விமான பணிப்பெண்ணை 'பாட்டி' என்று கேலி செய்த கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி

  • 14 ஜூலை 2017
கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி படத்தின் காப்புரிமை Reuters

விமானப் பணியாளர்கள் குறித்து ஆபாசமாக கருத்து கூறியதற்காக கண்டனம் தெரிவிக்கப்பட்ட கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி மன்னிப்புக் கோரினார்.

கடந்த வாரம் அயர்லாந்தில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றில் பேசிய கத்தார் ஏர்வேஸின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பெக்கர், அமெரிக்க ஏர்லைன்ஸ் "தரம்" குறைவாக இருப்பதாகவும், அதில் "பாட்டிகள் சேவை வழங்குவதாகவும்" கூறியிருந்தார்.

"எங்கள் விமான பணியாளர்களின் சராசரி வயது 26 மட்டுமே" என்று தற்புகழ்ச்சியாகவும் அவர் பேசினார்..

இந்தக் கருத்துகளுக்கு பலரும் கண்டனங்களை எழுப்பியிருக்கும் நிலையில், புதன்கிழமையன்று இதற்கு பதிலளித்த அல் பெக்கர், அவை தான் "கவனக்குறைவாக" வெளியிட்ட கருத்துக்கள் என்றும், "விமானப் பணியாளர் குழு பற்றி தனது உண்மையான உணர்வுகளை" பிரதிபலிக்கவில்லை என்றும் கூறினார்.

அமெரிக்காவின் ஒரு தொழிற்சங்கமான, விமான தொழிற்சங்க கூட்டமைப்புக்கு(AFA) கத்தார் ஏர்வேஸின் தலைமை நிர்வாகி எழுதிய கடிதத்தில், "விமான நிறுவனங்களிடையே போட்டி என்பது நல்லது, ஆரோக்கியமானது. அதிலும் குறிப்பாக பயணிகளுக்கு இது நன்மை பயப்பதாக இருக்கும். ஆனால் போட்டி மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தொழிலாளர் நலச் சங்கத்தில் 20 விமான நிறுவனங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

பிற செய்திகள்

"விமானப் பணியாளர்களுக்கு நிபுணத்துவம், திறமை மற்றும் அர்ப்பணிப்பு போன்ற குணங்கள் முக்கியமானவை. வயது போன்ற பிற காரணிகளும் அதற்கு பொருத்தமானது என்று நான் தவறாக நினைத்துவிட்டேன்" என்றும் அல் பெர்க்கர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமையன்று அல் பெக்கர் பேசிய காணொளிக் காட்சி ஆன்லைனில் வெளியானதும், "பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் பாகுபாட்டை கத்தார் ஏர்வேஸ் வெளிப்படுத்துவதாக AFA சொன்னது நிரூபிக்கப்பட்டதாக" திருமதி நெல்சன் கூறினார்.

"கத்தார், அமெரிக்க விமான போக்குவரத்துத் துறையை தாக்குவதோடு, சமத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மூன்று லட்சம் நல்ல வேலைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது."

"விமான பயணத்தின்போது அவசரநிலை ஏற்பட்டால், விமானப் பணியாளரின் பாலினம், வயது, எடை, உயரம், இனம் என எதுவுமே முக்கியமானதில்லை. பாதுகாப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் பயிற்சி மற்றும் பணி அனுபவம்தான் அப்போதைய தேவை."

படத்தின் காப்புரிமை AFP

அல் பெக்கரின் கருத்துக்கள் "நம்பமுடியாத தாக்குதல்" என்று அமெரிக்க ஏர்லைன்ஸ் விமான சேவையின் துணைத் தலைவர் ஜில் சுர்தீக், தனது நிறுவன பணியாளர்களிடம் தெரிவித்தார்.

கத்தார் ஏர்வேஸ், எத்திஹாட் ஏர்வேஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஆகியவற்றிற்கு அரசு ஆதரவு இருப்பதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கூறியதற்கு மத்தியில் இந்த புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

"சட்டவிரோதமான மானியங்களை நீட்டிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டின்" அடிப்படையில், விமானத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக விமான நிறுவனங்களுக்கு இடையிலான வணிக ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அரசிடம் இருந்து மானியங்களை பெறவில்லை என்று விமான நிறுவனங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.

இந்த முடிவு குறித்து அதிருப்தி வெளியிட்டிருக்கும் அல் பெக்கர், இருந்தபோதிலும், அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 10 சதவிகித பாங்குகளை வாங்குவது குறித்த திட்டங்களை அவர் தொடரப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

"பங்குக் கொள்முதல் நடவடிக்கைகள் வழக்கம்போல் தொடர்கிறது. ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து எங்களுக்கு தேவைப்படும் சில விளக்கங்களுக்காக காத்திருக்கிறோம்" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸின் உரிமையாளரான இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் குரூப்பின் 10 சதவிகித பங்குகளும், தென் அமெரிக்காவின் லாட்டம் ஏர்லைன்ஸின் 20 சதவிகித பங்குகளும் கத்தார் ஏர்வேஸிடம் ஏற்கனவே இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :