அன்னை தெரசாவின் சீருடை சேலைக்கு பிராண்ட் அடையாளம்

  • 13 ஜூலை 2017
அன்னை தெரசாவின் சீரூடை சேலைக்கு பிராண்ட் அடையாளம் படத்தின் காப்புரிமை AFP/Getty Images

நோபல் பரிசு பெற்ற ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியான அன்னை தெரசா அணிந்த நீல நிற மூன்று கோடுகளை ஓரமாக கொண்டிருக்கும் வெள்ளை நிற சேலைக்கு பிராண்ட் அடையாளம் வழங்கப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த வெள்ளை சேலை, வணிக ரீதியாக தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் அன்னை தெரசா நிறுவிய மிஷினரிஸ் ஆப் சேரிட்டி துறவற சபைக்கு இந்த பிராண்ட் அடையாள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அன்னை தெரசாவை, "கொல்கத்தா புனித தெரசா" என்று வத்திக்கான் புனிதராகப் பிரகடனப்படுத்திய நேரத்தில், இந்த நீல நிற ஓரமுடைய வெள்ளை சேலை "மிஷினரிஸ் ஆப் சேரிட்டி" துறவற சபையினருக்கு அறிவு சார் சொத்துரிமையாக இந்திய அரசு வழங்கியது. ஆனால், அந்த நேரத்தில் பொதுவெளியில் அறிவிக்காமல் இதனை ரகசியமாக வைத்துக்கொள்ள இந்த துறவற சபை முடிவு செய்திருந்தது.

மூன்று நீல நிற கோடுகளை ஓரமாக கொண்ட வெள்ளை சேலை அணிந்து கொண்டு இந்தியாவின் கொல்கத்தா (கல்கத்தா) மாநகரில் ஏழைக்ளுக்காக சுமார் அரை நுற்றாண்டாக அன்னை தெரசா சேவைகள் பல புரிந்து வந்தார்.

படத்தின் காப்புரிமை AFP

இந்த வெள்ளை சேலையின் ஓரத்தில் அமைந்திருக்கும் மூன்று நீல நிற கோடுகளில் ஒன்று, பிற இரு நீல நிற கோடுகளை விட சற்று அகலமானதாக இருக்கும்.

தொடங்கி 67 ஆண்டுகள் ஆகியிருக்கும் "மிஷினரிஸ் ஆப் சேரிட்டி" துறவற சபையில் உலக அளவில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கன்னியாஸ்திரிகள் சேவை செய்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் தொடர்ந்து அணிந்து வருகின்ற இந்த நீல நிற ஓரமுடைய வெள்ளை சேலை உலகளவில் இந்த துறவற சபையின் சீருடையாக ஆகியுள்ளது.

2013 ஆம் ஆண்டு இதற்கான பிராண்ட் அடையாளத்தை பெறுவதற்கு விண்ணப்பித்தாக கூறுகிறார் இந்த துறவற சபையினருக்காக சட்ட ரீதியான பணிகளை நிறைவேற்றுகின்ற கொல்கத்தாவை மையமாகக் கொண்டு வேலை செய்துவரும் பிஸ்வாஜித் சர்க்கார்.

படத்தின் காப்புரிமை DOUG COLLIER/AFP/Getty Images

"எதிர்காலத்தில் வணிக நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தப்படும் நிலையை தடுப்பதற்காக இந்த நீல நிற ஓரமுடைய வெள்ளை சேலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று எனது மனதில் உதித்தது" என்று இந்த வழக்கறிஞர் கூறுகிறார்.

"யாராவது இந்த சேலையை அணியவோ அல்லது இந்த நிற வகையை பயன்படுத்தவோ விரும்பினால், எங்களுக்கு எழுதலாம். அதில் வணிக நோக்கம் இல்லை என்று உணர்ந்தால் நாங்கள் அனுமதிப்போம்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த எளிய நீல நிற ஓரமுடைய வெள்ளை சேலை அன்னை தெரசாவோடும், அவர்களின் துறவற சபையை சேர்ந்த கன்னியாஸ்திரிகளோடும் நீண்ட காலமாக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.

அல்பேனியாவை சேர்ந்த பெண் துறவியான அன்னை தெரசா 1948 ஆம் ஆண்டு வத்திக்கானிடம் இருந்து அனுமதி பெற்று, இந்த ஆடையையும், கழுத்தில் சிறியதொரு சிலுவையையும் அணிய தொடங்கினார்.

படத்தின் காப்புரிமை AFP

தூய்மையோடு தொடர்டையதாக இருந்ததால், வெள்ளை சேலையில் நீல நிற ஓரத்தை அன்னை தெரசா தேர்ந்தெடுத்தார்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, கொல்கத்தா புறநகரில் இந்த சபையினரால் நடத்தப்பட்டு வந்த இல்லத்தில் வாழ்ந்த தொழுநோயாளிகள் இந்த சேலைகளை தான் அணிந்து வந்தனர்.

இறப்புக்கு முன்னால், "தன்னுடைய பெயர் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படக்கூடாது என்று அன்னை தெரசா ஆணைகள் வழங்கியதாக இந்த துறவற சபையின் கன்னியாஸ்திரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி ,இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே அன்னை தெரசாவின் பெயரை வர்த்தக சின்னமாக்க சர்க்கார் உதவினார்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
Image caption கொல்கத்தாவிலுள்ள புனித தெரசாவின் கல்லறை

ஆனாலும், அன்னை தெரசாவின் பெயர் வணிக ஆதாயங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக இந்த துறவற சபையினர் தெரிவிக்கின்றனர்.

நேபாளில் ஆசிரியர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகின்ற பள்ளியொன்று அன்னை தெரசாவின் பெயரில் இயங்கி வருகிறது.

அன்னை தெரசாவின் பெயரை பயன்படுத்தி ருமேனியாவில் பாதிரியார் ஒருவர் நிதி திரட்டி வருகிறார்.

கொல்கத்தாவில் இந்த துறவற சபையின் தலைமையகத்திற்கு அருகிலுள்ள கடைகள் வாடிக்கையாளர்களிடம், நினைவுப் பொருட்களின் விற்பனையில் இருந்து கிடைக்கும் வருமானம் இந்த சபைக்கு நன்கொடையாக வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றன.

அன்னை தெரசாவின் பெயரில் கூட்டுறவு வங்கியொன்று செயல்பட்டு வருகின்றது.

எனவே, இது தொடர்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியதாக தெரிவிக்கும் சர்க்கார், இதன் மூலம் அன்னை தெரசாவின் பெயரும், புகழும் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என்று உலகிற்கு எடுத்துரைக்க முயல்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :