எழுத்துருவும், ஊழல் வழக்கும்: சமூக ஊடகத்தில் சிரிக்கும் பாகிஸ்தான்

  • 14 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Twitter

பாகிஸ்தானில் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் பனாமா பேப்பர்ஸ் (Panama Papers) ஊழல் விவகாரத்திற்கும், அதிகம் அறியப்படாத கேலிப்ரி (Calibri) எழுத்துருவுக்கும் உள்ள சாத்தியமில்லாத தொடர்பு குறித்து அந்நாட்டு சமூக வலைதளப் பயன்பாட்டாளர்கள் நையாண்டி செய்து வருகின்றனர்.

அவ்வழக்கை விசாரணை செய்து வரும் கூட்டு விசாரணைக் குழு, அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் மகள் மரியம் நவாஸ் சமர்ப்பித்துள்ள ஆவணங்களில் கேலிப்ரி எழுத்துரு 2007-ஆம் ஆண்டுக்கு முன்னர் பயன்பாட்டில் இல்லாததால் அதுகுறித்து அந்தக் குழுவின் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2006-ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட அந்த ஆவணங்களை லண்டனைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2016-ஆம் ஆண்டு வெளியான, பனாமா பேப்பர்ஸில் ஷெரிஃபின் பிள்ளைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறுப்படுவதை அந்த ஊழல் வழக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரதமர், வெளிநாடுகளில் எந்த நிறுவனங்களையும் நடத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

சமூக ஊடகத்தில் பிரபலமான எழுத்துரு

அந்நாட்டின் சமூக வலைத்தளங்கள் கேலிப்ரி எழுத்துரு பற்றிய பதிவுகளால் நிரம்பி வழிகின்றன. ஒரு தேசிய சர்ச்சையின் மையமாக அந்த எழுத்துரு உருவாகியுள்ள நிலையில் பாகிஸ்தான் சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் தங்கள் கேளிக்கைகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை #Calibri

பாகிஸ்தானில் ட்விட்டரில் #Calibri என்னும் ஹேஷ்டேக் ஜூலை 11 முதல் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேஸ்ஃபுக், இன்ஸ்டாகிராம் மற்றும் யு டியூபிலும் அது முக்கியத்துவம் பெற்று வருகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கேலிப்ரி எழுத்துரு, அதன் கணினி பயன்பாடுகளான பவர் பாயிண்ட், எக்ஸல் மற்றும் அவுட்லுக் மின்னஞ்சல் ஆகியவற்றில் தன்னிச்சையான எழுத்துருவாக உள்ளது.

கேலிப்ரி பற்றிய விவாதம்

சமீபத்தில் அமெரிக்க அதிபர் எழுத்துப் பிழையுடன் பதிவிட்டு ட்விட்டரில் மிகவும் வேகமாகப் பரவிய பதிவைக் குறிப்பிட்டு, "#Calibri நமக்குச் சொந்தமான Covfefe," என்று நூர்கைர்தே @NurKhairDe என்னும் பயன்பாட்டாளர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் மகள் மரியம் நவாஸ்

குஷால் @Khushal என்னும் இன்னொரு பயன்பாட்டாளர், "கதையின் கருத்து: எப்போதும் ஏரியலில் (Ariel ) ஊழல் செய்யுங்கள். ஏரியல் ஊழலை சுத்தப்படுத்தும்," என்று, உள்ளூர் சலவைப் பொடியின் பெயருடன் இணைந்து போகும், மைக்ரோசாஃப்டின் இன்னொரு எழுத்துரு பற்றிக் கூறியுள்ளார்.

நௌமன் முஸ்தாக் @noumanmushtaque என்னும் இன்னொரு பயன்பாட்டாளர், "கேலிப்ரி எழுத்துரு முதலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- நவாஸ் கட்சியால்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், ஓராண்டு கழித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. என்ன வியப்பு!" என்று கூறியுள்ளார்.

பிரதமர் மீதான தாக்கம்

சில ட்விட்டர் பயனாளிகள் கேலிப்ரி எழுத்துரு பற்றிய கூட்டு விசாரணைக் குழுவின் குறிப்புகளையும் அவை ஷெரிஃபின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படுத்த வாய்ப்புள்ள தாக்கங்கள் குறித்தும் விவாதித்துள்ளனர்.

"35 ஆண்டு கால் அரசியல் வாழ்க்கை 10 ஆண்டு கால எழுத்துருவால் மரணிக்கவுள்ளது, " என்று @ZHmagsi என்னும் பயனாளி கூறியுள்ளார்.

இதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ள பத்திரிக்கையாளர் சபேனா சித்திக்கி, "பல உயரங்களில் இருந்து வீழாத வலிமை மிக்கவர்கள், கேலிப்ரி என்னும் சாதாரண எழுத்துருவாழ் ஏமாற்றப்பட்டனர், " என்று கூறியுள்ளார்.

அந்த ஆவணங்களை கூட்டு விசாரணைக் குழுவிடம் சமர்ப்பித்த மரியம் நவாஸை சில பயன்பாட்டாளர்கள் குறி வைத்துள்ளனர். பிரதமரின் அரசியல் வாரிசாக வாய்ப்புள்ளவர் என்று உள்ளூர் ஊடகங்கள் அவரை அடிக்கடி கூறுகின்றன.

"ஒரு எழுத்துரு உங்கள் வாழ்க்கையை மாற்றல என்பதற்கு மரியம் நவாஸ் ஓர் எடுத்துக்காட்டு," என்று ஷபி ஃபாத்திமா @shabihfatima905 என்னும் பயனாளி கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை @shabihfatima905

ஸ்டார் வார்ஸ் (Star Wars) ஆங்கிலப் படத்தில் வரும் நன்கு அறியப்பட்ட சொற்றொடரான , "May the #Font be with you @MaryamNSharif #Calibri" (எழுத்துரு உங்களுடன் இருக்கட்டும் மரியம்)" என்று

உஸ்மான் தெசீன் @UsmanTehseen என்னும் பயனாளி கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்