ஓரினச்சேர்க்கை காணொளிகளுக்கு சீனாவில் தடை: இணையத்தில் கொந்தளிப்பு

  • 17 ஜூலை 2017
ஓரினச்சேர்க்கை சீனா படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஓரினச்சேர்க்கை சீனாவில் சட்டவிரோதமானதல்ல. ஆனால் புதிய விதிமுறைகள், ஓரினச்சேர்க்கையை "அசாதாரணமான" பாலியல் நடத்தை என வகைப்படுத்துகின்றன

இணைய காணொளிகள் மீது சீனா எடுத்துள்ள தணிக்கை நடவடிக்கைகளால், சீனாவில் பிரபலமான மைக்ரோ-பிளாக்கிங் தளமான `சினா வெய்போ` கடும் பின்னடைவுகளை சந்தித்துள்ளது. இணையத்தில் உள்ள ஓரினச்சேர்க்கை விவரங்களையும், தகவல்களையும் தடை செய்யும் சீனாவின் முடிவை, சினா வெய்போ தளத்தின் பயனாளர்கள் பலர் எதிர்கின்றனர்.

சீன சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது கோபத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

``மக்கள் சமமாக பிறந்தவர்கள் இல்லையா?.. மற்றவர்கள் மீது பாகுபாடு கட்ட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?`` என ஒருவர் கூறுகிறார். "ஓரினச்சேர்க்கை சாதாரணமானது இல்லையா? அவர்களை ஏன் ஒதுக்குகிறீர்கள்`` என மற்றோருவர் கேட்கிறார்.

இணைய காணொளிகளில் ஓரினச்சேர்க்கை குறித்து காட்டப்படுவதைத் தணிக்கை செய்ய சீன கட்டுப்பாட்டாளர்கள் முடிவு செய்தபிறகு, இதற்கான எதிர்ப்பு பலமாக அதிகரித்துள்ளது. ஜூலை ஆரம்பத்தில் நடைமுறைக்கு வந்த இந்த விதிமுறைகள், ஓரினச்சேர்க்கையை "அசாதாரணமான" பாலியல் நடத்தை என வகைப்படுத்துகின்றன. வெளிப்படையான பாலியல் விவரங்கள் மட்டுமல்லாமல், பிரபலமான இணைய நாடகங்களில் இடம்பெறும் நேர்மறை அல்லது எதிர்மறையான ஒரே பாலின உறவு சித்தரிப்புகளையும் தணிக்கைக்கு உட்படுத்துகிறது.

இணையள காணொளி தணிக்கை

வெய்போ தளத்தில் ``ஒரே பாலின உறவுக்காரர்களுக்கு எதிரான இணைய விவரங்களில் பாரபட்சம்`` என்ற ஹாஷ்டாக் ஒரு மில்லியன் நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது மற்றும் இதில் ஆயிரக்கணக்கான கமெண்டுகள் வந்துள்ளன.

சீன சமூக ஊடகவியலாளர்களிடம் இருந்து இம்முடிவுக்குக் கண்டங்கள் வந்துள்ள நிலையில், இணையள காணொளி தணிக்கை இன்னும் பல கட்டுப்பாடுகளுடன் விரிவடைய உள்ளது.

சீன அதிகாரிகளால், குடும்பம், உறவுகள் மற்றும் பணம் ஆகியவற்றைக்கு "ஆரோக்கியமற்றவை`` கருதப்படும் விபச்சாரம், போதைப் பழக்கம், கூடுதல் திருமண விவகாரங்கள் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள 84 வகையான இணைய காணொளிகளை சீனா தணிக்கை செய்துள்ளது. நீண்ட நேரம் முத்தம் கொடுக்கும் காட்சிகளைக் கொண்ட காணொளிகளும் தடைப்பட்டியலில் உள்ளன.

சீன தேசத்தை ஒரு சிறந்த புத்துயிர்மிக்க தேசமாக்க வேண்டும் என்ற சீனாவின் கனவை உணர்த்தும் விதமாக இணைய காணொளிகள் இருக்க வேண்டும் எனச் சீனாவின் வழிமுறைகள் அறிவுறுத்துகிறது.

சீனாவின் உண்மை முகம்

சீனாவின் முதல் பெண் பாலியல் ஆய்வாளரும், நன்கு அறியப்பட்ட ஒருபாலின பிரச்சனை குறித்த கருத்தாளருமான லி யினே, சீன அரசின் தணிக்கை நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.

``சீன அரசு, ஓரினச் சேர்க்கையை ஆபாசமான ஒன்றாகக் கருதுகிறது. ஓரின சேர்க்கையாளர்கள் சமூகம் (LGBT) கடுங்கோபத்தில் இருக்கிறது`` என்கிறார் அவர்.

தணிக்கை முறையினை சீன அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனக் கூறி தான் ஒரு கட்டுரை எழுதியதாகவும், அக்கட்டுரை வெளிவந்த சில மணி நேரங்களிலே வெய்போ தணிக்கையாளர்களால் நீக்கப்பட்டதாகவும் பிபிசி ட்ரெண்டிங் வானோலியிடம் லி யினே கூறினார்.

``ஆம், இதுவே சீனாவின் உண்மை முகம்`` என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை ADDICTED/YOUTUBE
Image caption புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர் தணிக்கை செய்யப்பட்ட `அடிக்டட்` என்ற இணைய தொடர்

``சோசலிசத்தின் மேம்பட்ட கலாச்சாரத்தை`` அனைத்து இணைய விவரங்களும் பின்பற்றுகிறதா என்பதைக் குறைந்தது இரண்டு முதல் மூன்று தணிக்கையாளர்கள் சரிபார்க்க வேண்டும் எனச் சீனா நெட்காஸ்டிங் சர்வீசஸ் அசோசியேஷன் வெளியிட்டுள்ள வழிமுறைகள் கூறுகின்றது.

இந்த சமீபத்திய விதிமுறைகள், லைவ் ஸ்ட்ரீமிங், செய்திகள் மற்றும் சமூக ஊடகம் ஆகியவற்றைத் தணிக்கைக்கு உட்படுத்தி அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

சீனாவில் பல ஓரின சேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் செயலிகள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம், ஐந்து மில்லியனுக்கு அதிகமான பயனார்களை கொண்டிருந்த ரேலா என்ற லெஸ்பியன் டேட்டிங் செயலி, கடந்த மே மாதம் மூடப்பட்டது.

பெரிய அண்ணன் போல

ஓரினச்சேர்க்கை சீனாவில் சட்டவிரோதமானதல்ல. 2001-ம் ஆண்டு மனநல கோளாறுகளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்து ஓரினசேர்க்கை நீக்கப்பட்டது.

``ஓரினச்சேர்க்கையைக் குறித்த சமீபத்திய தணிக்கை ஆச்சரியமாக இருக்கிறது.`` என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்ஸில், சமூக கொள்கை மற்றும் வளர்ச்சித் துறையின் உதவி பேராசிரியர் டிம் ஹில்டி பிராண்ட்.

``கடந்த 5 முதல் 15 ஆண்டுகளில், ஓரினச்சேர்க்கைக்குச் சமூக அங்கிகாரம் கொடுப்பது சீனாவில் அதிகரித்துள்ளது. மதத்தோடு ஒன்றிணைந்து கட்டமைக்கப்பட்ட நிறையப் பகுதிகளை போல் அல்லாமல், சீனா இயல்பிலேயே ஓரினச்சேர்க்கையினை பாவம் என்று கருதிய ஒரு இடம் அல்ல.`` என்கிறார் அவர்.

ஓரினச்சேர்க்கை குறித்த இணைய விடியோக்களை கட்டுப்படுத்தும் புதிய வழிமுறைகள் கவலை அளிக்கும் விதமாக இருப்பதாக ஹில்டி பிராண்ட் கூறுகிறார்.

ஓரினச்சேர்க்கை குறித்த இணையதள தடையானது, "மீண்டுமோரு கலாச்சார புரட்சியை போல்`` உணர்வதாக அமெரிக்காவில் படிக்கும் சீனாவைச் சேர்ந்த ஓரினசேர்க்கையாளர் வெண் ஜி ஆங் கூறுகிறார்.

``எதிர்மறைக்கான இலக்காக, ஒரு குழுவினர் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். மக்கள் அவர்களைப் பற்றி கெட்ட விஷயங்களாக சொல்லலாம் அல்லது அவமதிக்கலாம்`` என்கிறார் அவர்.

``ஒரினசேர்க்கை குறித்த விவரங்களுக்கான கட்டுப்பாடுகளுடன், மற்ற கலாச்சார கட்டுப்பாடுகளையும் அரசு விதித்து வருகிறது.`` என அவர் கூறுகிறார். ``இப்போது ஒரு பெரிய அண்ணன் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருப்பது போல இருக்கிறது. நீங்கள் ஒரினசேர்கை வாழ்வினை வாழ முடியாது என அரசு கூறுகிறது.`` என்கிறார் வெண் ஜி ஆங்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்