67 வயது பெண்ணின் கண்ணில் 27 காண்டாக்ட் லென்ஸ்கள்: அறுவை சிகிச்சையில் நீக்கம்

பிரிட்டனில் உள்ள சோலிஹுல் மருத்துவமனைக்கு வழக்கமான கண்புரை சிகிச்சைக்காக வந்த 67 வயது பெண்ணொருவரின் கண்ணில் இருந்து 27 காண்டாக்ட் லென்ஸ்களை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை BMJ
Image caption காண்டாக்ட் லென்ஸ்கள் இருந்த தொகுப்பு

இப்பெண்ணின் கண்ணில் நீல நிறமான ஒரு பொருள் போன்று தென்பட்டது. ஆழமாக சோதனை செய்து பார்த்தபோது, அது 17 காண்டாக்ட் லென்ஸ்கள் அடங்கிய கடினமான படிவம் என்பதும், கண்ணில் உள்ள திரவத்துடன் ஒட்டிக்கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

பின்னர் இது ஆய்வு செய்யப்பட்டதில் இப்பெண்ணின் கண்ணில் மேலும் 10 காண்டாக்ட் லென்ஸ்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

பயன்படுத்திய பிறகு எறிந்துவிடக்கூடிய காண்டாக்ட் லென்ஸ்களை 35 ஆண்டுகளாக அவர் அணிந்திருந்தார் என்றும் அதனால் அவருக்கு எவ்வித எரிச்சலும் ஏற்படவில்லை என்றும் பிஎம்ஜே எனப்படும் பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையில் வெளியான அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இப்பெண்ணின் கண்ணில் இருந்த காண்டாக்ட் லென்ஸ்கள் நீக்கப்பட்ட பிறகு அவர் மேலும் நிம்மதியாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.

'கண்ணில் எந்த எரிச்சலும் ஏற்படவில்லை'

இதுகுறித்து கண் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சியாளராக உள்ள ரூபல் மோஜாரியா ஓபோமெட்ரி மருத்துவ சஞ்சிகையிடம் தெரிவிக்கையில் ''இதுபோன்ற ஒரு விஷயத்தை இதற்கு முன்பு நாங்கள் யாரும் பார்த்ததில்லை. மிகவும் கடினப் பொருளாக அது இருந்தது. அதன் உள்ளே 17 காண்டாக்ட் லென்ஸ்கள் ஒன்றாக இணைந்து இருந்தது'' என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ''பொதுவாக இதுபோன்ற விஷயத்தில் நோயாளியின் கண்ணில் எரிச்சல் ஏற்படும். ஆனால், இதுபோன்ற எந்த ஒரு எரிச்சலையும் இப்பெண் உணரவில்லை என்பது எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது'' என்று தெரிவித்தார்.

இது குறித்து அறிந்த இப்பெண் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ரூபல் மோஜாரியா மேலும் கூறினார்.

தனது கண்ணில் ஏற்பட்ட அசௌகரியம் வயது மற்றும் ஈரப்பசையற்ற கண்ணால் ஏற்பட்டிருக்கலாம் என்று அப்பெண் கருதியுள்ளார்.

காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டியது:

  • கண்களில் காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் அவர்களுக்கு கூறப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரம் லென்ஸ் அணியக்கூடாது.
  • ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்கு மேலாக காண்டாக்ட் லென்ஸ் அணியக்கூடாது. தூங்கும்போது ஒரு போதும் காண்டாக்ட் லென்ஸ் அணியக்கூடாது.
  • காண்டாக்ட் லென்ஸ் அணிவதற்கு முன் கண் அலங்காரம் எதுவும் செய்யக்கூடாது.
  • கண்ணில் தொற்று ஏற்படும் ஆபத்தை குறைக்க காண்டாக்ட் லென்ஸை முறையான காலகட்டத்தில் மாற்றிட வேண்டும்.
  • கண்கள் சிவப்பாக தோன்றினாலோ, கண்களில் வலி அல்லது பார்வை குறைவு ஆகியவற்றை உணர்ந்தாலோ கண் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
  • மேலும் காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் அவர்களுக்கு கூறப்பட்ட காலகட்டத்தில் முறையாக கண் பரிசோதனை செய்யவேண்டும்.
  • காண்டாக்ட் லென்ஸ் அணிவது தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால், கண் மருத்துவரை ஆலோசிக்கும் முன்பு அவற்றை நீக்கிட வேண்டும்.

பிற செய்திகள்:

சௌதி: மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண்ணால் பரபரப்பு

'பேச்சாற்றல், நீண்ட அரசியல் அனுபவம், சர்ச்சை கருத்துக்கள்' - வெங்கைய நாயுடு யார்?

காபி குடிப்பதால் நீண்ட காலம் வாழ முடியுமா?

மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை சாத்தியமா?

கின்னஸ் சாதனையை முறியடிக்க நீச்சல் வீரர்கள் நிர்வாண ஓட்டம்

சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா? கேள்வி எழுப்பியதால் டிஐஜி ரூபா பணியிட மாற்றமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்