டிரம்பின் கியூபா கொள்கைக்கு ராவுல் காஸ்ட்ரோ கண்டனம்

அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையிலான கட்டுப்பாடுகளில் தளர்த்தப்பட்டவற்றில் சில அம்சங்களை, ஒரு மாதத்திற்கு முன்பு அதிபர் டொனல்ட் டிரம்ப் திரும்ப பெற்றதற்கு எதிராக கியூபா அதிபர் முதல்முறையாக பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP/ GETTY IMAGES
Image caption மனித உரிமைகளை காரணம் காட்டி பாரபட்சம் காட்டும் அதிபர் டிரம்பின் கூற்றுக்களை ராவுல் காஸ்ட்ரோ நிராகரி்துள்ளார்.

"புரட்சியை அழிக்கின்ற முயற்சிகள் தோல்வியடையும்" என்று அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தெரிவித்திருக்கிறார்.

இந்த கம்யூனிஸ்ட் தீவு நாட்டோடு மேற்கொள்ளப்பட்டிருந்த அமெரிக்காவின் பயணம் மற்றும் வணிகத்தின் மீது அதிபர் டிரம்ப் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியிருக்கிறார்.

ஆனால், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவால் திறக்கப்பட்ட ஹவானாவிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கியூபாவின் தேசிய பேரவையில் பேசியபோது, ராவுல் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்னால், அதிபர் டிரம்ப் அறிவித்த கொள்கை மாற்றங்களுக்கு பிறகு வந்துள்ள முதல் வெளிப்படையான கண்டனம் இதுவாகும்.

அதிபர் டிரம்ப் "பழைய மற்றும் பகைமை" சொல்லாடலை பயன்படுத்துவதாகவும், 55 ஆண்டுகளாக முழுமையாக தோல்வியடைந்த மோதலுக்கு மீண்டும் திரும்பியிருப்பதாகவும் ராவுல் காஸ்ட்ரோவை மேற்கோள் காட்டி கியூபா அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Somodevilla/Getty Images

"எமது பகுதியிலேயே பெருமைப்பட வேண்டியவை பல உள்ளன. அத்தகைய கியூபாவுக்கு எதிராக மனித உரிமையை காரணம் காட்டி சுரண்டுவதை நாங்கள் நிராகரிக்கின்றோம். இனிமேலும். அமெரிக்காவிடம் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்ள கியூபாவுக்கு அவசியம் ஏதுமில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கியூபாவின் கம்யூனிச அரசின் அரசியல் எதிகளால் எழுப்பப்படக்கூடிய மனித உரிமைகள் பற்றிய கவலையை குறிப்பிட்டு அதிபர் டிரம்ப் கியூபா பற்றிய அமெரிக்க கொள்கையை திரும்ப பெற்றுள்ளார். மியாமிக்கு உயிர் தப்பியோடிய இந்த அரசியல் எதிரிகள் அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். அங்கு வைத்து தான் அதிபர் டிரம்ப் கியூபா பற்றிய இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அமெரிக்காவும், கியூபாவும் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து, தங்களின் வேறுபாடுகளை மதித்து சக வாழ்வு வாழ முடியும். ஆனால், ஒரு நாடு இன்னொன்றின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள சலுகையை எதிர்பார்க்கக்கூடாது என்று ரவுல் காஸ்ட்ரோ மேலும் கூறியுள்ளார்.

இன்னும் 7 மாதங்களில் அதிபர் பதவியில் இருந்து ரவுல் காஸ்ட்ரோ விலகுவார். ஆனால். கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவராக அவரே நீடிப்பார்.

பிற செய்திகள்

6 சிசுக்களை குளிர்பதன கிடங்கில் மறைத்த பெண்ணுக்கு சிறை

`அணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்'

ஆபாசத்தை அழகுபடுத்த முயற்சிக்கும் பெண்!

கங்னம் ஸ்டைலை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெற்ற `சீ யு எகைன் '

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்