் ஜாரெட் குஷ்னர்

இந்த சந்திப்பு குறித்து எப்படி வெளியில் தெரிந்தது?

ஹிலாரி கிளிண்டனை குற்றவாளியாக்க தேவையான ஆவணங்கள் ரஷ்யாவிடம் இருந்து பெறமுடியும் என்று உறுதிமொழியளித்து, பிரிட்டிஷ் செய்தித் தொடர்பாளரான ராப் கோல்ட் ஸ்டொன் என்பவரிடமிருந்து டொனால்ட் டிரம்ப் ஜுனியருக்கு மின்னஞ்சல் வந்தது.

இந்த நேரத்தில், அவருடைய தந்தை குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான உத்தேச பட்டியலில் இருந்தார். மேலும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுடனான தேர்தல் மோதலையும் டிரப்ம் எதிர் நோக்கியிருந்தார்.

தாங்கள் ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்த தகவல்கள், `மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை ` என்றும், மேலும் அவை, ``ரஷ்ய அரசு டிரம்ப்புக்கு அளிக்கும் ஆதரவின் ஒரு பகுதி`` என்றும் கோல்ட் ஸ்டோன் அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

`இந்த சந்திப்பு நடந்தது. ஆனால் அந்த பெண்மணி பயனுள்ள தகவல்கள் ஏதும் எங்களுக்கு அளிக்கவில்லை. இந்த சந்திப்பினால் 20 நிமிட நேரம் வீணாகியது.` என ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் ஜுனியர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனை குறித்து அதிபர் டிரம்ப் என்ன கூறுகிறார்?

இந்த பிரச்சனையில் தனது மகனுக்கு ஆதரவு தெரிவித்து சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டிரம்ப், தனது மகன் ` உயர்ந்த மனிதன்` என விவரித்துள்ளது மட்டுமின்றி அவரின் வெளிப்படைத் தன்மையையும் பாராட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா அரசின் தலையீடு இருந்தது என்பது பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்று முன்னர் கோல்ட் ஸ்டோன் மறுப்பு தெரிவித்திருந்தார்.

ஹிலாரி கிளிண்டனை பாதித்திருக்கக்கூடிய தகவல்கள் தன் வசம் ஒருபோதும் இருக்கவில்லை என கூறியுள்ள வழக்கறிஞர் வெசெல்னிட்ஸ்கயா , கிரெம்ளினுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதையும் மறுத்துள்ளார்.

இந்த மின்னஞ்சல் விவகாரம் மிகவும் கவலையுறச் செய்வதாக சவுத் கரோலைனா பகுதியின் குடியரசுக் கட்சியின் செனட்டரான லிண்ட்சே கிரஹாம் கூறியுள்ளார்.

டிரம்ப் ஜுனியர் மற்றும் அவருடன் சேர்ந்து அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அனைவரும், நாடாளுமன்ற புலனாய்வு கமிட்டியின் முன் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என விரும்புவதாக அந்த கமிட்டியின் உயர் பொறுப்பில் உள்ள ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ஆடம் ஷிஃப் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலையீடு மற்றும் அதற்கு டிரம்ப் அணியினர் யாராவது உதவி செய்துள்ளார்களா என்பது குறித்து சிறப்பு கவுன்சில் உட்பட பல அமெரிக்க நாடாளுமன்ற குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

பிற செய்திகள்:

பிரிட்டனில் குறைந்த விலையில் விமான ஓடுபாதைகளை அமைக்கவிருக்கும் இந்தியர்

5 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தை இழந்த கங்னம் ஸ்டைல்

பாலியல் உறவால் ஏற்படும் கொடிய நோய் தொற்றை தடுக்க முதல் தடுப்பூசி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :