கொல்லப்பட்ட 8 வயது சிறுமி: குற்ற உணர்வில் சகோதரர்கள்

  • 19 ஜூலை 2017
கொல்லப்பட்ட 8 வயது சிறுமி சாரா பெய்ன் : குற்ற உணர்வில் சகோதரர்கள் படத்தின் காப்புரிமை PA
Image caption ராய் வைட்டிங் என்னும் குழந்தைகள் மீது பாலியல் ஈர்ப்பு கொண்ட ஒரு நபரால், சாரா பெய்ன் 2000-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

தங்கள் தங்கையைக் காப்பாற்ற முடியாமல் போனது தங்களுக்குக் குற்ற உணர்வைத் தருவதாக கொலை செய்யப்பட்ட பிரிட்டன் பள்ளி மாணவி சாரா பெய்னின் சகோதரர்கள் கூறியுள்ளனர்.

எட்டு வயது மாணவியான சாரா பெய்ன், ராய் வைட்டிங் என்னும் குழந்தைகள் மீது பாலியல் ஈர்ப்பு கொண்ட ஒரு நபரால் 2000-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

வைட்டிங்கால் தூக்கிச் செல்லப்படுவதற்கு முன்பு அவள் தங்களுக்கு முன்னர் ஓடிக்கொண்டிருந்தாக சேனல் 5 தொலைக்காட்சியிடம் லூக் மற்றும் லீ பெய்ன் ஆகியோர் தெரிவித்தனர்.

"இன்னும் அதிக வேகமாக நான் ஓடியிருந்தால், அவளைப் பிடித்திருக்கலாம் என்று என்னை நானே சில ஆண்டுகள் தாக்கிக்கொள்வேன்," என்று லீ கூறினார்.

மேற்கு சஸக்ஸ் உள்ள கிங்ஸ்டன் கோர்ஸ் பகுதிக்கு ஒரு நாள் வெளியே சென்றிருந்தபோது தங்களிடம் மற்றும் தங்கள் இன்னொரு சகோதரி சார்லட் ஆகியோரிடமிருந்து விலகி அந்த வயல்வெளியின் முடிவிலுள்ள ஒரு சாலையை நோக்கி சாரா ஓடினாள் என்று லூக் மற்றும் லீ ஆகியோர் கூறினர்.

அதன் பின்னர் அவள் உயிருடன் காணப்படவில்லை. அவளை வாகனத்தில் கடத்திச் செல்லும்போது வைட்டிங் அவர்களைப் பார்த்து சிரித்ததை அந்த சகோதரர்கள் நினைவுகூர்கிறார்கள்.அப்போது 12 வயதாகியிருந்த லூக், தன் தங்கையைக் காப்பாற்ற முடியும் என்னும் எண்ணம் தன்னை மிகுந்த குற்ற உணர்வுக்கு ஆளாக்குவதாகக் கூறினார்.

படத்தின் காப்புரிமை PA
Image caption கொலையாளி ராய் வைட்டிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த சம்பவம் தன்னை மிகவும் அச்சுறுத்துவதாகக் கூறும் அவர், "நான் நன்றாகத் தூங்குவதில்லை. இரவுகளில் நான் அச்சத்தில் மூழ்கியுள்ளேன். ஏனெனில், இது நீயும் உனது எண்ணங்களும் மட்டுமே," என்கிறார்.

ஒரு சிறிய ரக கை துப்பாக்கி ஒன்றை வாங்கிய, மறைந்த அவரது தந்தை மைக்கேல், வைட்டிங் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் தாம் என்ன செய்யவுள்ளார் என்பது குறித்துப் பேசியுள்ளார்.

சாராவின் தோழிகளைப் பார்க்கும்போது, "அவள் இப்போது உயிருடன் இருந்தால் எங்கு இருப்பாள், என்ன செய்து கொண்டிருப்பாள், அவள் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதில் ஜொலித்திருப்பாள்," என்று தான்நினைப்பதாக லூக் கூறினார்.

படத்தின் காப்புரிமை PA
Image caption லீ, சார்லட் மற்றும் லூக் ஆகியோருக்கு அவர்கள் சகோதரி சாரா கடத்தப்பட்டபோது 13, ஆறு மற்றும் 12 வயதே ஆகியிருந்தது.

அப்போது 13 வயாதாகியிருந்த லீ, கடத்திய சில நொடிகளில், வைட்டிங் அவனுடைய வாகனத்திலிருந்து தங்களை அவலமான முறையில் பார்த்து, சிரித்தவாறு கைகளை அசைத்ததை நினைவுகூர்கிறார்.

தன் தங்கை இருந்த இடத்திலுருந்துதான் 30 நொடிகள் தாமதமாக இருந்ததாகக் கூறிய லீ, அவள் ஒளிந்து கொண்டிருப்பதாகவே ஆரம்பத்தில் நினைத்ததாகக் கூறுகிறார்.

அந்த இழப்பிலிருந்து தன்னால் எப்போதும் மீண்டு வர முடியாது என்கிறார் லீ.

அவர்கள் குடும்பம் சர்ரேயில் உள்ள ஹெர்ஷாமில் வசிக்கிறது. அவர்கள் தாயான சாரா பெய்ன் வைட்டிங்கை முதன் முதலாக நீதிமன்றத்தில் பார்த்தபோது "அவர் ஒரு கொடூரமானவர் அல்ல. ஆனால் சோகமும் தனிமையும் நிறைந்த ஒருவர்," என்பதை உணர்ந்ததாகக் கூறினார்.

2001-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வைட்டிங், குறைந்தது 40 ஆண்டுகளாவது சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.

சாரா பெய்ன்: ய மதர்ஸ் ஸ்டோரி (Sarah Payne: A Mother's Story) என்னும் ஆவணப் படத்திற்காக அவர்கள் குடும்பம் சேனல் 5-விடம் பேசியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்