சீனப் போராளி: இறந்தும் வாழும் காதல் கதை

  • 15 ஜூலை 2017
லியு சியாவ்போ மற்றும் லியு சியா படத்தின் காப்புரிமை Supplied

சீனாவில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, பல ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளவர்தான் சீன அரசு அதிருப்தியாளர்களில் ஒருவரான லியு சியாவ்போ.

லியு சியா என்பவரோடு நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு, பாதிக்கும் மேலான காலத்தை அவர் சிறையில் கழித்துள்ளார். இப்போது கல்லீரல் புற்றுநோயால் இறந்துள்ளார்.

லியு சியாவ்போ - லியு சியா ஜோடியின் காதல் எவ்வாறு நீடித்து நிலைத்தது என்று பிபிசியின் சிலியா ஹாட்டன், அவர்களின் வாழ்க்கை பயணத்தை திரும்பிப் பார்க்கிறார்.

திருமணம் செய்துகொள்ளவும் போராட்டம்

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள அனுமதி பெறவே போராட வேண்டியிருந்தது.

ஆனால், அரசை இடைவிடாமல் விமர்சித்துக் கொண்டிருக்கும் விமர்சகர்களில் ஒருவர், அவரது காதலியை திருமணம் செய்து கொள்ள சீன அரசு சம்மதித்தபோதும், இந்த ஜோடிக்கு பிரச்சனைகள் அப்படியே தொடர்ந்தன.

இந்த ஜோடியின் அதிகாரப்பூர்வ திருமணத்தை படம் பிடிக்க வேண்டிய கேமரா கூட வேலை செய்யாமல் போய்விட்டது. அந்த புகைப்படக் கலைஞர் என்ன செய்வதென்று திகைத்தார்.

திருமணம் நடைபெற்ற இடத்திலுள்ள புகைப்படம் இல்லாவிட்டால், சீன திருமணச் சான்றிதழ் செல்லுபடியாகாது என்ற நிலை இருந்தது.

எனவே, லியு சியாவ்போவும், அவரது எதிர்கால மனைவியுமான லியு சியாவும் அந்த திடீர் ஏற்பாட்டை செய்தனர். தங்களுடைய தனித்தனி புகைப்படங்களை எடுத்து, அருகருகே ஒட்டினர். இந்த தற்காலிக ஏற்பாட்டில் உருவான புகைப்படத்தில் முத்திரை குத்தப்பட்டு, இறுதியில் அவர்கள் திருமணம் செய்தனர்.

இது 1996 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டதே இந்த ஜோடிகளுக்கு கிடைத்த ஒரு சிறிய வெற்றிதான்.

அந்த சமயத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன்னுடைய புதிய கணவரை, சீனாவின் வட கிழக்கு பகுதியிலுள்ள கடுமையான உழைப்பு முகாமுக்கு சென்று சந்திக்கும் உரிமையை இந்த திருமணம் மனைவி சியாவுக்கு வழங்கியது.

ஒவ்வொரு மாதமும், சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிலிருந்து 1,600 கிலோமீட்டர் (1000 மைல்) தொலைவில் இருந்த கடும் உழைப்பு முகாமிற்கும் சென்று வந்தார்.

"சித்ரவதை முகாமுக்கு ரயில்" என்ற அவர் எழுதிய ஒரு கவிதையில், "அழுகையால் கண்ணீர் வடிகிறது. அந்த கண்ணீர் எனது உடல் முழுவதும் வடிகிறது. ஆனாலும், உனது கைகளை என்னால் பற்றிகொள்ள முடியவில்லை" என்று சியா குறிப்பிடுகிறார்.

படத்தின் காப்புரிமை LIU XIA / HANDOUT
Image caption எழுத்தாளரும், பேராசிரியருமான லியு சியாவ்போ சீனாவில் அரசுக்கு எதிரான பிரபல செயற்பாட்டாளராக உருவானார்

அவர்களுடைய திருமண விருந்து கடும் உழைப்பு முகாமிலுள்ள காஃபி கடையில் நடைபெற்றது. அந்த காஃபி கடை நிகழ்வே அடையாள நிகழ்வாகிப்போனது.

அவர்களுடைய காதல் வாழ்க்கையில் கூட சீன அரசு தொடர்ந்து, மூன்றாவது நபராக தலையிட்டதோடு, அழையாத விருந்தாளியாக இந்த ஜோடியின் ஊடாடல்களில் பின்வாசல் வழியாக தொடர்ந்து மூக்கை நுழைத்துவந்தது.

அவர்கள் கட்டாயமாக பிரிக்கப்பட்ட காலத்தை தவிர, எந்தவொரு நிலையிலும், லியு சியாவ்போ மற்றும் லியு சியா இருவரும் பிரிக்க முடியாத ஜோடியாகவே இருந்து வந்தனர்.

லியு சியாவ்போ மிக சிறந்ததொரு எழுத்தாளராகவும், வெளிநாட்டில் உரையாற்றவும், கற்றுகொள்ளவும் அழைக்கப்படும் மதிக்கப்படுகின்ற பேராசிரியராகவும் திகழ்ந்தார்.

1989 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், நியூ யார்க் நகரில் இருந்தபோது, சீனாவின் தலைநகரான தியானன்மென் சதுக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருவது பற்றி கேள்விப்பட்டார். உடனடியாக சீனா திரும்பினார்.

ஜனநாயக சீர்திருத்தம் வேண்டும் என்கிற எழுச்சி படிப்படியாக அதிகரித்து வருகையில், சியாவ்போ போராட்டக்காரர்களுக்கு தூண்டுதலாக இருந்தார். பின்னர், பல மாணவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படாமல் பாதுகாக்க சீன படைவீரர்களிடம் கலந்து பேசி வாதிட்டு உதவினார்.

ஆனால், 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்னும் தேசிய ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.

ஆனால், லியு சியாவ்போ அந்தப் போராட்டத்தில் இல்லாமல் இருந்திருந்தால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாக இருந்திருக்கும் என்று பெரும்பாலோர் ஒப்புக்கொள்கின்றனர்.

ஆனால், சீன அரசுக்கோ இது சிறிய வேறுபாட்டையே உருவாக்கியது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
1989 தியானன்மென் படுகொலை பற்றிய பார்வை

தியானன்மென்னில் நடைபெற்ற போராட்டம் சீன அரசால் அடக்கி ஒடுக்கப்பட்ட சில நாட்களில், சியாவ்போ ரகசியமானதொரு தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.

சுமார் 20 மாதங்கள் அவர் அங்கு அடைக்கப்பட்டிருந்தார். விடுவிக்கப்பட்டபோது, அவருடைய மகத்தான கல்வி பணி மற்றும் வீடு அனைத்தையும் அவர் இழந்திருந்தார்.

பின்னர்தான் லியு சியாவ்போவுக்கு தன்னுடைய வாழ்க்கையில் ஒளியாக வந்த ஆர்வமிக்க இளம் பெண் கவிஞர் லியு சியாவோடு தொடர்பு ஏற்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption லியு சியா மற்றும் லியு சியாவ்போ சீனாவிலும், சீனாவுக்கு வெளியிலும் மிகவும் பிரபலமானவர்கள்

"இந்த ஒரு பெண்ணிடம் உலகின் அனைத்து அழகையும் நான் கண்டேன்" என்று சியாவ்போ தன்னுடைய நண்பர் ஒருவரிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

வயதில் 6 ஆண்டுகள் குறைவாக இருந்த லியு சியா, சிறந்ததொரு எழுத்தாளராக அறியப்பட்டிருந்தார். நெருங்கிய நண்பரான எழுத்தாளர் லியாவ் இயு, எப்போதும் லியு சியா சிரித்து கொண்டே இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

வங்கியில் உயரிய அதிகாரியின் மகள் என்ற சிறந்த பின்னணியில் வந்தவர் லியு சியா.

சியா, அரசு ஊழியராக வருவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், எழுதுவதில் விருப்பம் இருந்ததால், நிலையான வாழ்க்கையை பெறக்கூடிய அந்த வாய்ப்பையும் கைவிட்டார்.

படத்தின் காப்புரிமை Badiucao

எல்லாவித பிரச்சனைகளுக்கு மத்தியிலும், சியாவ்போவுக்கு அரசியல் பிரச்சனைகள் இருந்தாலும், சியாவின் பெற்றோர், சியாவ்போவோடு உள்ள உறவுக்கு பக்கபலமாக இருந்து ஊக்கமூட்டினர்.

"யாராவது சிறையில் இருந்தால், அவர்களின் குடும்பதினர் வாழ்க்கையும் முடிந்துவிடும்"

தொடக்க காலத்தில் இயல்பானதொரு வாழ்க்கை போன்று தோற்றமளிக்கும் வாழ்க்கையை இந்த ஜோடிகள் அமைக்க முயன்றனர். தியானன்மென் சதுக்கத்திற்கு அருகில் இருக்கும் சியாவின் குடியிருப்புக்கு சியாவ்போ மாறினார். அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ தொடங்கினர்.

ஜனநாயகத்தின் தேவை பற்றி எழுதுவதையும், சீனாவின் ஒரு கட்சி கொள்கையை விமர்சித்து எழுதுவதையும் நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுத்த பாதுகாப்பு முகவர்களின் கழுகு பார்வையில், தொடர்ந்த கண்காணிப்பில் லியு சியாவ்போ இருந்து வந்தார்.

"அரசு யாரையாவது சிதரவதை செய்கிறது என்றால், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தெந்தரவு கொடுக்க முயல்வதே அது செய்கிற முதல் வேலையாக இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்கிறார் இந்த ஜோடியின் நண்பர் தியன்சி மார்ட்டின்-லியாவ்.

"அவர்கள் ஜோடியை பிரிப்பார்கள். யாராவது சிறையில் இருந்தால், அவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கையும் அத்தோடு முடிவடையும்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த ஜோடி குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று ஒருபோதும் கருதவில்லை என்று தியன்ச்சி மேலும் கூறினார்.

"நான் ஒரு சமயம் அவரிடம் கேட்டேன். சியாவோடு நீ ஏன் ஒரு குழந்தை பெற்றெடுக்கக் கூடாது?" தியன்ச்சி தொடர்கிறார்.

"சியாவ்போ என்னிடம் கூறினார்: 'தன்னுடைய தந்தை காவல்துறையால் கைது செய்து கொண்டு செல்லப்படுவதை பார்ப்பதற்கு நான் ஒரு மகனையோ, மகளையோ பெற்றெடுக்க விரும்பவில்லை" என்று குறிப்பிடுகிறார் தியன்ச்சி

"இதனை அவர் என்னிடம் கூறினார். இந்த ஜோடிக்கு குழந்தை இல்லாமல் போனதற்கு இதுதான் காரணம்" என்று அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Xiaoguai
Image caption லியு சியாவ்போவின் உருகிபோன வாழ்க்கையை அடையாளப்படுத்தும் படம்

"நான் உங்களுடன் வாழத் தொடங்கியதில் இருந்து, ஒருபோதும் அமைதியான நாளை கண்டதில்லை"

லியு சியாவ்போவின் பதிப்பாளராக தியன்ச்சி வேலை செய்து வந்தார். அதற்காக பல மணிநேரம் தொலைபேசியில் இவர்கள் இருவரும் கழிப்பதுண்டு. லியு சியாவ்போ தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போது, லியு சியா அவருக்கு சூப் கொண்டு வருவதுண்டு. அதனை மகிழ்ச்சியோடு குடிப்பதை தியன்ச்சி கேட்டு கொண்டிருப்பாராம்.

பின்னர், லியு சியாவ்போவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டபோது, தியன்ச்சி லியு சியாவோடு பேச தொடங்கினார். தொலைபேசியில் லியு சியா அடிக்கடி அழுது புலம்புவதுண்டு என்று அவர் தெரிவிக்கிறார்.

"உண்மையாக சியா, சியாவ்போவை மிகவும் காதலித்தார். அவருக்காக எதையும் செய்ய தயாராக இருந்தார்" என்று விளக்குகின்றார் தியன்ச்சி.

"சில வேளைகளில் சியா புகார் கூறுவார். உண்மையிலேயே அது புகாரல்ல. என்றாலும், அவர் 'உங்களுடன் வாழ தொடங்கியதில் இருந்து, நான் ஒருபோதும் அமைதியான நாளை கண்டதில்லை' என்று தெரிவித்ததாக தியன்ச்சி கூறுகிறார்.

"இது உண்மை, எல்லாம் உண்மைதான். இவ்வாறு கூறுவதால், அவரை விட்டு செல்ல வேண்டும் என்றோ அல்லது அதுபோல எதுவும் பொருட்படவில்லை. எவ்வளவு கடினம் மற்றும் மிகவும் கடினமான நிலைமைகளில் அவர்களின் காதல் தொடர்பு உள்ளது என்பதற்கு அழுத்தம் கொடுத்து சொல்ல விரும்பியே இவ்வாறு குறிப்பிடுகிறார்" என்று தியன்ச்சி விளக்குகிறார்.

லியு சியாவ்போ சிறைக்கு வெளியில் இருந்தபோது கூட, இந்த ஜோடி நீண்டகாலமாக தனியாக இருக்க அரிதாகவே அனுமதிக்கப்பட்டனர்.

"சமூக விமர்சன கட்டுரைகள் பலவற்றை லியு சியாவ்போ எழுதியுள்ளதால், மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் அவருடைய வீட்டுக்கு வருவதுண்டு" என்று தியன்ச்சி நினைவுகூர்கிறார்.

"அவருக்கு அவர்களை பற்றி தெரியாமலும் இருக்கலாம். அவர்கள் அவருடைய வீட்டுக்கு சென்று கதவை தட்டி, மணி அடிப்பார்கள். தயவுசெய்து எனக்கு உதவுங்கள். சில அநீதி எனக்கு இழைக்கப்பட்டிருக்கிறது" என்பார்கள். பொரும்பாலும் அத்தகையோருக்கு அவர் உதவுவார்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

படத்தின் காப்புரிமை HANDOUT
Image caption 'சாட்டர் 08'யை எழுதி, பகிர லியு சியாவ்போ உதவியபோது, காட்சிகள் அனைத்தும் மாறின

பிறந்த நாளுக்கு கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி கூட கிடைக்காது என்று லியு சியாவ்போ ஒருமுறை நினைவுக்கூர்ந்துள்ளார்.

"லியு சியாவின் பிறந்தநாளின்போது, சியாவின் சிறந்த நண்பர் ஒருவர் இரண்டு திராட்சை மது பாட்டில்களை கொண்டு வந்தார். ஆனால், என்னுடைய வீட்டில் இருந்த போலீஸால் அவர்கள் தடுக்கப்பட்டனர். நான் கேக் ஒன்று வாங்க பதிவு செய்திருந்தேன். அந்த கேக் கொண்டு வந்த நபரை கூட போலீஸார் அனுமதிக்கவில்லை. நான் அவர்களிடம் சண்டையிட்டேன்., 'இது உங்களுடைய பாதுகாப்பிற்காக. இந்த நாட்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் மிகவும் சகஜம்' என்று தெரிவித்துவிட்டர்கள்" என்று ஹாங்காங் செய்தித்தாள் ஒன்றிடம் சியாவ்போ தெரிவித்திருக்கிறார்.

ஆனால், சியாவோடு நடத்திய குடும்ப வாழ்க்கையோடு அரசு தலையிட்ட பிறகு கூட, லியு சியாவ்போ தன்னுடைய பணியை ஒருபோதும் நிறுத்திவிட முடிவு செய்யவில்லை.

"அவர் இன்னும் கொண்டிருக்கும் சக்தியை ஆதாயமாக்கி கொள்ள விரும்புவதாக லியு சியாவ்போ வெளிப்படையான விளக்கினார்" என்று அவருடைய சுயசரிதை எழுத்தாளரும், நெருங்கிய நண்பருமான எழுத்தாளர் யு ஜியே எழுதுகிறார்.

"இதனால், ஒரு நாள் தனக்கு ஏதாவது நடந்துவிட்டால் லியு சியாவுக்காக அதிக பணத்தை சேர்த்து கொள்ள முடியும். குறைந்தபட்சம் லியு சியா உணவு மற்றும் உடைக்கு கவலைப்படாமல் வாழ முடியும்" என்று சியாவ்போ எண்ணியதாக யு ஜியே குறிப்பிடுகிறார்,

படத்தின் காப்புரிமை Badiucao

லியு சியாவ்போ பல கட்டுரைகளை எழுதினார். அதில் சிலவற்றில் கருத்துக்கள் சற்று மென்மையாக கூறப்படவில்லை என்று சில அறிஞர்கள் விமர்சனம் தெரிவித்திருக்கின்றனர்.

'சாட்டர் 08'-ஐ எழுதி, பகிர லியு சியாவ்போ உதவியபோது, காட்சிகள் அனைத்தும் மாறின.சீனாவின் ஒரு கட்சி கொள்கையை முடிவுக்கு கொண்டுவர அழைப்புவிடுத்த ஆவணமான 'சாட்டர் 08' தான் அவரை சிறையில் அடைக்க வழிகோலியது.

திரைப்பட விமர்சனம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்

சியாவ்போவின் அரசியல் களத்தில் இருந்து சியா எப்போதும் விலகியே இருந்தார். ஆனால், 'சாட்டர் 08' ஆவணத்தால் சிக்கல் வரும் என்று அறிந்திருந்ததாக திரைப்பட தயாரிப்பாளர் அய் சியாவ்மிங்கிடம் லியு சியா தெரிவித்திருக்கிறார்.

"ஏதோ நடக்கப்போகிறது என்று எனக்கு முன்னரே தெரிந்தது. 'சாட்டர் 08' ஆவணத்தின் முதல் வரைவு என்னுடைய வீட்டில் உருவானதில் இருந்து, அதனை மீளாய்வு செய்ய சியாவ்போ முனைந்தபோது வரை, மிகவும் கொடுமையான ஒன்று நடைபெற போகிறது என்று நான் அறிந்திருந்தேன்" என்கிறார் லியு சியா

"அதனை நீங்கள் வாசித்தீர்களா?" என்று அய் அவரிடம் வினவினார்.

"இதயத்தின் உள்ளார்ந்த சிறையில் நீ காத்திருக்கிறாய்"

"எனக்கு வாசிக்க விருப்பமில்லை. ஆனால், பெரிய சிக்கல் வரவுள்ளது என்று மட்டும் தெரிந்தது. சியாவ்போவிடம் அதனை சொல்ல முயன்றேன். ஆனால், பயனில்லை. நான் கடந்த காலத்தில் செய்ததுபோல, பேரழிவு நிகழ்வதற்கு பொறுமையாக காத்திருந்ததை மட்டுமே செய்ய முடிந்தது" என்று அவர் பதிலளித்தார்.

'சாட்டார் 08' அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் முன்னர், சியாவ்போ கைது செய்யப்பட்டார். சுமார் ஓராண்டு நடைபெற்ற அவருடைய விசாரணையில், ஆட்சிக் கவிழ்ப்பு நடத்த முயன்றதாக குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.

2009 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அவரது கடைசி வெளிப்படையான அறிக்கை அவருடைய மனைவிக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் கருத்தோடு நிறைவுற்றது.

"இந்த ஆண்டுகள் முழுவதும் நான் சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். வெளிப்புற சூழ்நிலைகளால் திணிக்கப்பட்ட கசப்புணர்வுகள் நிறைந்ததாக நம்முடைய காதல் வாழ்க்கை இருந்தது. ஆனால். நான் அதற்கு பிந்தைய நறுமணத்தை விரும்புகிறேன். அது எல்லையற்றது" என்று அவர் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை RFA

"நீ என்னுடைய இதயமான கண்கூடாக பார்க்க முடியாத சிறையில் காத்திருக்கும் நிலையில், நான் கண்கூடாக காணக்கூடிய சிறையில் என்னுடைய சிறை தண்டனையை அனுபவித்து வருகிறேன். உயரமான சுவர்களை தாண்டுகின்ற, என்னுடைய இரும்பு கம்பி சிறை சன்னல்களை ஊடுருவுகின்ற என்னுடைய தோலின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்குகின்ற, என்னுடைய உடலின் உவ்வொரு செல்லையும் சூடேற்றுகின்ற சூரியஒளியாக உன்னுடைய காதல் இருக்கிறது. இதுதான் நான் எப்போதும் அமைதியாக, மனம் திறந்து, என்னுடைய இதயத்தில் பிரகாசமாக இருக்கவும், சிறையில் இருக்கும் என்னுடைய நேரத்தை ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தமுள்ளதாகவும் செய்கிறது" என்று லியு சியாவ்போ தெரிவித்தார்.

மறுபுறம் உன் மீதான என்னுடைய காதல், மனவுறுத்தலையும், வருத்தத்தையும் நிறைத்துள்ளது. இதனால், சில நேரங்களில் நான் கொண்டிருக்கும் காதலின் கனாகனத்தில் தடுமாற்றம் ஏற்படுகிறது" என்று உள்ளத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதியில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை அனுபவிக்க தொடங்கிய பிறகு, சியாவின் நிலைமை என்ன என்பது பற்றி லியு சியாவ்போவுக்கு எவ்வளவு தெரியும் என்பது தெளிவாக தெரியவில்லை.

2010 ஆம் ஆண்டு லியு சியாவ்போவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன், பெய்ஜிங்கிலுள்ள லியு சியாவின் சிறிய குடியிருப்பில், அவர் கடும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

2010 ஆம் ஆண்டு பிபிசிக்கு பேசியபோது, தன்னை வீட்டுச் சிறையில் வைத்திருப்பது பற்றிய விவரமான தகவலை லியு சியாவ்போவுக்கு தெரிவிக்க முடியவில்லை என்று சியா தெரிவித்தார்.

இத்தகைய விடயங்கள் பற்றி நாங்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. எங்களால் இவை பற்றி பேச முடியவில்லை. அவர் என்னை புரிந்து கொள்ளவார் என்று நம்புகிறேன். 'உங்களை போன்ற வாழ்க்கையை போல நானும் வாழ்ந்து வருகிறேன்' என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளேன்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption லியு சியா வீட்டு சிறையில் வைக்கப்பட்டது ஹாங்காங்கில் போராட்டங்களை தூண்டியது

"இது நடந்தபோது, ஒன்றிரண்டு மாதங்கள் என்னை அடைத்து வைத்திருப்பதைபோல தொடக்கத்தில் எண்ணினேன். காலம் விரைவாக கடந்துவிட்டது. இப்போது நான் இரண்டு ஆண்டுகளாக வீட்டு சிறையில் இருக்கிறேன்" என்று சியா தெரிவிக்கிறார்.

வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு நாட்கள் செல்ல செல்ல, சியா சிகிச்சை பெறக்கூடிய அளவுக்கு மன அழுத்தத்திற்கு உள்ளானார்.

தொலைபேசி வசதி அவருக்கு இருந்தாலும், சில நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அவர் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடிந்தது.

காவல்துறையினர் குழு ஒன்று லியு சியாவ்போவை சந்திக்க சியாவை சில வேளைகளில் அழைத்து செல்வர். ஆனால், அத்தகைய சந்திப்புக்கள் அதிகாரிகளால் மிகவும் உற்று கவனிக்கப்படுகிறது. அதிக விடயங்கள் பகிரப்பட்டால், இந்த அதிகாரிகள் அந்த உரையாடல்களை தடுத்து நிறுத்திவிடுவர்.

கல்லீரல் புற்றுநோயால் லியு சியாவ்போ இறந்து கொண்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்த பின்னர், இறுதியில் அவரை அவருடைய மனைவியோடு இணைய அனுமதித்தனர்.

அவர் மருத்துவ பிணை பெற்ற பின்னர், சீனாவின் வட பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சியாவுக்காக சீனாவை விட்டு வெளிநாட்டுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டார் என்று பிபிசிக்கு கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வெளிநாட்டு தலைவர்கள் மனித உரிமைகளை விட பாண்டாக்களை பற்றி பேசுவதையே விரும்புகின்றனர் என்பதை விளக்கும் போராட்ட பதாகை

"அவர் இறந்துவிட்டால், என்ன நடக்கும் என்று லியு சியாவ்போ கவலைப்படுகிறார்" என்று கூறிய நண்பர் ஒருவர், "மனைவி சியாவையும், அவருடைய சகோதரரையும் சீனாவுக்கு வெளியே கொண்டு செல்ல விரும்புகிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.

சியாவ்போவின் இறப்புக்கு பின்னர் லியு சியாவின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று தியன்ச்சியிடம் கேட்டபோது, அவருடைய குரல் தழுதழுக்கிறது.

"சியா உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் உடல் நலமற்று இருப்பது எங்களுக்கு தெரியும். சியாவ்போ அதிக நாட்கள் வாழ மாட்டார் என்று நாங்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளோம். அதன் பிறகு சியாவுக்கு என்ன நடக்கும் என்று கவலையடைகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

சியாவ்போ இறந்துவிட்டால், அவருடையவற்றில் மிக சொற்பமே சியா கொண்டிருப்பார். சியாவ்போவுடைய கவிதைகள் மற்றும் கடிதங்கள் அனைத்தும் போய்விட்டன என்று 2009 ஆம் ஆண்டு சியா குறிப்பிட்டிருக்கிறார்.

"1996 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி முதல் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 8 வரை கடுமையான உழைப்பு மூலம் சீர்திருத்தக் கல்வி காலமாக இருந்த 3 ஆண்டுகளில், நான் 300 -க்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதியிருந்தேன். அவர் 2 முதல் 3 மில்லியன் சொற்கள் எனக்கு எழுதியிருப்பார். பலமுறை எங்களுடைய வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட பிறகு, அவருடைய எழுத்துக்கள் மாயமாகி போயின" என்று சியா தெரிவித்தார்.

"இதுதான் எங்களுடைய வாழ்க்கை"

படத்தின் காப்புரிமை Supplied
Image caption கல்லீரல் புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொண்ட பின்னர், லியு சியாவ்போவுக்கு மருத்துவ பிணை வழங்கப்பட்டு, சிகிக்சை பெற அவர் மருத்தவமனைக்கு மாற்றப்பட்டார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :