கத்தார் செய்தி முகமை மீது ஹேக்கிங்கா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுப்பு

  • 17 ஜூலை 2017

கத்தார் அரசின் செய்தி முகமை மீது கடந்த மே மாதம் நடைபெற்ற கணினி வலையமைப்பு ஊடுருவலின் (ஹேக்கிங்) பின்னணியில் இருந்ததாக கூறப்படுவதை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுத்துள்ளது.

Image caption கத்தார் செய்தி நிறுவனத்தை ஹேக் செய்யவில்லை என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சர் அன்வார் கார்காஷ் மறுத்திருக்கிறார்

கத்தார் மன்னர் வலியுறுத்தியதாகக் கூறி, அவரது பெயரில் தீங்கு விளைவிக்கும் வாசகங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டது என அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாக "தி வாஷிங்டன் போஸ்ட்" நாளிதழில் செய்தி வெளியானது.

கத்தாருக்கும் நட்பு நாடுகளுக்கும் இடையே பிளவு ஏற்பட இந்நிகழ்வே காரணமாக அமைந்தது.

இதுபற்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர் அன்வர் கர்ஷ் பிபிசியிடம் திங்கள்கிழமை கூறுகையில், அமெரிக்க நாளிதழின் செய்தியில் 'உண்மையில்லை' என்றார்.

2022-ஆம் ஆண்டில் உலகக் கோப்பை போட்டி நடத்த கத்தாருக்கு வழங்கிய உரிமையை பறிக்கக் கோர வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகமும் மற்ற ஐந்து அரபு நாடுகளும் சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்புக்கு (ஃபிபா) எழுதவில்லை என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

படத்தின் காப்புரிமை QNA/INSTAGRAM
Image caption இன்ஸ்டாகிராமில் போலிச் செய்திகள் பதிவிடப்பட்டதாக கூறப்படுவதை காட்டும் ஸ்கிரீன்சாட்

ஸ்விட்சர்லாந்து செய்தி நிறுவனமான "தி லோக்கல்", ஃபிபா தலைவர் கியானி இன்ஃபன்டினோ கூறியதாக ஓர் இணையதளத்தில் சனிக்கிழமை வெளியான தவறான செய்தி வெளியி்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் பெயர் குறிப்பிடாத அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள், புதிதாக ஆராய்ந்த தகவலில் கடந்த மே 23-ஆம் தேதி ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அரசின் மூத்த உறுப்பினர்கள், கத்தார் அரசு ஊடகங்களின் இணையதளங்களின் வலையமைப்பில் ஊடுருவும் திட்டம் பற்றி விவாதித்தனர் எனக் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த செய்தி வெளியான நாளின் பிற்பகுதியில் கத்தார் அரசு செய்தி முகமை, "இரான் மீதான அமெரிக்காவின் விரோதப் போக்கை மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் அதானி விமர்சித்தார் "என்றும் கத்தாரை தவிர்க்க முடியாத இஸ்லாமிய சக்தி மற்றும் ஹமாஸ் 'பாலஸ்தீனியர்களின் சட்டப்பூர்வ பிரதிநிதி' என்றும் குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டது.

கத்தார் அதிகாரிகள் கூறுகையில், "அடையாளம் தெரியாத நபர்கள்" மூலம் இணைய வலையமைப்பில் ஊடுருவல் நடைபெற்றுள்ளது என்றும் எதுவாக இருந்தாலும் அந்த செய்தி அடிப்படையற்றது என்றும் கூறினர்.

எனினும், இந்த விவகாரம் தொடர்பான கருத்துகள், பிராந்தியம் முழுவதும் வெளியானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, கத்தார் ஊடகத்தை முடக்கி, ஐக்கிய அரசு எமிரேட், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகியவை பதிலடி கொடுத்தன.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இரானுடன் பயங்கரவாதம் மற்றும் நல்லுறவைக் கொண்டிருப்பதால் கத்தாருடனான எல்லாவித தொடர்புகளையும் முறித்துக் கொள்வதாக நான்கு நாடுகளும் அறிவித்தன.

2.7 மில்லியன் மக்கள் தொகையின் அடிப்படைத் தேவைகளுக்காக நிலம், கடல் வழி இறக்குமதியை நம்பியிருக்கும் எண்ணெய், எரிவாயு வளம் மிகுந்த எமிரேட்டில், இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கை, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Adam Pretty/Getty Images)

கத்தார் செய்தி முகமையின் இணைய வலையமைப்பில் ஐக்கிய அரசு எமிரேட் ஆட்சியாளர்கள்தான் ஊடுருவினார்களா அல்லது பணம் கொடுத்து அச்செயலில் ஈடுபட வைத்தார்களா என்பது தெளிவாக இல்லை என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"தி கார்டியன்" பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்ட செய்தியில், கத்தார் கணினி வலையமைப்பு ஊடுருவலுக்கு ரஷியாவைச் சேர்ந்த ஃப்ரீலேன்ஸ் ஹேக்கர்களே பொறுப்பு என அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ, தனது விசாரணையில் முடிவுக்கு வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை பற்றி கருத்து தெரிவிக்க அமெரிக்க உளவு முகமைகள் மறுத்து விட்டன. ஆனால், வாஷிங்டனில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதர் யூசுஃப் அல்-ஒதைபா, "கணினி வலையமைப்பு ஊடுருவல் விவகாரத்தில் தங்கள் நாட்டுக்கு எந்த விதத்திலும் பங்கு கிடையாது" என்றார்.

"இந்த விஷயத்தில் தாலிபான்கள் முதல் ஹமாஸ் மற்றும் கடாஃபி வரை நிதி வழங்குவது, ஆதரிப்பது, தீவிரவாதமயத்தை ஊக்குவிப்பது, அண்டை நாடுகளின் ஸ்திரத்தன்மையை குறைந்து மதிப்பிடுவது போன்ற கத்தாரின் நடத்தை உண்மையானதுதான்" என்றும் யூசுஃப் அல்-ஒதைபா, தமது தூதரக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Sean Gallup/Getty Images

பயங்கரவாத அமைப்புகளாக தனது அண்டை நாடுகளால் குறிப்பாக முஸ்லிம் சகோதரத்துவ நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய குழுக்களுக்கு உதவி வழங்குவதை கத்தாரும் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால், அல் கய்தா அல்லது இஸ்லாமிய அரசு என்று அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவுக்கு உதவுவதாகக் கூறப்படுவதை அந்நாடு மறுத்துள்ளது.

இது பற்றி யுஏஇ வெளியுறவு அமைச்சர் கர்காஷ் பிபிசியிடம் கூறுகையில், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் தேடப்படும் நபர்கள் அல்லது நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் என்று ஐக்கிய அரபு அமீரகத்தால் குற்றம்சாட்டப்பட்ட 59 தனி நபர்கள் மற்றும் 12 அமைப்புகள் இடம்பெற்ற பட்டியலை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஏற்றுக் கொண்ட உடன்பாட்டுடன் கத்தாரின் நிலை முரண்பட்டுள்ளது என்கிறார்.

அந்த பட்டியல் மதிப்பானது என கத்தார் ஒப்புக் கொள்கிறதா, அந்த பட்டியல் மறுஆய்வு செய்யப்பட்டு, சில சட்டத்திருத்தங்களை செய்து பட்டியலில் உள்ளவர்களை பிடிக்க உரிய நடைமுறை மேற்கொள்ளப்படுமா என்பதை கத்தாரிடம் நாங்கள் அறிய விரும்புகிறோம் என்கிறார் அவர்.

கடந்த மாதம் அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ள கோரிக்கைகளை கத்தார் ஏற்றுக் கொண்டு சர்வதேச கண்காணிப்புக்கு உடன்படாதவரை அந்நாட்டை அண்டை நாடுகள் மாதக்கணக்கில் புறக்கணிப்பது தொடரும் என்று கர்காஷ் தெரிவித்தார்.

நட்பு நாடுகளின் கவலையை உணர்ந்துள்ளோம் எனக் கூறும் அவர், 300 பில்லியன் அமெரிக்க டாலர் வரை (230 பில்லியன் பவுண்ட்) வைத்துள்ள முதன்மை நிதிப்பங்காளராக உள்ள கத்தார், ஜிகாதி நோக்கத்துக்கான முதன்மையான நிதிப் பங்காளராக உள்ளது. அதன் செயல்பாட்டால் நாங்களும் காயம் அடைந்துள்ளோம். உலகமும் காயம் அடைந்துள்ளது என்று கர்காஷ் கூறினார்.

ஆனால், தங்களுடன் மட்டுமே தொழில் செய்ய வேண்டும் அல்லது கத்தாருடன் மட்டும் தொழில் செய்ய வேண்டும் என தொழில் நிறுவனங்களிடம் வலியுறுத்தி, கத்தார் புறக்கணிப்பை நான்கு நாடுகளும் தீவிரமாக்காது என்று கர்காஷ் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :